• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

Byadmin

Jul 29, 2026


பாகிஸ்தானுக்கு எதிராக ட்ரினிடாட், டரூபா, ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நேற்று நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜஸ்டின் க்றீவ்ஸின் அசாத்திய சாதனையுடன் கூடிய 5 விக்கெட் குவியல்,  ஜேடன்  சீல்ஸின் 5 விக்கெட் குவியல் என்பன மேற்கிந்தியத் தீவுகளுக்கு 90 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றில் மேற்கிந்தியத் தீவுகள் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

க்றீஸ் அசாத்திய சாதனை

வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 40 விக்கெட்களையும் வீழ்த்திய இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்டின் க்றீவ்ஸ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அசாத்திய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் பெற்ற 311 ஓட்டங்களுக்கு  பாகிஸ்தான் பதிலளித்து துடுப்பெடுத்தாடியபோது ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.

அப்போது ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓவர்களில் 27 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் எடுக்காமல் இருந்தார்.

ஆனால், தனது 7, 8, 9, 10, 11ஆம் ஓவர்களில் ஓட்டம் எதனையும் கொடுக்காமல் அந்த ஐந்து ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாத்திய சாதனையை நிகழ்த்தினார். அந்த 5 ஓவர்களில் அவரது பந்துவீச்சுப் பெறுதி 5 – 5 – 0 – 5 ஆக இருந்தது.

மேலும், தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்கில் 2016இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்றோட் 4 தொடர்ச்சியான கன்னி ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தி படைத்த சாதனையை ஜஸ்டின் க்றீவ்ஸ் முறியடித்தார்.

தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜஸ்டின் க்றீவ்ஸ் பதிவு செய்த முதலாவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.

149 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய சாதனை ஒன்றைப் படைத்த முதலாவது பந்துவீச்சாளர் என்ற அபூர்வ சாதனையை க்றீவ்ஸ் நிலைநாட்டினார்.

இதேவேளை, போட்டியின் நான்காம் நாளான நேற்றைய தினம் பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் 211 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 40.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த இன்னிங்ஸில் மற்றொரு வேகபந்துவீச்சாளர் ஜேடன் சீல்ஸ் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை சுலபமாக்கினார்.

ஜஸ்டின் க்றீவ்ஸ், ஜேடன் சீல்ஸ் ஆகியோரைப் போன்றே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் அபாஸும் 5 விக்கெட்  குவியலைப் பதிவு செய்திருந்தார்.

வேகப்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் ஒன்றைக் குவித்து அசத்தினார்.

அவருக்கு முதலாவது இன்னிங்ஸில் பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய இமாம்-உல்-ஹக் அரைச் சதம் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அதன் முதல் இன்னிங்ஸில் ஷாய் ஹோப், கவெம் ஹெஜ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 311 (ஷாய் ஹோப் 92, கவெம் ஹொஜ் 84, ஷமர் ஜோசப் 23, மொஹம்மத் அலி 50 – 4 விக்., மொஹம்மத் அபாஸ் 63 – 3 விக்., குரம் ஷாஸாத் 66 – 2 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 282 (ஷான் மசூத் 109, இமாம்-உல்-ஹக் 63, பாபர் அஸாம் 23, ஜஸ்டீன் க்றீவ்ஸ் 27 – 5 விக்., கெமர் ரோச் 53 – 2 விக், ஷமர் ஜோசப் 58 – 2 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 181 (ஷமர் ஜோசப் 38, டேஜ்நாரேன் சந்தபோல் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 20,  மொஹம்மத்  அபாஸ் 22 – 5 விக்., மொஹம்மத் அலி 52 – 2 விக்., குரம் ஷாஸாத் 54 – 2 விக்.)

பாகிஸ்தான் – வெற்றி இலக்கு 211 ஓட்டங்கள் – 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 120 (பாபர் அஸாம் 58, மொஹம்மத் அபாஸ் 23, ஜேடன் சீல்ஸ் 20 – 5 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 12 – 2 விக்., கெமர் ரோச் 27 – 2 விக்.)

ஆட்டநாயகன்: ஜஸ்டின் க்றீவ்ஸ்.

 

By admin