6
அவுஸ்திரேலியா நாட்டின் புகழ்பெற்ற எழுத்து இலக்கிய தமிழ் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா, இலண்டன் மாநகரில் கடந்த 29/8/26 அன்று சனிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இலண்டன் சைவ முன்னேற்ற சங்க திருமிகு சிவா தம்பு அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் எழுதிய போர்க்களத்தில் பேனாக்கள், ஈழப் போரில் எழுத்தாயுதம், உக்ரேனியப் போரும் ஊடக திரிபும், அரபு வசந்தம் என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவில் பெரும் திரளான இலண்டன் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூல் வெளியீட்டு விழாவை திரு யுவராஜா ரூபராஜ் தொகுத்து வழங்கினார்.
நூல் ஆய்வினை திரு. இரா. ஜனகன், திருமதி புனிதா கணேஷ்வரன், திரு. பா நடேசன், திரு. நவஜோதி ஜோக ரத்னம், திரு. கிருபாகரன் ஆகியோர் செய்தனர். சட்டன் நகர சபை உறுப்பினர் திரு. பரம் நந்தா, ஹரோ நகர சபை உறுப்பினர் திரு. குகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவின் நிறைவில் நூலாசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
தலைமை உரையாற்றிய திரு சிவா தம்பு அவர்கள் பேசும்போது, சமுதாயத்திற்காகப் படைக்கும் ஒரு படைப்பாளி ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் எழுதிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளை வாழ்த்தி உரையாற்றி, முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளும் கிடைத்த சந்தர்ப்பத்திற்காக பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். 14 வயதிலேயே தன் தாய் மண்ணுக்காக எழுதத் தொடங்கிய ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள், இன்று, நாற்பது ஆண்டுகளைக் கடந்த தனது எழுத்துப் பயணத்தில், ஒரு தனிமனிதனாக மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் நினைவுகளையும், வரலாற்றையும், விடுதலைக்கான போராட்டங்களையும் பதிவு செய்யும் படைப்பாளியாக உயர்ந்து நிற்கின்றார்.
ஐந்து கண்டங்களில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைத் தேடித் திரிந்து, ஆராய்ந்து, வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்தே இந்த நான்கு நூல்களையும் உருவாக்கியிருக்கிறார். இவை வெறுமனே படித்துவிட்டு மறந்துவிடும் நூல்கள் அல்ல.
வரலாற்றைத் தேடுபவர்களுக்கும், அறிய விரும்புபவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இவை அரிய ஆவணங்கள்.
ஒரு தலைமுறை அனுபவித்ததை அடுத்த தலைமுறை அறிய வேண்டும். ஒரு காலத்தின் போராட்டங்கள் மறக்கப்படாமல் வரலாற்றில் பதிய வேண்டும். அதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகவே இந்நூல்களை நான் பார்க்கிறேன். தமிழை நாம் காப்பாற்றினால் தமிழ் நம்மை காப்பாற்றும் நமது மொழியையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது நமது கடமையாகும். நாம் நம் தமிழைக் காத்தால், தமிழ் நம்மை காத்து வளரச் செய்யும் என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.