• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்: தமிழக அரசு பெருமிதம் | Ford plans comeback by restarting manufacturing plant in Tamil Nadu

Byadmin

Sep 14, 2024


சென்னை: ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “ஃபோர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர்பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ஃபோர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளதுஇம்மையத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அமெரிக்க நாட்டின் ஃபோர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை 1700 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நிறுவப்பட்டு 1999ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இத்தொழிற்சாலையில், ஃபோர்டு ஐகான், ஃபோர்டு என்டவர், ஃபோர்டு ப்யூஷன், ஃபோர்டு ஃபியஸ்டா ரகக் கார்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையை 1,500 கோடி ரூபாய் கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவும் புதிதாக என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவிடவும் கருணாநிதி முன்னிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு புரிந்துண‌ர்வு ஒப்பந்தம் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தோடு கையெழுத்தானது. இதன்மூலம் அத்தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் இருமடங்காக உயர்ந்ததுடன், ஆண்டு ஒன்றுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்களைத் தயாரிக்கவும் தொடங்கியது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் , அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. இதன்வாயிலாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உலகத்தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், திறன்மிக்க இளைஞர் சக்தி குறித்தும், உலக அளவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழகத்தின் தொழில் துறையில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்தும் உலகளாவிய திறன் மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்று வருவது குறித்தும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நிர்ணயித்து, அதனை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் எடுத்துரைத்ததன் பலனாக ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.

உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது உற்பத்தியை நிறுத்திய பிறகு, அதே மாநிலத்தில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவது என்பது அரிதானதாகும். ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளதன் மூலம் ஆசியாவின்

“டெட்ராயிட்” ஆக தமிழ்நாடு விளங்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin