ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் வெற்றி: தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து!
2010 முதல் 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா தலைமுறை ஆவர். தற்போது ஜென் இசட் போராட்டங்கள் கவனம் பெற்று வரும் வேளையில் ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற ஜென் ஆல்பா போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் கண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான மலய் சிங் பணிக்கு வந்த இரண்டே மாதங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
சாதி பாகுபாடு மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாகவே தங்களின் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய ஜென் ஆல்பா பள்ளி மாணவர்கள் அவரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்கக் கோரி 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்முறை
நேற்றைய தினம், கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் செய்ததோடு, இரண்டு பேருந்துகளில் சென்று துணை ஆணையர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.
உள்ளூர் தலைவர் பிங்கு பாண்டே என்பவர் மாணவர்களை அமைதிப்படுத்த முயன்றபோது வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரது வாகனத்தை அடித்து நொறுக்கினர். அவர் பாதுகாப்பு கோரி கண்டி காவல் நிலையத்திற்கு தப்பியோடிய நிலையில், காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்.
வெற்றி
மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகேஷ் சகாய் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தலைமை ஆசிரியர் மலய் சிங்கின் இடமாற்ற உத்தரவை அரசு ரத்து செய்து, அவரை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தியது.
ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து தலைநகர் ராஞ்சியில் ஜென் இசட் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 8 அன்று சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்கள் மீது காவல்துறை மற்றும் மத்திய படை தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்கு உள்ளாகியது.