பட மூலாதாரம், TVK
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வழக்கமான தேர்தல்களைப் போன்றது இல்லை என்பதை முடிவுகள் காட்டியுள்ளன.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தமிழக அரசியலை தீர்மானித்து வந்தது. அந்த அரசியல் வரலாற்றில், தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரும் மாற்றத்தை உணர்த்துகின்றன.
இதுவரையிலான நிலவரப்படி, 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி விஜய் தொடங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி பெற்றுள்ள வெற்றி வாக்காளர்களின் முடிவுகள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தத் தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தும் ஐந்து முக்கிய அம்சங்களும் அவை மாநில எதிர்காலத்தில் ஏற்படுத்தும் நீண்டகால தாக்கத்தையும் இங்கு விரிவாகக் காண்போம்.
1. திராவிட கட்சிகளின் செல்வாக்கை தகர்த்த தவெக
தமிழக வரலாற்றில் இத்தனை ஆண்டுகளில் இதுவரை காணப்படாத ஒரு தனித்துவமான தேர்தலாக இது அமைந்துள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.
கிட்டத்தட்ட அனைத்து அரசியல் நோக்கர்களுமே தவெக மக்களிடையே பரவலாக ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டனர் என்று கூறும் அவர், “இது எம்.ஜி.ஆருக்கு, என்.டி.ஆருக்கு கிடைத்த ஆதரவைப் போன்றது இல்லை. வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக விஜய்க்கு ஆதரவளித்து இருப்பதை இந்த முடிவுகள் உணர்த்துகின்றன,” என்றார்.
இந்தத் தேர்தலின் மிக முக்கியமான சாராம்சம், தமிழ்நாட்டின் நீண்டகால இருதுருவ அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றப்பட்ட 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக அல்லது அதிமுகவே ஆட்சியில் இருந்துள்ளன. தற்போது தவெக-வின் எழுச்சி அந்த நீட்சியை உடைத்துள்ளது.
இளங்கோவன் ராஜசேகரின் கூற்றுப்படி, 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் மற்றும் பெண்களின் ஆதரவைப் பெருமளவில் விஜய் ஈர்த்துள்ளார். “இவையே 35-40 சதவிகித வாக்குகளைக் குவித்துவிடுகிறது. இதுவொரு வகையில் யாராலுமே கணிக்க முடியாத முடிவாக இருக்கிறது. இதற்கு முன்பும் மாற்றத்தை விரும்பிய முதல் முறை வாக்காளர்கள் இருந்துள்ளனர். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் முந்தைய தேர்தல்களில் சாத்தியப்படவில்லை. இதில் சமூக ஊடகங்களின் பங்கு பெருமளவில் இருக்கிறது. அதேநேரம், ஆட்சி எதிர்ப்பு மனநிலையைக் கொண்டிருந்த தரப்பினர் மற்றும் பொதுவாக திராவிடக் கட்சிகளின் மீதே அதிருப்தி கொண்டிருந்த தரப்பினரின் வாக்குகளை தவெக தன்வசமாக்கியுள்ளது,” என்று கூறுகிறார்.

கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சேதத்தை ஏற்படுத்தி, விஜய் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என அரசியல் நிபுணர்கள் பலரும் கணித்திருந்தாலும், ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன் குறிப்பிட்டார்.
திராவிட பாரம்பரியத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த சறுக்கலுக்கு பின்னால் இருக்கும் மற்றொரு முக்கியக் காரணி தவெக-வில் இருந்த அமைப்பு ரீதியான புதுமை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
விஜய்க்கு இருந்த செல்வாக்குதான் இந்த எழுச்சிக்குப் பெருமளவு காரணமாக இருந்ததாக ஒருபுறம் கூறப்பட்டாலும், பல ஆண்டுகளாக ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி, கட்சித் தொண்டர்களாகத் திட்டமிட்டு அவர் மாற்றியமைத்துள்ளார்.
அவரது பிம்பக் கட்டமைப்புக்கு இருந்த ஈர்ப்பையும், அடிமட்ட அமைப்பைச் சீர்படுத்தியதையும் இணைக்கும் இந்த அணுகுமுறை, பல பத்தாண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்ட பாரம்பரியமான கட்சிகளுடன் போட்டியிட அவருக்கு உதவியுள்ளது.
அதேவேளையில், ஒருபுறம் தமிழக வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தி வந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளைத் தாண்டி புதிதாக ஒரு கட்சி முன்னிலைக்கு வந்துள்ளது என்றாலும், இதை வைத்து மாநிலத்தில் திராவிடக் கொள்கைகளின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகக் கூற முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.
