டாஸ்மாக்கில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்வது தொடர்பான காணொளி புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) வெளியானது. இந்த நடைமுறை இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
‘மது குடிப்பவர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்கள் சமூக சீரழிவுக்கு வகை செய்யும்’ என பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் மதுபானம் மாநிலம் முழுவதும் உள்ள 43 டாஸ்மாக் கிடங்குகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இங்கிருந்து சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளுக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையைவிடக் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த புதிய நடைமுறை தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
’21 வயதுக்கு மேற்பட்டவர்’ என்பதை உறுதி செய்த பிறகே பிடித்த மதுவகையைத் தேர்வு செய்யும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என டாஸ்மாக் கூறுகிறது.
இணையதளத்தில் அருகே உள்ள கடைகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யும்போது மதுபான விற்பனைக் கடைகளின் இருப்பிடங்கள் காட்டப்படுகின்றன.
அதிகபட்ச சில்லறை விலையில் உள்ள அனைத்து வகை மதுபானங்களும் அதன் விலைகளும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. மதுபானத்தை வாங்குவதை உறுதி செய்த பிறகு ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு ரசீதை சேமித்து வைக்க வேண்டும்.
ரசீதில் உள்ள கியூ ஆர் கோடை கடையில் காண்பித்து ஸ்கேன் செய்ய வேண்டும். பிறகு மதுபானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ விமர்சனம்
பட மூலாதாரம், Vignesh/X
படக்குறிப்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்
கடந்த அ.தி.மு.க, தி.மு.க ஆகிய ஆட்சிக்காலங்களில் மதுபாட்டிலுக்குக் கூடுதல் விலை வைக்கப்படுவதாக நுகர்வோர் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ என்ற விமர்சனத்தை தனது பரப்புரையின்போது த.வெ.க தலைவர் விஜய் முன்வைத்தார்.
ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்கும் நடைமுறை தொடர்ந்தது.
அமைச்சர் கூறியது என்ன?
ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
“ஆன்லைன் மூலமாக விற்பனை என்பது இல்லை. நேற்று காணொளி வெளியில் வந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 6) அதை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்” எனக் கூறினார்.
“காணொளியை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை” எனக் கூறிய அமைச்சர் விக்னேஷ், “எங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக வெளியான வீடியோ வெளியில் வந்துள்ளது” என்கிறார்.
“ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை எப்படி உறுதி செய்வது” என எதிர்ப்பு எழுவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், “21 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் கொடுக்கக் கூடாது என்பது விதி. கடைக்குப் போகும்போது தான் தெரியும்” எனக் கூறினார்.
பணம் செலுத்தும் முறையாக இந்த திட்டம் உள்ளதாகக் கூறிய அவர், “சில கடைகளில் சில ஆலைகளில் இருந்து வரும் மதுபானம் மட்டும் விற்பதாக கூறினர். எந்தக் கடையில், எந்த மதுபானம் உள்ளது என்பதை வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்.
“ஆன்லைனில்தான் பணம் செலுத்தி வாங்க வேண்டுமா என சிலர் கேட்கின்றனர். அவர்கள் நேரில் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்” என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
அதிக தொகை வாங்கினால் என்ன தண்டனை?
கடந்த ஜூலை 24-ஆம் தேதி கூடுதல் பணம் வாங்குவது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை ஒன்றை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.
அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் மதுவை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது அபராதம் விதிக்கும் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்குப் பதிலாக புதிய அறிவுறுத்தல்கள் குறித்து சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, சில்லறை விலையைவிடக் கூடுதலாகப் பணம் பெறும் டாஸ்மாக் ஊழியர் மூன்றாவது முறையாகப் பிடிபட்டால் பணியில் இருந்து நீக்குவது என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலையைவிட (MRP) அதிக விலைக்கு மதுவை விற்பது முதல்முறை கண்டறியப்பட்டால் மேற்பார்வையாளர், விற்பனையாளர் ஊதியமின்றி ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
மீண்டும் பணியில் சேரும்போது, ‘குற்றத்தை செய்ய மாட்டேன்’ என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். தலைமை நிர்வாகத்தின் ஒப்புதலுடன் வேறொரு சில்லறை விற்பனைக் கடைக்கு அவர் இடமாற்றம் செய்யப்படுவார்.
இரண்டாவது முறை குற்றம் செய்தால் ஊதியமின்றி மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்குக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்.
மூன்றாவது முறை விதிமீறல் நடந்தால் துறைரீதியான விசாரணைக்குப் பிறகு பணியில் இருந்து நீக்கப்படுவார். பணியிடை நீக்கம், பணி நீக்கம் குறித்த விவரங்களை ஊழியரின் முதன்மைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
மது பாட்டிலுக்கு 1 ரூபாய் முதல் 9 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டால் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
அபராதத் தொகையில் 60 சதவீதம் ஊழியரிடம் இருந்தும் 40 சதவீதம் மேற்பார்வையாளரிடம் இருந்தும் வசூலிக்கப்படும்.
பத்து ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலிக்கப்பட்டால் 10,000 ரூபாய் நிலையான அபராதம் வசூலிக்கப்படும்.
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான சுற்றறிக்கை அமலில் உள்ள நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் மது விற்பனை நடைமுறையை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது’ என அரசியல் கட்சிகள் விமர்சனம்
‘மிக ஆபத்தான திட்டம்’ – அரசியல் கட்சிகள் விமர்சனம்
பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது. இது மது வணிகத்தையும் மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கவே செய்யும்’ என விமர்சித்துள்ளார்.
”தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகளில் அக்கறை காட்டுவதற்குப் பதிலாக மது வணிகத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல” என அன்புமணி கூறியுள்ளார்.
”மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்குச் சென்று வரிசையில் நிற்காமல் வாங்குவதற்கு வசதி செய்து கொடுப்பதால் மது வணிகம் அதிகரிக்கும்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு 717 மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
இதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அன்புமணி, ”இது மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதைச் சிதைக்கும் வகையில் ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வது அரசுக்கு பெருமை சேர்க்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை முன்வைத்துள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘ஆன்லைன் மூலம் மதுபானங்கள் முன்பதிவு என்ற தவறான முடிவை அரசு எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது” எனக் கூறியுள்ளார்.
”மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மது வாங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தி ஊக்குவிப்பதும் அதன்மூலம் அரசின் வருவாயைப் பெருக்க நினைப்பதும் சமூக நலனுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.