• Tue. May 5th, 2026

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரம் – விஜய் தலைமையிலான தவெக அதிரடி முன்னிலை!

Byadmin

May 5, 2026


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று (மே 4) காலை முதலே மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற வாக்குப்பதிவின் பின்னர், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளை தீர்மானிக்கும் இந்த முக்கிய கட்டமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் கட்டுக்கோப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

காலை 11 மணி நிலவரப்படி, தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத மாற்றம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பல தொகுதிகளில் முன்னிலைப் பெற்று ஆச்சரியமான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. தற்போதைய தரவுகளின்படி, தவெக சுமார் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேலும், தவெக சார்பில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளனர். இதனால், மாநில அரசியல் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மாறாக, ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்களது தொகுதிகளில் பின்னிலையில் இருப்பது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கும் எதிர்பார்த்த அளவிலான ஆதரவு கிடைக்காமல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் அரசியல் மாற்றம், குறிப்பாக திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் வட்டாரங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

By admin