“விஜய், திமுக-வுக்கு எதிராகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், பெரியார் உள்ளிட்டோரை கொள்கைத் தலைவர்களாக முன்னிறுத்தியதன் மூலம் தானும் ஒரு வகையில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றும் கட்சியே என்பதைக் காட்டினார். திராவிடக் கட்சிகள் நேர்மையாகச் செயல்படவில்லை என்பதும், தானே அதற்கு மாற்று சக்தியாக இருக்கப் போவதாகவும் ஒரு பார்வையை விஜய் தொடக்கத்தில் இருந்தே தெளிவாகச் சித்தரித்து வந்தார். அதற்கான பலன்களை அவர் தற்போது அனுபவிக்கிறார்,” என்று விவரிக்கிறார் அவர்.

2. மு.க.ஸ்டாலின் தோல்வி, திமுக பின்னடைவு
ஆட்சியை தக்க வைக்கும் இலக்குடன் மகளிர் மற்றும் இளம் வாக்காளர்களை ஈர்க்கும் இலக்குடன் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அவற்றின் பலன்களை அறுவடை செய்ய இயலாமல், அக்கட்சி மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஒரு வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், 76 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி பின்னடைவைச் சந்தித்தது மட்டுமின்றி, பல இடங்களிலும் அதன் ஆதரவுத் தளம் சரிந்துள்ளதை இது காட்டுகிறது. அக்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இந்தத் தேர்தலில், தமிழக அரசியல் இருதுருவப் போட்டிக்குப் பிந்தைய புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. அதே வேளையில், இது நீடிக்குமா என்பதை விஜயின் செயல்பாடுகளைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும் என்பதோடு, திராவிட கட்சிகள் அப்படியொன்றும் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கவில்லை எனவும் அவை மீண்டு வருவதற்கான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் இன்னமும் இருக்கின்றன என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த விளைவுக்குப் பல காரணிகள் பங்களித்து இருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக, மகளிர் மற்றும் இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக திமுக பல்வேறு திட்டங்களை அறிவித்தது என்றாலும் அது களத்தில் வாக்குகளாக மாறுவதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.
மேலும் பேசிய அவர், “எந்தவிதமான கொள்கை நிலைப்பாடும் இல்லாத இளைய தலைமுறையினரைக் கவர்வதற்குரிய அணுகுமுறையை திமுக கைக்கொள்ளவில்லை. குறிப்பாக, அரசியல்மயமாக்கப்படாத இளைய தலைமுறையிடம் திராவிடக் கட்சிகளின் சித்தாந்தங்களும் அணுகுமுறைகளும் எடுபடவில்லை. இத்தனை ஆண்டுக்கால ஆட்சியில் மாணவர்களிடையே அரசியல் பங்களிப்பை இல்லாமல் செய்து, படிப்பு, வேலை, தனிப்பட்ட வாழ்க்கை என்பதை மட்டுமே குறியாகக் கொண்ட தலைமுறைகளை வடிவமைத்ததன் மூலம் திராவிட கட்சிகள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டன,” என்கிறார்.
மறுபுறம், நகர்ப்புறங்களில் நிலவிய அதிருப்தி திமுகவின் வீழ்ச்சியில் கணிசமாகப் பங்கு வகித்திருப்பதை முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, சென்னை போன்ற திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்களில்கூட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறிப்பாக கவனிக்க வேண்டிய அம்சமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், தேர்தல் மாற்றங்கள் நகர்ப்புறங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கம் மற்றும் இளம் வாக்காளர்களிடையே நிலவும் அரசு மீதான அதிருப்தியைக் காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, திமுகவின் பின்னடைவு என்பது வெறுமனே முந்தைய காலங்களில் ஏற்பட்ட வழக்கமான தேர்தல் தோல்விகளாகப் பார்க்கப்படவில்லை. அதன் மரபார்ந்த ஆதரவுத் தளம் நீடித்திருக்கும் என்பதற்கு இனி எந்த உத்தரவாதமும் இல்லை என்பதற்கான சமிக்ஞையாகவே இது சுட்டிக்காட்டப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தின் மிகவும் போட்டி நிறைந்த தற்போதைய அரசியல் சூழலில், பாரம்பரியமான கட்சி என்பதன் அடிப்படையில் அதீத நம்பிக்கையைக் கொண்டிருக்காமல், திமுக தனது முன்னுரிமைகள், அமைப்பு ரீதியான உத்திகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகக் கூறுகிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

3. அதிமுக தொடர் தோல்வி – சிக்கலில் எடப்பாடி பழனிசாமி
தற்போது பெரும்பான்மை கவனம் தவெக-வுடைய எழுச்சியின் மீது இருந்தாலும், அதிமுகவின் செயல்பாடு இந்தத் தேர்தலின் மற்றொரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சித் தலைமை நெருக்கடிகள், உட்கட்சிப் பூசல்கள், தொடரும் தேர்தல் தோல்விகளால் அதிமுக தவித்து வருகிறது.
இருப்பினும், 2026 தேர்தல் முடிவுகள் அதிமுக ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகத் தொடர்வதைக் காட்டுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன். ஒப்பீட்டளவில் 2021ஆம் ஆண்டைவிட குறைந்த தொகுதிகளையே அதிமுக கைப்பற்றியுள்ளது என்றாலும், தனது இருப்பைக் கணிசமாகத் தக்க வைத்துள்ளது என்பதையும் அது தனது அணுகுமுறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினால் மீண்டு வருவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் புரிந்துகொள்ள முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், பேராசிரியர் ராமு மணிவண்ணனின் கூற்றுப்படி, அதிமுக ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு தொடர்ச்சியாகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் இருப்பது அதன் எதிர்காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்துவதுடன் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்தை இது கேள்விக்கு உள்ளாக்குகிறது.
திமுக பின்னடைவைச் சந்தித்து இருந்தாலும், அதுதான் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது. “அதிமுக-வுக்கு இது வரலாற்றில் இரண்டாவது பெரிய தோல்வி” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிவபிரியன்.
அதிமுக 1996இல் நான்கு தொகுதிகளையே கைப்பற்றியது. 2006ஆம் ஆண்டில் 61 தொகுதிகளைப் பிடித்தது. 2021 தேர்தலில் 191 தொகுதிகளில் போட்டியிட்டு 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது.
தற்போது, 2026 தேர்தல் நிலவரப்படி, அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் வரலாற்றில் இது இரண்டாவது பெரிய தோல்வி எனக் குறிப்பிடும் சிவபிரியன், “இதன்மூலம் அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படுகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். குறிப்பாக ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு பார்த்தால் அக்கட்சி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. இது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு நெருக்கடியாக உருவெடுக்கலாம்.
இது அவரது தலைமைக்கு எதிராகப் பல கேள்விகள், கலகக் குரல்கள் கட்சிக்குள் எழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திமுக தற்போது பின்னடைவைச் சந்தித்தாலும், அதற்கென சித்தாந்த வலிமை இருக்கிறது. ஆனால், அதிமுக-வின் அடிப்படைக் கொள்கையே திமுக எதிர்ப்புதான் என்னும் நிலையில், அதைத் தற்போது தவெக கையில் எடுத்து முக்கிய சக்தியாக உருவெடுக்கும் சூழலில், அதிமுக இந்த புதிய சூழலை எப்படிக் கையாளப் போகிறது என்பதுமிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது,” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
4. வாக்காளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
தமிழகத்தின் நீண்டகால அரசியல் நிலைமையை மாற்றியமைக்கும் வகையிலான முடிவை மக்கள் எடுத்திருப்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுவதாகவும், ஏதோவொரு வகையில் ஆளுங்கட்சி மீது தீவிரமான எதிர்ப்புணர்வு இருந்துள்ளதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறுகிறார்.
அதோடு, இந்தத் தேர்தலை விரிவாகப் பகுப்பாய்ந்து, புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருப்பதுடன், மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை இது மறுவரையறைக்கு உட்படுத்துவதாகவும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுக வெற்றி பெறும் என்றும், தவெக ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கணித்திருந்தன. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கைப்பற்றி இருப்பதையும், தேர்தல் வரைபடத்தை அது மாற்றி அமைப்பதையும் காட்டுகின்றன.
தமிழக வரலாற்றில் ஆழமாக வேரூன்றியிருந்த பின்னணியைக் கொண்ட கட்சிகளை தவெக போன்ற ஒரு புதிய கட்சி முந்தியிருப்பது ஆட்சி மீதான வாக்காளர்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.
“இந்தத் தேர்தலில் மக்கள் சித்தாந்த அடிப்படையிலோ பிரச்னைகளை மையமாகக் கொண்டோ வாக்களித்ததாகக் கூற முடியாது. திராவிட ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில் புதுமை தேவை என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே பெருவாரியான மக்கள் வாக்களித்து இருப்பதாகத் தோன்றுகிறது.
குறிப்பாக, வெளியில் பெரிதாகத் தென்படாத ஆட்சி எதிர்ப்பு மனநிலை இருந்திருப்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. இது வெறுமனே திராவிட அரசியலுக்கு எதிரான மனநிலை என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில், அதிமுக கணிசமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், திமுக மீது குறிப்பாக இருந்த எதிர்ப்புணர்வை இந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது,” என்று ராமு மணிவண்ணன் விளக்கினார்.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு தவெக-வுக்கு கணிசமாக இருப்பதும், திமுக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளில் ஒரு பகுதி அவர் பக்கமாகத் திரும்பும் எனவும் அரசியல் நிபுணர்கள் பலரால் ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் அளவிலான ஆதரவு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்கிறார் பத்திரிகையாளர் திவ்யா.
இதன் பின்னணியில் விஜய் என்ற ஆளுமையின் மீதான ஈர்ப்பு மிக முக்கியப் பங்காற்றி இருந்தாலும், அதையும் தாண்டி, தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நீடித்திருக்கும் திராவிடக் கட்சிகள் இடையிலான இருமுனைப் போட்டியைத் தாண்டி ஒரு மூன்றாவது சக்திக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென மக்கள் தீர்மானித்து இருப்பதை முடிவுகள் உணர்த்துவதாகக் கூறுகிறார் இளங்கோவன் ராஜசேகரன்.
பட மூலாதாரம், TVK
5. பிரசாரத்தில் சமூக ஊடகங்களின் தனித்துவமான பங்கு
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்க இதற்கு முன்பும் விஜயகாந்த், சீமான் எனப் பலரும் முயன்றிருந்தபோதிலும், விஜய் அதை வலுவாகச் சாதித்துக் காட்டியிருப்பதாகவும் இந்தத் திடீர் மாற்றத்தை விரிவாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே, இந்தத் தேர்தல் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அதை மேலும் உறுதி செய்துள்ளதுடன், மூன்று கட்சிகளும் கணிசமான வாக்கு சதவிகிததைப் பெற்றுள்ளன.
இத்தகைய மாறுதலில் சமூக ஊடகங்கள் மிக முக்கியமான பங்கை ஆற்றியிருப்பதாகக் கூறுகிறார் ராமு மணிவண்ணன்.
தவெக-வை பொறுத்தவரை, விஜய் குறைந்த இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். அதிலும், காரைக்குடி போன்ற பகுதிகளில் சிறிது நேரம் மக்கள் முன்பு வந்துவிட்டு, எதுவும் பேசாமல் சென்றிருந்தார்.
அப்படியிருந்தும்கூட அவருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது.
களத்தில் செயலாற்றியதை விடவும் துடிப்புடன் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகங்களில் தவெக முழு வீச்சில் இயங்கி வந்ததாகவும் அதில் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றதாகவும் மூத்த பத்திரிகையாளர் மாலன் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், X/TVK
அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசிய ராமு மணிவண்ணன், “இந்தத் தேர்தலில் இளம் தலைமுறையினர் மற்றும் பெண்களின் வாக்கு வங்கி, முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. விஜய் நேரடியான பிரசாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று கூறுவதைவிட, அவரது தாக்கம் சமூக ஊடகங்களின் வாயிலாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிதாக இருந்தது எனக் கூறுவதே சரியாக இருக்கும்” என்று விவரித்தார்.
மறுபுறம், சமூக ஊடகங்கள் விஜயின் வெற்றிக்கு ஒரு கூடுதல் காரணியாக இருந்ததேயொழிய அதுவே மூல காரணமாக இருந்ததாகச் சொல்லிவிட முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
குறிப்பாக, “விஜயை விமர்சிப்பதைத் தாண்டி, அவரை ஆதரிப்பவர்களையும் ‘தற்குறி’ என்று விமர்சிக்கத் தொடங்கியது, அவருக்கு இருந்த ஆதரவுத் தளத்தை மேலும் வலுப்படுத்தியது,” என்கிறார் அவர்.
இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தைப் பொறுத்தவரை, “விஜய் தாமாக நேரடியாகச் சென்று பரப்புரைகளை மேற்கொள்வதில் அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. மாறாக, அவர் இளம் தலைமுறையினரையே தனக்கான பிரசாரங்களை மேற்கொள்ளச் செய்தார்.
திமுக தன்னை பரப்புரை செய்யவிடாமல் தடுப்பதாகவும் தனக்காக இளம் தலைமுறையினர் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார். அதைத் தொடர்ந்து தமிழக மாணவர்களும் இளைஞர்களும் தத்தமது குடும்பங்களில் தொடங்கி சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் தவெக-வுக்காக பிரசாரங்களை மேற்கொண்டனர்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவபிரியன்.
விஜய், வீட்டுக்கு ஒருவரைத் தனக்கான பிரசாரகராக மாற்றியதன் மூலம் சமூக ஊடக வாயிலாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று கூறும் அவர், பாரம்பரியமான வாக்கு சேகரிப்பு முறைகளைத் தகர்த்து, இப்படியொரு வித்தியாசமான அணுகுமுறையை அவர் கைக்கொண்டதன் மூலம் தனித்துவமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார். இத்தகைய அணுகுமுறை மிகவும் புதிது என்பதுடன் இது பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு