1
அமெரிக்காவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான விசா நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள “Duration of Status (D/S)” எனப்படும் முறைக்கு பதிலாக, இனி குறிப்பிட்ட காலவரம்புடன் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கப்படும்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, மாணவர்களுக்கான F விசா, பரிமாற்றப் பயணிகளுக்கான J விசா, மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசா ஆகியவை இனி கல்வி அல்லது பணிக்காலம் முழுவதும் தானாகவே செல்லுபடியாகாது.
புதிய நடைமுறையின் கீழ், பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பரிமாற்றப் பயணிகள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதேவேளை, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பொதுவாக 240 நாட்கள் வரை தங்க அனுமதி வழங்கப்படும். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இந்தக் காலவரம்பு 90 நாட்களாக மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்தும் அமெரிக்காவில் தங்க விரும்புபவர்கள், உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடம் விசா கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் புதிய அனுமதியுடன் நுழைய வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் தங்கும் காலத்தையும் சட்டபூர்வமான நிலையையும் திறம்பட கண்காணிக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் Federal Register-இல் வெளியிடப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்த பின்னர் அமலுக்கு வரும். 2025 ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.