பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi/Facebook
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷுடன் தொடர்புடைய நான்கு இடங்களிலும், அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்குடன் தொடர்புடைய இரண்டு இடங்களிலும் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது.
திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஷின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டனர்.
இந்த வழக்கு எப்படித் தொடங்கியது?
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அரசகுமார், பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
அரசகுமார் கைது செய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது?
இந்த வழக்கில் அரசகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் விசாரணையை விரிவுபடுத்தினர். தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலகங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்த தகவலின்படி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
விசாரணையின் ஒரு பகுதியாக, “குற்றம் சாட்டப்பட்டோருடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகளும், இந்த வழக்கில் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவரான முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளும் கண்டறியப்பட்டு அவற்றின் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக” போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்பில் மகேஷின் பெயர் எப்படி வந்தது?
அரசகுமார் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசகுமார் தலைமையிலான தனியார் பள்ளிகள் சங்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில், அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Anbil Mahesh Poyyamozhi/Facebook
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் பங்கு குறித்து விசாரணை நடத்தும் கட்டத்தை மத்திய குற்றப் பிரிவு எட்டியுள்ளது.
போலீசாரின் கூற்றுப்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே அவருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அன்பில் மகேஷ் வழக்கறிஞர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பா?
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி மற்றும் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதாக தனியார் பள்ளிகள் அமைப்பின் நிர்வாகி கே.ஆர். நந்தகுமார் முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்திருந்தார். பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகள் துறை அதிகாரிகளால் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
மேலும், நந்தகுமாருக்கு ரூ.50 கோடி இழப்பீடு கோரி அன்பில் மகேஷ் சட்ட நோட்டீஸ் அனுப்பியிருந்தார். திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஷின் வீட்டில் சோதனை நடைபெறுவதைத் தொடர்ந்து ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அங்கு திரண்டனர்.
முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான கே.என். நேருவும் அங்கு சென்றார். இதனிடையே, அன்பில் மகேஷின் வழக்கறிஞர்களை வீட்டுக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்ததாகக் கூறி திமுகவினர் வீட்டுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
‘மடியில் கனம் இல்லை; அஞ்சமாட்டோம்’ – அன்பில் மகேஷ்
இந்நிலையில், சோதனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், போலீசாரின் சோதனைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகத் தெரிவித்தார்.
தனது வீட்டில் இருந்த அனைத்து அலமாரிகள் மற்றும் அடுக்குகளிலும் போலீசார் சோதனை நடத்தியதாகவும், கடந்த காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் முந்தைய திமுக அரசின் சாதனைகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Dr. Anbil Mahesh/X
செப்டம்பர் 18ஆம் தேதி போலீசார் முன்பு ஆஜராகுமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். சோதனைக்குத் தாம் அளித்த ஒத்துழைப்பை போலீசார் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
“மடியில் கனம் இல்லை” என்று கூறிய அன்பில் மகேஷ், இந்தச் சோதனையால் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
தான் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை ஹிட்லர் என்று விமர்சித்ததாகவும், மாநில கருவூலம் காலியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் ரூ.1,200 கோடியை செலவிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார். மேலும், சில கோடி ரூபாய் செலவிட்டால் ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தை மாற்றியமைத்து மீண்டும் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம் என்றும் தான் கூறியதாகத் தெரிவித்தார். தேர்தல் பணிகளின்போது தாராபுரத்தில் பேசியபோது, திமுக தேர்தலில் வெற்றி பெறும் என்றும், தவெகவினர் முகத்தில் கரி பூசுவோம் என்றும் தான் கூறியதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்தக் கருத்துகளுக்குப் பிறகே சோதனை நடைபெற்றிருப்பதால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் குற்றம்சாட்டினார். கடந்த 75 ஆண்டுகளாக திமுக இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் கூறினார்.
அதோடு, “இதுவொரு சோதனை மட்டுமே. விசாரணை எதுவும் நடைபெறவில்லை” என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இந்த வழக்கை முறையாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கூற வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். “நான் குற்றவாளி இல்லை, வேறு யாரோ இலக்கு” என்று கூறி வேறு நபர்களின் பெயர்களை வெளியிடுமாறு தம்மிடம் கேட்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்ததுடன், குற்றம் செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
திமுக நிர்வாகிகளை தவெக அரசு குறிவைப்பதாகக் கூறிய அன்பில் மகேஷ், சட்டப்பேரவையில் பேசிய மறுநாளே கே.என். நேருவின் சொத்துகளில் சோதனை நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். இது தங்களை அச்சுறுத்துவதற்காகக் கூறப்படவில்லை என்றும், ஆட்சியின் இயலாமையையே காட்டுகிறது என்றும் அன்பில் மகேஷ் கூறினார். திமுகவில் தன்னைப் போன்ற பலர் இருப்பதால், தன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் தவெக அரசால் அரசியல் ஆதாயம் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சுமார் 20 போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாகவும், காலை 7.40 மணிக்குத் தொடங்கிய சோதனை சுமார் எட்டு மணிநேரம் நடைபெற்றதாகவும் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், DMK
மு.க.ஸ்டாலின் கண்டனம்
அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தலைமைச் செயலகம் முன்பாக நடத்திய போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாடு, ராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின்போது அரசுப் பேருந்து ஓட்டுநர் கொல்லப்பட்ட சம்பவம், அயனாவரத்தில் பெண் காவலரிடம் தவெக நிர்வாகி ஒருவர் நடந்துகொண்ட விதம் உள்ளிட்ட பிரச்னைகளை முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் லண்டனில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக” விமர்சித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
மேலும், “மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே அன்பில் மகேஷ் மீது சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும்” அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், இதைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, “எதிர்க்கட்சியினர் மீது சோதனை நடத்துவதால் மக்களின் கோபத்தைத் தணிக்க முடியாது. அன்பில் மகேஷ் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் நிலைக்காது” என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், DIPR
தவெக கூறியது என்ன?
இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சோதனை சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நடக்கிறது. இதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகார்களின் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது. ஏற்கெனவே அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தப்படுகிறது,” என்று பழ. செல்வகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் தற்போது புகாரளிக்க முன்வந்தமைக்கு முந்தைய திமுக ஆட்சியில் அவர்களுக்கு இருந்த அச்சமே காரணம் என்றும் அவர் கூறினார்.
“முந்தைய திமுக ஆட்சியில் அன்பில் மகேஷ் மிகவும் அதிகாரம் மிக்கவராக இருந்த காரணத்தால், தனியார் பள்ளி நிர்வாகிகளால் புகார் அளிக்க முடியவில்லை. தற்போது ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று தவெக அரசு உறுதி அளித்துள்ளதால், அவர்கள் துணிந்து புகார் அளித்துள்ளனர். ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று பழ. செல்வகுமார் கூறினார்.
தற்போது நடைபெறும் சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை விவரங்கள் இந்த வழக்கின் விசாரணையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்பதும் அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு