
தமிழகத்தில் சமூகநீதித்துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியிருந்தார்.
அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, அதை அமல்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அமைச்சராகவே அவர் நீடிக்க முடியாது என்று கண்டனம் தெரிவித்து, அவருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, ஆர்எஸ்எஸ் கோட்பாட்டின் பின்புலத்திலிருந்து கிருஷ்ணசாமி பேசுவதாகக் கூறினார்.
பிபிசியிடம் இதுபற்றி பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி, மாட்டிறைச்சி குறித்த விவகாரத்தில் அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டுமென்றும், வன்னி அரசுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
ஆனால் மாணவர் தெரிவித்த விருப்பத்தையே அமைச்சர் கூறினார் என்று பிபிசியிடம் கூறிய அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு நிர்வாகி ஆகாஷ், தங்களுடைய உணவு உரிமையை வலியுறுத்தி கிருஷ்ணசாமி போராடும் அதே நாளில் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது பேட்டி பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில் அமைச்சர் வன்னிஅரசு, ‘தற்போதைய நிலையே தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
மாட்டிறைச்சி விவகாரத்தில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், Vanniarasu/X
சென்னை சைதாப்பேட்டையில் தமிழக அரசின் சமூகநீதித்துறையின் கீழ் இயங்கி வரும் எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த செப்டெம்பர் 21 ஆம் தேதி, தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, துறையின் இயக்குநர் செந்தில்ராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டார்.
”சமூகநீதி விடுதிகளில், சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் தற்போது வழங்கப்படுகின்றன. இந்த உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். சில மாணவர்கள் வேண்டாம் என்கின்றனர். இதுகுறித்து, மாணவர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.” என்று கூறினார் அமைச்சர் வன்னிஅரசு.
கிருஷ்ணசாமி எதிர்ப்பும் வன்னி அரசு பதிலும்
பட மூலாதாரம், Krishnasamy/X
ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் உடனடியாக இதற்கு ஆதரவாகவும். எதிர்ப்பாகவும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. புதிய தமிழகம் கட்சித்தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, ”மாட்டிறைச்சி, நம் தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல. அது நம் கலாசாரத்திலும் இல்லை. சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கமாகவுள்ளது. ஒரு தவறான, விபரீதமான முடிவை, அமைச்சர் வன்னிஅரசு எடுக்க மாட்டார் என்று கருதுகிறோம். ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கான செயலில் ஈடுபட்டால், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும்.” என்று அறிக்கை வெளியிட்டார்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, ”மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். நான் ஆலோசிப்பதாகக் கூறினேன். இது அரசு எடுத்த முடிவு இல்லை. என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் இல்லை. மாணவர்கள் கூறியபோது அதிகாரிகளும் உடன் இருந்தார்கள். உடனே முடியாது என்றால் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். முடியும் என்றும் சொல்ல முடியாது. அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.” என்றார்.
”மாட்டிறைச்சி விவகாரம் என்பது ஆர்எஸ்எஸ் கோட்பாட்டின் பின்புலத்தில் இருந்து பேசக்கூடியது. ஆர்எஸ்எஸ் மற்றும் சனாதனக் கோட்பாட்டின் பின்னணியிலிருந்து மருத்துவர் கிருஷ்ணசாமி பேசுவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டில் ஊறி வளர்ந்தவர். சங்கராச்சாரியாரை தன் குரு என்று கூறியவர். கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் உழன்று புரண்டவர். அவர் பதற்றமடையத் தேவையில்லை. தனிப்பட்ட மனிதரின் விருப்பத்தை அவர் கொச்சைப்படுத்துவது என்பது ஒரு ஆபத்தான போக்காக இருக்கும். அது கண்டிக்கத்தக்கது.” என்றும் கூறியிருந்தார் அமைச்சர் வன்னிஅரசு.
அமைச்சரின் கருத்துக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமி, வன்னிஅரசுவைக் கண்டித்து, செப்டெம்பர் 30 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் முன்பாகவும், அமைச்சரின் வீடு முன்பாகவும் போராட்டம் நடத்தப்படுமென்று தெரிவித்தார்.
இந்து முன்னணியின் மாநிலப்பொதுச்செயலாளர் கிஷோர் குமார், ”சமூகநல விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது உணவு உரிமை என்று கூறப்பட்டால் பன்றி இறைச்சி உண்ணும் மாணவர்களின் உரிமையையும் மதித்து அதையும் உணவில் சேர்க்க வேண்டும்.” என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அமைச்சர் வன்னி அரசுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டனர்.
பிபிசியிடம் இதுபற்றி பேசிய புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, ”சமூகநீதித்துறையின் கீழுள்ள விடுதிகளில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த பல சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கின்றனர். எல்லா சமுதாயத்தினரும் ஒரே உணவுப்பழக்க வழக்கம் கொண்டவர்களில்லை. அங்கு மாணவர்களுக்கு என்ன உணவு தர வேண்டுமென்பதை அரசுதான் முடிவு செய்து நிதி ஒதுக்குகிறது. அதை தீர்மானிப்பது சட்டப்பேரவை. அப்படியிருக்கும் போது ஒரு மாணவரின் கருத்து என்று சமூகநீதித்துறை அமைச்சர் இந்த கருத்தை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றார்.
அவரிடம் உணவு என்பது தனிப்பட்ட உரிமையாக இருக்கும்போது, மாணவரின் விருப்பத்தை அமைச்சர் தெரிவித்ததில் என்ன தவறு என்ற கேள்வியை பிபிசி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், ”உணவு என்பது தனிப்பட்ட உரிமைதான். பணம் இருப்பவர் வீட்டிலும், ஓட்டலிலும் போய் எதையும் சாப்பிட்டுக் கொள்ளலாம். எல்லா சமுதாய மாணவர்களும் இருக்கும் அரசு விடுதிகளில் இதுவரை இல்லாத ஒரு நடைமுறையை புதிதாகக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் அமைச்சரின் இந்த கருத்து.” என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி, ”இதே போல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மாட்டிறைச்சியை உணவாக வழங்கும் நடைமுறையைக் கொண்டு வர மற்ற அமைச்சர்கள் பேசுவார்களா? இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? இங்கே ஒரு சமுதாயத்துடன் மாட்டிறைச்சியை இணைப்பது நாங்களா, அமைச்சரா? ”தலித் உணவு மாட்டிறைச்சி” என்ற கருத்தை முன் வைப்பதே முற்போக்கு பேசும் இவரைப் போன்றவர்கள்தான்.” என்றார்.
இதுபற்றி பிபிசியிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் பாவலன், ”அவருடைய அறிக்கையும் கருத்தும் அவருடைய அரசியல் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றன. எங்கள் அமைச்சர் அதற்கு விரிவாக விளக்கமும் கொடுத்துவிட்டார்.” என்றார்.
அமைச்சர் ஆய்வின் போது மாணவர் விடுதியில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், Handout
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும், செப்டெம்பர் 21 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில், தன்னுடைய ஆய்வின்போது எடுக்கப்பட்ட காணொளியை தன்னுடைய சமூக ஊடகப்பக்கங்களிலும் அமைச்சர் வன்னி அரசு பகிர்ந்தார். அதே காணொளியை அந்த விடுதியிலுள்ள பல மாணவர்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
அதில் அமைச்சர் மற்றும் ஆதி திராவிடர் நல இயக்குநர் செந்தில் ராஜ் இருவரும், விடுதியை ஆய்வு செய்துவிட்டு, விடுதியில் தயாரான உணவை மாணவர்கள் முன்னிலையில் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அப்போது அமைச்சரிடம் பேசும் சில மாணவர்கள், தங்கள் விடுதியில் உணவின் தரம் பற்றியும், உணவை பரிமாறுவதில் ஏற்படும் சிக்கல்களையும், கொசுத்தொல்லை போன்றவற்றையும் முறையிடுகின்றனர்.
அவர்களில் ஓரிரு மாணவர்கள், எங்களுக்கு சிக்கன், மட்டன் போடுவது போல மாதத்துக்கு ஒரு முறை மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கினறனர். அதற்கு அமைச்சர் அதுபற்றி ஆலோசித்து முடிவு எடுப்பதாகக் கூறுகிறார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பகிர்வது போன்றவற்றை ஒழுங்குபடுத்த மாணவர்கள் கொண்ட கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அமைச்சர் வன்னி அரசு ஆய்வின்போது நடந்த விஷயங்களை, பிபிசியிடம் விளக்கினார் எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கும் நந்தனம் கல்லூரியின் மாணவரும், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் (AISF) கிளைச் செயலாளருமான ஆகாஷ்.
பிபிசி தமிழிடம் பேசிய ஆகாஷ், ”இங்குள்ள பழைய விடுதியில் 580 மாணவர்களும், புதிய விடுதியில் 480 மாணவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு கோழிக்கறி, ஆட்டுக்கறி வழங்கப்படுவதுபோல, மாட்டிறைச்சியும் வழங்க வேண்டுமென்பது இங்குள்ள பல மாணவர்களின் எதிர்பார்ப்புதான். இங்குள்ள பல மாணவர்கள் விளையாட்டு வீரர்களாக உள்ளனர். மாட்டிறைச்சியில் அதிக புரோட்டீன் இருப்பதால், அவர்களுக்கு போதிய அளவு புரோட்டீன் கிடைக்க ஏதுவாக மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்று கேட்டோம்.” என்றார்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு, இந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அவரிடம் பல்வேறு குறைகளையும் அடுக்கியதாகக் கூறும் விடுதி மாணவர்கள், அவற்றில் முக்கியமான 3 விஷயங்களுக்கு மட்டுமே தீர்வு கிடைத்ததாகவும், மற்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். கடந்த வாரத்தில் ஒரு நாள் சோறு சரியாக வேகாமல் இருந்ததை காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுடன் அமைச்சர் வன்னி அரசுக்கும் அனுப்பியுள்ளனர். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு இதுகுறித்து சமூக ஊடகங்களில் பரப்புரை செய்து, அண்ணா சிலை முன்பாக போராட்டம் நடத்துவதாகவும் கூறியிருந்தது. அதன் அடிப்படையில்தான் அமைச்சர் வன்னி அரசு தங்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டதாக ஆகாஷ் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் கூறிய அவர், ”விடுதிகளில் இருந்த மாணவர்கள் அனைவரிடமும் கருத்துகளைக் கேட்ட பின்பே, நாங்கள் அமைச்சரிடம் இந்த கோரிக்கையை வைத்தோம். அமைச்சரும் அதை உடனே ஏற்கவில்லை. அதிகாரிகள், அரசு மட்டத்தில் ஆலோசித்து பின்பு முடிவெடுக்கப்படும் என்றுதான் கூறினர்.” என்றார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனரா?
மாணவர்களின் விருப்பத்தையே தான் பிரதிபலித்ததாக அமைச்சர் வன்னிஅரசு கூறியுள்ள நிலையில், இந்த கோரிக்கை முந்தைய ஆட்சிக் காலத்தில் மாணவர்களால் முன் வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. இதுகுறித்து கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
அதற்கு விளக்கமளித்த கயல்விழி செல்வராஜ், ”நான் அமைச்சராக இருந்தபோது, ஏராளமான விடுதிகளை ஆய்வு செய்திருக்கிறேன். அப்போதும் சிக்கன், மட்டன் மட்டும்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் எந்த மாணவரும் மாட்டிறைச்சி வேண்டுமென்ற கோரிக்கையை என்னிடம் கூறவில்லை. பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்களிடம் பேசியபோது, உப்புமா, கிச்சடிக்குப் பதிலாக இட்லி, தோசை போன்றவற்றை மாற்றித்தர வேண்டுமென்று மெனுவில் சில மாற்றங்களை மட்டுமே முன் வைத்தனர்.” என்றார்.
”விடுதிகளில் அசைவமே சாப்பிடாத மாணவர்களும் பலர் இருக்கிறார்கள். அசைவத்திலும் எத்தனை பேர் மாட்டிறைச்சியை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருசில மாணவர்கள் கேட்பதால், அதையே எல்லா மாணவர்களுக்கும் கொடுப்பது சாத்தியமும் இல்லை. அதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. அதனால் இது மாணவர், பெற்றோர், அரசு, அதிகாரிகள் என எல்லோரும் கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவாகத்தான் நான் நினைக்கிறேன்.” என்றார் முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
கிருஷ்ணசாமி மீது விமர்சனம்
இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய திராவிடத் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, “மாணவர்கள் எந்த உணவை உண்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது அமைச்சர் வன்னி அரசுவோ, மருத்துவர் கிருஷ்ணசாமியோ இல்லை. இந்த விவகாரத்தில் மாணவர் விருப்பமறிந்து அரசு முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
‘உணவு விவகாரங்களில் மத்திய அரசு தலையிட்டபோது, அதிக எதிர்ப்பைப் பதிவு செய்தது தமிழகம்தான். மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களைத் தாக்குவது ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் செயல்கள். இன்றைக்கு அவர்களே அமைதியாக இருக்கும் சூழலில், அவர்களுடைய குரலை மருத்துவர் கிருஷ்ணசாமி எதிரொலித்து வருகிறார். ஆணவக்கொலைகளை எதிர்த்துப் போராடாத கிருஷ்ணசாமி, இன்றைக்கு மாட்டிறைச்சி விவகாரத்துக்காக அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவேன் என்று சொல்வது, அவருடைய ஆர்எஸ்எஸ் பாசத்தை வெளிப்படுத்துகிறது.” என்றார் அவர்.
அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பை வரவேற்பதாகக் கூறியுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இதை விரைவாக அமல்படுத்த வேண்டுமென்று கோரியுள்ளார். இதனை வரவேற்று செப்டெம்பர் 30 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி விளக்கம்
ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி, மருத்துவர் கிருஷ்ணசாமியிடம் பிபிசி கேட்டபோது, ”என் மீது ஆர்எஸ்எஸ் முத்திரை குத்துவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் மீது இந்த குற்றச்சாட்டை வைப்பதற்கு வன்னி அரசுக்கு எந்த தகுதியும் இல்லை. ” என்றார்.
”இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதைப் பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் பலவித கலாசார, நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு சமுதாய மாணவர்கள் இருக்கும் விடுதியில் அதை வழங்குவது சரியா என்பதே எனது கேள்வி. அமைச்சர் வன்னி அரசுவின் கருத்துக்கும், அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதையும், இது அரசின் பரிசீலனையில் இருக்கிறதா இல்லையா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு அமைச்சராக அவர் கூறியது அரசின் கருத்தாக பிரதிபலிக்கும் என்பதால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.” என்றார் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி.
மாட்டிறைச்சி சேர்க்கப்படாது – வன்னிஅரசு
சமூகநீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு மாட்டிறைச்சி குறித்து மாணவர் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்தது பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில் அமைச்சர் வன்னிஅரசு, தற்போதைய நிலையே தொடரும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று ( செப் 24) செய்தியாளர்களை சந்தித்த அவர் “மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி முறையே தொடரும். மாட்டிறைச்சி மெனுவில் சேர்க்கப்படாது” என்று விளக்கமளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு