பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், லாரா டினிஸ்
- பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்த செய்தியில் வன்முறை மற்றும் தற்கொலை தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
“என்னையும் என் மகனையும் கொன்றுவிடுவதற்கு ரூ.50,000 கொடுக்க முன்வந்தேன். ஆனால், அதில் ஒரு குழந்தை சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் மறுத்துவிட்டார்.”
“மக்களைக் கொல்ல வேண்டும் என்ற இந்த ஆசை எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். மற்றொரு நபர் வேதனைப்படுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் உணர்வு எனக்குப் பிடிக்கும்.”
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, பிரேசிலைச் சேர்ந்த ஒரு விவசாயி சாட்ஜிபிடியுடன் இவ்வாறான தகவல்களையும், பிற செய்திகளையும் பரிமாறிக்கொண்டார். இதில் தனது 8 வயது மகனைக் கொல்வது, மற்றவர்களைத் தாக்குவது, பின்னர் தற்கொலை செய்துகொள்வது ஆகியவற்றுக்கான திட்டங்கள் இருந்ததாக காவல்துறை கூறுகிறது.
பிபிசி நியூஸ் பிரேசில் பார்த்த இந்தச் செய்திப் பரிமாற்றங்கள் தான் அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தன.
இதுபோன்ற அறியப்பட்ட வழக்குகளில் ஒன்றான இந்தச் சம்பவத்தில், 36 வயதான அந்த நபரின் செய்திகளை சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் எஃப்.பி.ஐ -யிடம் தெரிவித்தது. இதையடுத்து, பிரேசில் அதிகாரிகளுக்கு எஃப்பிஐ தகவல் தெரிவித்தது.
அவர் ஒரு சாட்பாட்டிடம் “அர்த்தமில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்ததாகவும்”, எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.
எந்தக் குற்றமும் நடைபெறுவதற்கு முன்பே ஏஐ சாட்பாட்டுகள் சாத்தியமான அச்சுறுத்தலை அடையாளம் காணும்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி, காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் ஏஐ நிறுவனங்களுக்கு அதிகரித்து வரும் சவாலை இந்த விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘அந்த தளம் அளித்த அனைத்தும் உறுதி செய்யப்பட்டன’
அவரது மகனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, அந்த நபரின் பெயரை பிபிசி வெளியிடவில்லை. அவர் ஜூன் 19 அன்று சாவ் கேப்ரியல் டா பால்ஹாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பிரேசில் நீதித்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றப் பிரிவு இந்த வழக்கை காவல் துறைக்கு அனுப்பியிருந்தது.
“இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாகவும், அந்தத் தந்தை தனது மகனை 20-ம் தேதிக்குள் கொல்லத் திட்டமிட்டதாக கூறப்பட்டதாலும், இதற்கு முன்னுரிமை அளித்தோம்” என்று எஸ்பிரிடோ சாண்டோவின் சைபர் குற்றக் காவல் நிலையத்தின் தலைவரான பிரென்னோ ஆண்ட்ரேட் கூறினார்.
ஆண்ட்ரேட்டின் கூற்றுப்படி, தனது மகனுக்காக குழந்தை பராமரிப்புத் தொகை செலுத்துவதைத் தவிர, சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கு மகனுடன் பெரியளவில் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தத் தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது தொடர்பான மனக்கசப்பு, இந்தக் குற்றத் திட்டத்துக்கான ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
அவரது சொத்துகளைச் சோதனையிட்டபோது, அடையாளம் காணப்படாத பொருட்கள் அடங்கிய நான்கு பாட்டில்களும், முடிச்சுப் போடப்பட்ட ஒரு கயிறும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்ததற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடத்தக்கூடிய தாக்குதல்கள் குறித்தும் சந்தேகிக்கப்படும் அந்த நபர் சாட்ஜிபிடியுடன் பேசியதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
பிபிசி பார்த்த ஒரு செய்தியில், “நான் போதைப்பொருள் விற்பனை செய்யும் இடத்துக்குச் சென்று சுமார் நான்கு குற்றவாளிகளைக் கொன்றால், நகரத்தில் பிரபலமாகிவிடுவேன். அதன் பிறகு, ஒன்று அல்லது இரண்டு காவல்துறை அதிகாரிகளைக் கொன்றுவிட்டால் போதும். என்னால் அமைதியாகச் சாக முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு செய்தியில், “ஒரு துப்பாக்கியை வாங்கி, காவல்துறையை நோக்கிச் சுடலாம் என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் பதிலடி கொடுத்து என்னைக் கொன்றுவிடுவார்கள். அது எனக்கு நன்றாக இருக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.
அவர் ரிசின் உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும், கேள்விகளை வேறு விதமாகக் கேட்டு சாட்ஜிபிடியின் பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்க்க முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

“தளத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த அனைத்தும், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது உறுதிப்படுத்தப்பட்டன” என்று ஆண்ட்ரேட் கூறினார்.
தனது மகனுக்கு தீங்கு விளைவிக்க நினைத்ததாகக் கூறப்படுவதை அந்த நபர் மறுக்கிறார்.
54 நாட்கள் காவலில் இருந்த அவர், விசாரணையில் ஏற்பட்ட தாமதங்களால் ஆகஸ்ட் 13 அன்று விடுவிக்கப்பட்டார். அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மின்னணு கண்காணிப்புக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டுள்ளார். தனது மகனையோ அல்லது அந்தக் குழந்தையின் தாயையையோ தொடர்புகொள்ள தடை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகிக்கப்படும் அந்த நபரின் செல்போனை ஆய்வு செய்து வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மீதான தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சாட்ஜிபிடியுடனான உரையாடல்களில் அவர் கூறியதாகக் கூறப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டாரா என்பதையும், அதில் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்புகொண்டாரா என்பதையும் கண்டறிவதே இதன் நோக்கம்.
ஒரு குற்றத்தைப் பற்றிய சிந்தனை மற்றும் அதற்கான தயாரிப்பு என்ற நிலையில் இருந்து, அதைச் செயல்படுத்தும் நிலைக்கு சந்தேகிக்கப்படும் அந்த நபர் சென்றாரா என்பதைத் தீர்மானிக்க இத்தகைய ஆதாரங்கள் உதவக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். பிரேசிலின் குற்றவியல் சட்டத்தின்படி, பொதுவாக ஒரு குற்றம் செயல்படுத்தப்படும் கட்டத்தில் தான் குற்றம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர் தரப்பு வாதிடுகிறது.
“ஏஐயிடம் பேசி அர்த்தமில்லாத விஷயங்களைச் சொல்வதே ஒரு குற்றம் என்றால், அனைவரும் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்று வழக்கறிஞர் பெட்ரோ பாலோ பெஸ்ஸி பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தெரிவித்தார்.

ஆதாரங்கள் தொடர்பான பிரச்னை
ஏஐ நிறுவனங்கள் தங்கள் பயனர்கள் குறித்து காவல்துறையிடம் புகாரளித்த சம்பவங்கள் அரிதானவை என்று கருதப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம், தனது முன்னாள் காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வதற்கான திட்டங்களைப் பகிர்ந்துகொண்ட 25 வயதான ஃபுளோரிடா நபர் குறித்து எஃப்பிஐ-யிடம் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எஸ்பிரிடோ சாண்டோ காவல்துறையைச் சேர்ந்த ஆண்ட்ரேட் கூறுகையில், அந்த விவசாயியின் வழக்கு, அந்த மாநிலத்தில் பெறப்பட்ட இதுபோன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட முதல் எச்சரிக்கையாகும். பிரேசிலில் இதுபோன்ற மூன்றாவது வழக்கு இதுவாகும்.
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்கள் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்களா என்பதை காவல்துறை கண்டறிய முயற்சிப்பதற்கான மற்றொரு வழியாக இது உள்ளது” என்று ஆண்ட்ரேட் கூறினார்.
ஆனால், ஏஐ நிறுவனங்களிடமிருந்து வரும் இதுபோன்ற தகவல்கள் விசாரணை நடைமுறையில் எந்த வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. அதில், இந்தச் செய்திகளை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் அடங்கும்.
ஓபன்ஏஐ நிறுவனம் அந்தப் பயனரின் விவரங்களையும், அவர் அனுப்பிய செய்திகளையும் வழங்கியதாகவும், ஆனால் சாட்ஜிபிடி அளித்த பதில்களை வழங்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
“பதில்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்கிறார் ஆண்ட்ரேட்.
இது ஆதாரங்கள் தொடர்பான சிக்கலை உருவாக்குகிறது என்கிறார் குற்றவியல் வழக்கறிஞர் மைரா பெர்னாண்டஸ். ஏனெனில், அந்தச் செய்திகளின் சூழல் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.
“அது ஒரு சிறிய பகுதியாக மட்டும் இருக்கக்கூடாது. அது திருத்தப்பட்ட வடிவமாகவும் இருக்கக்கூடாது. முழு உரையாடலும் இருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேகிக்கப்படும் அந்த நபருக்கும் சாட்ஜிபிடிக்கும் இடையிலான முழு உரையாடலைப் பார்ப்பது, பயனர் கூறியதற்கு சாட்பாட் வெறுமனே பதிலளித்ததா அல்லது அந்த விவாதத்தை அது தீவிரமாக வடிவமைத்ததா என்பதைத் தீர்மானிக்க உதவக்கூடும் என்றும் பெர்னாண்டஸ் கூறினார்.
பிபிசி நியூஸ் பிரேசிலுக்கு அளித்த அறிக்கையில், சாட்ஜிபிடியின் பதில்கள் ஏன் பகிரப்படவில்லை என்பதை விளக்க நிறுவனம் மறுத்துவிட்டது. “மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய நம்பகமான மற்றும் உடனடி பாதிப்பு அபாயத்தை” கண்டறியும் போது, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கக்கூடும் என்று மட்டுமே நிறுவனம் கூறியது.
கடந்த ஆண்டு ஃபுளோரிடா ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், சாட்ஜிபிடி தொழில்நுட்பம் ஏதேனும் பங்கு வகித்ததா என்பது குறித்து ஃபுளோரிடா அரசு கடந்த ஏப்ரல் மாதம் ஓபன்ஏஐ நிறுவனத்துக்கு எதிராக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஓபன்ஏஐ நிறுவனம் மறுத்துள்ளது. சாட்ஜிபிடி ஏற்கெனவே பொதுவெளியில் கிடைத்த தகவல்களையே வழங்கியதாகவும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
‘செயல்படுவதற்கான சட்டபூர்வ கடமை’
பெர்னாண்டஸ் கூறுகையில், பிரேசில் வழக்கில் பாதிக்கப்படக் கூடியதாகக் கூறப்படும் நபர் அடையாளம் காணக்கூடிய ஒரு குழந்தையாக இருந்தது, இந்தத் தகவல் காவல்துறைக்கு அனுப்பப்பட்டதற்கான காரணத்தை விளக்க உதவுகிறது. இருப்பினும், ஏஐ மதிப்பீடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொள்வதை வழக்கமான நடைமுறையாக மாற்றுவதற்கு எதிராக அவர் எச்சரிக்கிறார்.
உண்மையான அச்சுறுத்தல்களை, உணர்ச்சிவசப்பட்டு கூறப்படும் கருத்துகள், கற்பனைகள் அல்லது தூண்டிவிடும் நோக்கில் கூறப்படும் அறிக்கைகளிலிருந்து வேறுபடுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்று அவர் குறிப்பிடுகிறார் .
டிஜிட்டல் சட்ட நிபுணரும் பேராசிரியருமான பாட்ரிசியா பெக், ஏஐ-யின் பங்கு உள்ளடக்கத்தை உருவாக்கும் கருவி என்பதில் இருந்து, “ஆபத்தான நடத்தையுடன் தொடர்புடைய சாத்தியமான வடிவங்களைக் கண்டறியும் திறன் கொண்ட அமைப்பாக மாறி வருவதை இந்த வழக்கு பிரதிபலிப்பதாக” கூறுகிறார்.
சில சூழ்நிலைகளில் ஏஐ நிறுவனங்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ஒரு உரையாடல் வெறுமனே ஒரு கருத்தியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இல்லாமல், அடையாளம் காணக்கூடிய ஒரு பாதிக்கப்பட்ட நபர், கிடைக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் உடனடி ஆபத்து ஆகியவற்றுடன் கூடிய ஒரு உறுதியான அச்சுறுத்தலைக் குறிக்கத் தொடங்கும்போது, செயல்படுவதற்கான நெறிமுறை ரீதியான மற்றும் சில சூழ்நிலைகளில் சட்டப்பூர்வமான கடமை உருவாகிறது” என்று பாட்ரிசியா கூறுகிறார்.
எனினும், பெர்னாண்டஸைப் போலவே, இவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் அவர் எச்சரிக்கிறார்.
“ஏஐ தொடர்பான நெறிமுறைகள் ‘எல்லாவற்றையும் கண்காணிப்போம்’ என்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக, ‘ஆபத்து அதை நியாயப்படுத்தும்போது மட்டுமே தலையிடுவோம்’ என்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்”என்று கூறும் பாட்ரிசியா,
“எதையும் செய்யாமல் இருப்பதையும், அளவுக்கு அதிகமான கண்காணிப்பையும் தவிர்ப்பதே சவால்” என்கிறார் அவர்.
முக்கிய குறிப்பு
- மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
- சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
- மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு