பட மூலாதாரம், Youtube/DIPR
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
‘கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நிறைவேறியது.
முன்னதாக, ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தால் தான் நிலைத்திருக்கும்’ என தி.மு.க கூறியுள்ளது. இதே கருத்தை அரசியல் விமர்சகர்களும் முன்வைக்கின்றனர்.
த.வெ.க அரசின் தீர்மானத்தால் என்ன நடக்கும்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமையன்று பேரவை தொடங்கியதும் தனித் தீர்மானம் ஒன்றை த.வெ.க அரசு கொண்டு வந்தது.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ” மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்று. உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். தமிழ், வெறும் மொழி மட்டும் அல்ல, அது நம் உயிர், நம் உணர்வு” எனப் பேசினார்.
“நம்மைப் பெற்ற தாயை அம்மா எனக் கூறும்போது பாசமும் சொந்தமும் நம்மை அறியாமல் உறவாய், உணர்வாய், உயிராய் தோன்றும் அல்லவா? தமிழ் என்று சொன்னாலே எப்படி இருக்கும் எனச் சொல்லவா வேண்டும்? தாய் எப்படி புனிதமோ அதுபோல தான் தாய்மொழியும்” என அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “தாயைப் போற்றுகிற, வாழ்த்துகிற தமிழ்நாட்டு மண் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும்? விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்தின் சிறப்பு குறித்துப் பேசிய முதலமைச்சர், “தமிழ் மொழி மட்டுமல்ல, அது ஒரு பண்பாடு. தமிழ் என்றால் விருந்தோம்பல். தமிழின் புகழைக் கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘அனைத்துலகும் இன்பமுற’ எனக் கூறுகிறதே தவிர, எந்தவோர் இனத்தையும் மொழியையும் தாழ்த்திப் பேசவில்லை” எனப் பேசினார்.
“தமிழை உயர்த்திப் பிடிக்காமல் பின்னுக்குத் தள்ளினால் தமிழ்நாடு எப்படி பொறுத்திருக்கும். உலகில் தோன்றிய பல மொழிகள் காணாமல் போனதாகக் கூறுவார்கள். காலம் முழுக்க இருக்கும் மொழியாக தமிழ் உள்ளது. அதன் அடையாளம் தான் தமிழ்த்தாய் வாழ்த்து” என முதலமைச்சர் கூறினார்.
பட மூலாதாரம், CMOTamilnadu
‘மாநில பாடல் பற்றிய வழிமுறை இல்லை’
“ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடத்தில் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு மொழிக்கும் பண்பாட்டுக்கும் பாரம்பரிய உரிமையைக் கொடுத்திருக்கிறது. அதுதானே மாநில உரிமை” எனப் பேசினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
“1970 நவம்பர் 23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட வேண்டும் என அரசாணை போடப்பட்டு செயல்பட்டு வந்தது. 2021 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது” என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“2026 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி ஒன்றிய அரசின் கடிதத்தில் அரசு விழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், மாநில பாடல் பற்றிய எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்தது” என அவர் கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே 10-ஆம் தேதி த.வெ.க அரசு பொறுப்பேற்றது.
இதனைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், “மாநில பாடல்களுக்கு அங்கீகாரம் வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் மே 27 ஆம் தேதி பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது” எனத் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த இந்த தீர்மானம் கூறுகிறது.
‘சட்டமாக்கித் தர வேண்டும்’ – கோவி.செழியன்
அரசின் தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ கோ.வி.செழியன், “பள்ளிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட வேண்டும் என 11.3.1970 ஆம் ஆண்டு வேண்டும் என முதலமைச்சராக இருந்த கலைஞர் கொண்டு வந்தார்” எனக் கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மூன்றாம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அவமானகரமாக உள்ளதாகக் கூறிய கோவி.செழியன், தி.மு.க ஆட்சி செய்தபோது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அமைத்தது போன்றவற்றைப் பட்டியலிட்டார்.
“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வகுத்துக் கொடுத்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்துக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து தள்ளப்பட்டது வேதனையைத் தருகிறது” எனவும் அவர் பேசினார்.
“இப்படிப்பட்ட சூழல்களை மாற்றும் வகையில் சட்டமாக்கித் தந்தால் இந்தத் தவறுக்கு யாரும் துணை போக மாட்டார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
அரசின் தனித் தீர்மானத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றித் தந்ததற்காக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக, என தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Youtube
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் அடுத்தடுத்து ஒலித்தன. நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மே 10-ஆம் தேதி மாலையில் நடைபெற்ற தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இதே பாணி பின்பற்றப்பட்டது. இதனை விமர்சித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயல். இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்துக்குரியது” எனக் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “இந்த அணுகுமுறை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்ததாக தெரியவில்லை. ஆளுநரின் விருப்பப்படியோ, ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது” எனத் தெரிவித்தார்.
வரும் காலங்களில் அரசு விழாக்களில் வந்தே மாதரம் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
‘புதிய நடைமுறை பின்பற்றப்படாது’
இதற்கு அறிக்கை மூலமாக விளக்கம் அளித்த த.வெ.க தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில் அரசுக்கு உடன்பாடு இல்லை. ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்பட வேண்டிய பொறுப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.
‘அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடலாக ஒலிக்கப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் புதிய நடைமுறை பின்பற்றப்படாது’ எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அடுத்தடுத்து வந்த நாட்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தன. குறிப்பாக, மே 21 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘வந்தே மாதரம்’ முதலில் பாடப்பட்டது.
சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறையும் தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டு வரம்பு மீறப்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம் செய்தார்.

‘ஆளுநர் மாளிகை உத்தரவு’
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 28 ஆம் தேதி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பின்போது, “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகையில் இருந்து உத்தரவு வந்துள்ளது. அதுவே பின்பற்றப்படும்” என, பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதையடுத்து, பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.
அவர் பேசும்போது, “ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர். இது தவறான செயல். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும். ஆளுநர் அலுவலகம் இதைத் தொடர்ந்து செய்து வருகிறது. இது மாற்றப்பட வேண்டும்” எனக் கூறினார்.
“அனைவரிடமும் ஆலோசித்து சட்டரீதியாக கொண்டு செல்வோம்” எனப் பேசிய அவர், ஆளுநர் அலுவலகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் இதுபோன்று பாடப்படுகிறது. கல்வி நிலையங்கள் வரை இவ்வாறு தடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என, த.வெ.க அரசு கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம் அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.
தீர்மானத்தால் என்ன பலன்?
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் நிகழ்ச்சிகளில் புதிதாக ‘வந்தே மாதரம்’ இசைப்பதால் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனவேல், “மாநில நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இறுதியில் ஜன கண மன பாடப்பட்டது” எனக் கூறுகிறார்.
“ஆளுநர் நிகழ்ச்சி தவிர மாநில அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கு புதிதாக எந்தச் சட்டமும் இல்லை. ஆளுநரின் செயல்பாடு தொடர்ந்தால், தனித்தீர்மானம் கொண்டு வந்ததை த.வெ.க அரசு முன்வைக்கும். அதற்கு மட்டுமே தீர்மானம் பயன்படும்” எனக் குறிப்பிட்டார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை குறித்துப் பேசிய தனவேல், “பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் இருப்பதால் பட்டமளிப்பு விழாக்களில் இவை பின்பற்றப்படுகிறது. ஆளுநர் பங்கேற்காத நிகழ்வுகளில் மாநில அரசின் விருப்பம்போல செயல்படலாம்” என்கிறார்.
தொடர்ந்து பேசும்போது “ஆளுநர் பங்கேற்கும் மேடை என்றால் அவர் கூறுவதைத் தான் துணைவேந்தர் கேட்பார். அதை மீறி சில துணைவேந்தர்கள் செயல்பட்டால் தங்கள் மீதான நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்கு த.வெ.க அரசின் தீர்மானம் உதவும்” எனத் தெரிவித்தார்.
இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி, “வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் எனக் கூறிய பிறகே மனோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகம் உள்பட சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. அரசின் தீர்மானம் மூலமாக துணைவேந்தர்கள் ஆளுநர் கூறுவதைக் கேட்பது தடுக்கப்படலாம்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரும் நாட்களில் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது கட்டாயமாக்கப்படும். ஆனால், ஆளுநர், பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருப்பதால் அவர் கூறுவதைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை த.வெ.க அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்” எனக் கூறுகிறார்.
சட்ட அங்கீகாரம் சாத்தியமா?
அரசின் தனித்தீர்மானம் குறித்துப் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி, “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தால் தான் அது நிலைத்திருக்க முடியும். அதற்கு த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை” எனக் கூறினார்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், ” சட்டப்பேரவை தீர்மானம் என்பது ஒருங்கிணைந்த அரசியல் முடிவை மட்டுமே சொல்கிறது. ஆளுநருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” என்கிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக 1970 ஆம் ஆண்டு முதல் 2021 வரை பல்வேறு அரசாணைகள் உள்ளதாகக் கூறிய அவர், “அந்த வரிசையில் தனித் தீர்மானம் மூலம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது. அதைத் தாண்டி வேறு எந்தப் பயனும் இல்லை” எனக் கூறுகிறார்.
“அதேநேரம், தனித் தீர்மானத்தை சட்ட மசோதாவாக முன்மொழிந்தால் ஆளுநர் ஒப்புதல் தேவை. குடியரசுத் தலைவர் ஒப்புதலும் தேவை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி, “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்பது மாநில உரிமை தொடர்பானது. இந்த உரிமையை ஒருவர் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை.” என்கிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சட்டமாக்குவது தொடர்பான விமர்சனம் குறித்து, த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சத்தியகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“முதல்கட்டமாக தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு முடிவெக்கப்படும்” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு