பட மூலாதாரம், Getty Images
சமூக வலைத்தளங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் வெளியிடும் ‘சர்ச்சைக்குரிய’ பதிவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு காவல்துறை தெரிவிக்கிறது.
இதுவரை (அக்டோபர் 24, 2026 நிலவரப்படி) தென் மண்டலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில், ‘ஆபரேஷன் டிஜிட்டல் விஜில்’ என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக 356 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 196 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 552 சமூக ஊடகப் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன என தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி பிபிசி தமிழிடம் கூறினார்.
‘தனிநபர்களைக் குற்ற நோக்கத்துடன் மிரட்டுதல், போதைப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், சட்டவிரோத ஆயுதங்களைக் காட்சிப்படுத்துதல் அல்லது சட்டவிரோதச் செயல்களைத் தூண்டுதல்’ ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.
கடந்த ஒருவாரத்தில் அதிகமான சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் மேலமங்கலம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 26 வயதான மதன் என்பவர் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. அதேசமயம், இக்கொலை வழக்கு தொடர்பாக, சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மதன் கொலை செய்யப்பட்ட பிறகு, ‘அதற்கு பழிதீர்க்கும்’ நோக்கில் அல்லது ‘குற்றத்தைக் கொண்டாடும்’ வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாயின என்றும், அவை முடக்கப்பட்டு, அது தொடர்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிவகங்கை காவல்துறை கூறுகிறது.
“இந்த வழக்கம் புதிது அல்ல, பொதுவாகவே ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது என்பது சமூக ஊடக தளங்களின் வருகைக்கு முன்பாகவே இருந்திருக்கிறது. சமூக ஊடகங்கள் இப்போது அவற்றை இன்னும் வேகமாக பரப்புகின்றன. இதற்கு பின்னால் சாதிய அரசியலும் உள்ளது” என்கிறார் மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
“இத்தகைய பதிவுகள் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பகைமை, பழிவாங்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் விடப்படும் சவால்கள் ஆகியவை ஒன்றாகச் சேரும்போது, மோதல்கள் மேலும் தீவிரமடையலாம். அதற்கு உதாரணமாக பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன” என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பான ‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ வழக்கறிஞர் கணேசன்.
பட மூலாதாரம், Sivagangai District Police/Facebook
‘பின்புலத்தில் உள்ள சாதிய அரசியல்’
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி துறை நடத்திய ஆய்வில் (2025), திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 முதல் 22 வயதுக்குட்பட்ட 620 கல்லூரி மாணவர்களில், ’50 சதவீதத்திற்கும் அதிகமானோர் சமூக வலைதளங்களில் தங்களது சாதி அடையாளத்தை வெளிப்படுத்துவதாகத்’ தெரிவித்துள்ளனர்.
தங்களது சாதி குறித்துத் தொடர்ந்து பதிவிட்டு வருவதாக 57 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.
“இதில் 41 சதவீதத்தினர் இணையத்தில் பிற சாதியினரை ‘அவ்வப்போது’ இழிவுபடுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“சாதி அடிப்படையிலான பாகுபாடு டிஜிட்டல் தளங்களிலும் பரவி, தீங்கு விளைவிக்கும் பொதுவான கருத்துகளையும் எண்ணங்களையும் நிலைநிறுத்துகிறது என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.” என அந்த ஆய்வு கூறுகிறது.
சிவகங்கையில் கொலைசெய்யப்பட்ட மதன் என்பவரது பெயரில் உள்ள சமூக ஊடகப் பக்கத்திலும், அவர் சார்ந்த வேறு சில சமூக ஊடகப் பக்கங்களிலும் சாதிய அடையாளங்களைக் கொண்ட காணொளிகளைக் காண முடிகிறது.
“இது அனைத்துமே சாதிய பலம் என்ற புள்ளியில் இருந்து தான் தொடங்குகிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
“ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, தான் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்தும் பாடல்கள், திரைப்பட வசனங்கள், சின்னங்கள் பின்னணியில் அந்தக் காணொளிகள் இருக்கும். இப்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்” என்கிறார் அவர்.
“இதன் முக்கியமான நோக்கமே, தங்களது சாதியின் பலத்தை காட்டுவது. எங்களது சாதிக்கு நாங்கள் தான் காவலர்கள் என்று கூறுவதே இதன் அடிப்படை. இதனால் பிற சாதிகளுக்கு சவால் விடும் காணொளிகள், பதிவுகள் வருகின்றன. சில சமயங்களில் ஒரே சாதிக்குள், வெவ்வேறு குழுக்களிடையேயான மோதலாகவும் இது மாறுகிறது. தங்கள் சாதியைச் சேர்ந்த அல்லது குழுவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படும்போது, இது பழிவாங்குவதை நோக்கி நகர்கிறது”.
இத்தகைய போக்கு படித்தவர்கள், படிக்காதவர்கள் என்பதைத் தாண்டி நீள்கிறது என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
“சமூக ஊடகங்கள் அதற்கான ஒரு தளத்தை வழங்குகின்றன. நேரடியாக பிற சாதியினரைக் குறிப்பிடாமல், அவர்களை சீண்டும் வகையில் கூட பல்வேறு பதிவுகள் உள்ளன”.
பட மூலாதாரம், stalinrajangam/Instagram
‘ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு’
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வில் குறிப்பிடப்பட்ட மற்றொரு முக்கியமான விஷயம், சமூக ஊடகங்களில் இயங்கும் ‘சாதிய குழுக்கள்’.
ஆய்வில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களில் 58% பேர் தாங்கள் சமூக ஊடக சாதிய குழுக்களில் அங்கம் வகிப்பதாக தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், “இத்தகைய குழுக்கள் வெளியிடும், பிற சாதியினரை நேரடியாக அல்லது மறைமுகமாகச் சீண்டும் பதிவுகளை கண்டறிந்து, நாங்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம். ஆயுதங்களைக் காட்டி காணொளிகள் பதிவிடுவது இதில் பொதுவான அம்சம். இருப்பினும், அத்தகைய பதிவுகள் மீண்டும் வேறு பெயர்களில் அல்லது கணக்குகளில் வருகின்றன.” என்று கூறுகிறார்.
“சில பதிவுகளில் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் கேலி செய்து அல்லது பதில் சவால் விடுத்து, அதன் விளைவாகக் கூட மோதல்கள் நடந்துள்ளன. இத்தகைய பதிவுகள் பல இளைஞர்களை வன்முறையை நோக்கி மடைமாற்ற வாய்ப்புள்ளது. எனவே தான் இவ்வாறு தொடர்ந்து பதிவிடுபவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் (1959) கீழ் கூட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்கிறார் அந்த அதிகாரி.
‘பயங்கரமான ஆயுதங்களைக் காட்டி ரீல்ஸ் காணொளிகள் பதிவிட்டதற்காக மதுரையைச் சேர்ந்த சில இளைஞர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது’ என கடந்த ஜூன் மாதம், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.
“ஆயுதச் சட்டம் 1959, இந்தியாவில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் சில கத்திகள், வாள்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிற ஆயுதங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல், தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.” என விளக்குகிறார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்.
“யாராவது ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் காணொளிகளை பதிவேற்றும்போது, அந்த நபர் சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அல்லது அந்த ஆயுதம் தடைசெய்யப்பட்ட ஆயுதமாக இருந்தால் அல்லது அந்தக் காணொளி மற்றவர்களை அச்சுறுத்த அல்லது மிரட்டப் பயன்படுத்தப்பட்டால் காவல்துறை ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்” என்கிறார் அவர்.
“இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது சில சூழல்களில் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம். அதுவே ரீல்ஸ் வழியே மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்கள் என்றால் பிஎன்எஸ் பிரிவு 351-இன் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.” என்கிறார் ராஜீவ் ரூஃபஸ்.

‘சமூக ஊடகப் புகழுக்காக’
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கானா பாடல் பின்னணியில் ஒலிக்க, கையில் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட காவல்துறை நேற்று (அக்டோபர் 23) தெரிவித்தது. இதேபோல, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையும் இதே காரணத்திற்காக ஒரு இளைஞரை நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தது.
“சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக கத்தியை ஏந்துவது, அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது போன்ற செயல்களை பதிவு செய்து ரீல்ஸ்களாக வெளியிடுவதை ஒரு கலாசாரமாக மாற்றி வருகின்றனர்” என்கிறார் ‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ வழக்கறிஞர் கணேசன்.
“இதற்குப் பின்னணியில் சாதியப் போட்டி மனப்பான்மை, உளவியல் ரீதியான தாக்கங்கள் மற்றும் மாணவர்களிடையே அறநெறிக் கல்வி போதிய அளவில் வலுப்படுத்தப்படாதது உள்ளிட்ட காரணிகள் உள்ளன” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
சிவகங்கை மதன் என்பவரது கொலை தொடர்பான சில இன்ஸ்டாகிராம் பதிவுகளில் வன்முறை வெளிப்படும் வாசகங்கள் இருப்பதை இன்னமும் பார்க்க முடிகிறது.
“இவற்றில் பல பதிவுகள் இத்தகைய குற்ற வழக்குகளில் எந்தத் தொடர்பும் இல்லாத அல்லது வெளியூர் நபர்களால் பதிவு செய்யப்படுகிறது. மறுபுறம், ‘ட்ரெண்ட்’ என்ற பெயரில் சிலர் இதைச் செய்கிறார்கள். சிலர் அதிக ‘லைக்குகள்’ பெறச் சேர்கிறார்கள்” என்கிறார் தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி.
“இதன் பின்னணியில் உள்ள இளைஞர்களை அழைத்து விசாரிக்கிறோம். அது எந்த மாதிரியான பதிவு என்பதைப் பொறுத்து வழக்கு பதிவு செய்து, கைது செய்கிறோம். சிலரின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கிறோம். வன்முறையைத் தூண்டும் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மட்டுமின்றி, அவற்றைப் பகிர்ந்து மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்கிறார் அவர்.
தனிநபர்களைக் குற்ற நோக்கத்துடன் மிரட்டுதல், போதைப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், சட்டவிரோத ஆயுதங்களைக் காட்சிப்படுத்துதல் அல்லது சட்டவிரோதச் செயல்களைத் தூண்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதற்காகவே, கடந்த பிப்ரவரி மாதம் ‘ஆபரேஷன் டிஜிட்டல் விஜில்’ தொடங்கப்பட்டு, தென் மாவட்டங்கள் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்.
“போலிக் கணக்குகள் மற்றும் மாற்றுப் பெயர்களில் செயல்படுபவர்களைத் தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து விசாரிக்கிறோம். இதுபோன்ற பதிவுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்” என்கிறார் விஜயேந்திர பிதாரி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு