1
சிங்கப்பூரில் உள்ள ஜூஸ் விற்பனை இயந்திரத்தில் (iJooz) இருந்த ஸ்ட்ரோவை நக்கி, பின்னர் அதையே மீண்டும் அதன் இடத்தில் வைத்த 19 வயதுடைய பிரான்ஸ் இளைஞருக்கு 600 சிங்கப்பூர் டொலர் (சுமார் 465 அமெரிக்க டொலர்) அபராதம் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிடியர் காஸ்பார்ட் ஓவன் மேக்சிமிலியன் (Didier Gaspard Owen Maximilien) என்ற இளைஞர், கடந்த மார்ச் 12ஆம் திகதி சிங்கப்பூரின் கோல்ட்ஹில் சென்டரில் (Goldhill Centre) அமைந்துள்ள iJooz ஜூஸ் விற்பனை இயந்திரத்தில் இருந்து பானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது, இயந்திரத்தில் இருந்த ஒரு ஸ்ட்ரோவை எடுத்த அவர், அதன் ஒரு பகுதியை நக்கிவிட்டு மீண்டும் அதே ஸ்ட்ரோவை பெட்டிக்குள் வைத்துள்ளார். இந்த முழு செயலையும் அவர் தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
பின்னர் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அவரது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த ஒருவர் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து ஊடக நிறுவனத்துக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, iJooz நிறுவனம் அந்த இயந்திரத்தில் இருந்த சுமார் 500 ஸ்ட்ரோக்களையும் அகற்றி, புதிய ஸ்ட்ரோக்களை பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, மேக்சிமிலியன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது வெறும் விளையாட்டுத்தனமான செயல் என்றும், தனது செயலுக்காக வருந்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசுத் தரப்பும், தற்காப்புத் தரப்பும் அவரது இளம் வயது மற்றும் சம்பவத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அபராதம் விதிப்பதே பொருத்தமான தண்டனையாக இருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவித்தன.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு வழங்கப்படும். எனினும், மேக்சிமிலியனின் தந்தை பிரான்ஸில் வசித்து வருவதாலும், சிங்கப்பூரில் அவருக்குப் பாதுகாவலர் யாரும் இல்லாததாலும், நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் மட்டுமே விதித்தது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றமாகக் கருதப்படும் இந்த குற்றத்துக்கு, சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மேக்சிமிலியனின் பெற்றோர் செலுத்த சம்மதித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.