• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

தனியார் வாகனத் தரிப்பிடங்களின் அநியாயக் கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய விதிமுறைகள் அறிவிப்பு

Byadmin

Oct 20, 2026


இங்கிலாந்தில் தனியார் வாகனத் தரிப்பிட நிறுவனங்களால் சாரதிகள் மீது விதிக்கப்படும் அநியாயமான அபராதக் கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களின் கடுமையான கட்டண விதிமுறைகளால் வாகனச் சாரதிகள் அநீதியான முறையில் தண்டிக்கப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, பிரதமர் அண்டி பர்ன்ஹாம் இந்த புதிய திருத்தங்களை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தனியார் வாகனத் தரிப்பிட கட்டணங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உரிமையும் கூடுதல் சலுகைக் காலமும் சாரதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

வாகனத்தை நிறுத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க 5 நிமிட கால அவகாசமும், வாகனத் தரிப்பிடத்தை விட்டு வெளியேறுவதற்கு அபராதமின்றி 10 நிமிட கால அவகாசமும் புதிய விதிகளின் கீழ் சாரதிகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழியை அறிய வாகனத்தை நிறுத்துதல் போன்ற தவிர்க்க முடியாத தவறுகள், திடீர் வைத்திய அவசர நிலைகள், பற்றுச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பழுதடைந்தமை மற்றும் வாகனக் கோளாறுகள் போன்ற சாரதிகளின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களுக்காக விதிக்கப்படும் அபராதங்கள் முற்றாக இரத்துச் செய்யப்படும்.

சாரதிகளின் சிறிய தவறுகளுக்காக, அதாவது வாகன அனுமதிப் பத்திரத்தை மறந்தமை அல்லது வாகனப் பதிவு இலக்கத்தை பிழையாக உள்ளிட்டமை போன்ற விடயங்களுக்கு மேன்முறையீட்டின் போது அதிகபட்சமாக 10 பவுண்ஸ் மட்டுமே கட்டணமாக அறவிடப்பட முடியும்.

அதேவேளை, அதிகபட்ச வாகனத் தரிப்பிட அபராதக் கட்டணம் 100 பவுண்ஸ்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த புதிய விதிமுறைக் கோவை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

மேலும், புதிய வழிகாட்டல்களைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்களுக்கு வாகன சாரதிகள் மற்றும் உரிம முகவரகத்தின் (DVLA) தரவுகளைப் பார்வையிடும் அனுமதி இடைநிறுத்தப்படும்.

தமது வாகனத்துக்கு வருவதற்கு சில நிமிடங்கள் தாமதமானமைக்காகவோ அல்லது பதிவு இலக்கத்தின் ஓர் இலக்கத்தை பிழையாக உள்ளிட்டமைக்காகவோ சாரதிகளுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படக் கூடாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கட்டணங்கள் பொதுமக்களின் பணத்தை அநியாயமாகச் சுரண்டும் உணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin