
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
‘தாயின் நஞ்சுக் கொடியில் கூட மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன. அத்தகைய துகள்கள் நஞ்சுக் கொடியைக் கடந்து வளரும் கருவின் ஒரு பகுதியாக மாறினால் அது மிகவும் கவலைக்குரியதாக அமையும்’
‘மக்காத பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் தடுப்பு அரண்களைக் கடந்து ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இவை ரத்த நாளங்கள் வழியாக மற்ற உறுப்புகளுக்குச் செல்கின்றன என்பதை அனைத்து ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன’
திங்கள்கிழமையன்று (செப்டம்பர் 28) சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இந்த வரிகள் இடம்பெற்றுள்ளன. மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் என்பது மிக சிறிய பிளாஸ்டிக் துகள்களாகும்.
‘பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீர், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றில் சிவப்பு எச்சரிக்கை வாசகங்களை அச்சிட வேண்டும்’ என்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனுத்தாக்கல் செய்திருந்தது.
‘இது பரிசீலனைக்குரியவை அல்ல’ எனக் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். வழக்கின் உத்தரவில் நீதிபதிகள் சொன்ன காரணம் என்ன?
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், தாயின் நஞ்சுக்கொடியில் (Placenta) பிஸ்பினால் ஏ என்ற ரசாயனம் கண்டறியப்பட்டதாகக் கூறியது.
பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் ஏ (BPA) உடல்ரீதியாக பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொடக்கநிலை ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமர்வுகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, இதுதொடர்பாக ஆராயுமாறு மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறைகளுக்கு உத்தரவிட்டது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் வகைகளை வளர்ந்து வரும் மாசுக்கள் என்றும் உணவுப் பொருள்களில் அவற்றின் பரவல் குறித்து அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகக் கூறியிருந்தது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இதனைச் செயல்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்கை அடையாளம் காணவும் அவற்றின் அளவைத் தீர்மானிக்கவும் பகுப்பாய்வு முறைகள் மூலம் சரிபார்ப்பது இதன் நோக்கமாக உள்ளதாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
‘உப்பு, குடிநீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்கள்’
பட மூலாதாரம், Getty Images
சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பானங்கள், பிளாஸ்டிக் குடிநீர் குடுவைகள், உலர்ந்த மீன்கள், மீன் உணவு ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது’ எனக் கூறியது.
இதன் முதற்கட்ட ஆய்வில் அயோடின் கலந்த உப்பு, கருப்பு உப்பு (black salt), பாறை உப்பு (rock salt) ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், ‘இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்தது.
அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, ‘குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்வது தொடர்பாக அதன் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன்படி,
- ‘பிளாஸ்டிக் குடுவைகளில் விற்கப்படும் குடிநீரில் மைக்ரோ பிளாஸ்டிக், அல்லது நானோ பிளாஸ்டிக் இருக்கலாம்’ என்ற அறிவிப்பு லேபிளில் இடம்பெற வேண்டும்.
- ‘உப்பு, சர்க்கரை ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் அல்லது நானோ பிளாஸ்டிக் இருக்கலாம்’ என்ற அறிவிப்பு லேபிளில் இடம்பெற வேண்டும்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்வைத்த வாதம் என்ன?
நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மற்றும் சுற்றுச்சூழலுக்கான பெட் பேக்கேஜிங் சங்கம் (PACE) சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாக்கல் செய்த மனுவில், ‘மனித உடலில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தீங்கு குறித்த ஆய்வுகள் உறுதியான முடிவை எட்டவில்லை. அவை ஆரம்ப நிலையில் உள்ளன’ எனக் கூறியது.
அந்தவகையில், ‘உறைகளின் மீது தடித்த எழுத்துகளில் எச்சரிக்கையை அச்சிடக் கோருவது பொதுமக்களிடையே அச்சத்தையும் விநியோக சங்கிலியில் இடையூறுகளையும் ஏற்படுத்தும்’ எனவும் தெரிவித்தது.
வழக்கின் வாதத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் FSSAI கருத்தில் கொள்கிறது. தற்போதைய நிலையில் லேபிளிங் முறையைக் கையாள வேண்டிய அவசியமில்லை” என வாதிட்டார்.
சாத்தியமான உடல்நல அபாயங்கள் குறித்த லேபிளிங் அல்லது பிற ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
‘மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகியவை மனித உடலில் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்’ என்பதற்கு உறுதியான ஆதாரங்களோ, அறிவியல்பூர்வ சான்றுகளோ இல்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாகவும் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
‘வெளிநாட்டவருக்கு அச்சம் ஏற்படும்’
தொடர்ந்து வாதிட்ட அவர், மனித ஆரோக்கியத்தை மைக்ரோ பிளாஸ்டிக் பாதிக்கக் கூடும் என சில ஆய்வுகள் சுட்டிக் காட்டினாலும் உணவுப் பொருட்களில் காணப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் மனித நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை சான்றுகள் உறுதிப்படுத்தவில்லை” எனக் கூறினார்.
மனித உடல் தாங்கக்கூடிய மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் அளவு குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் ஆனால், அளவு குறித்த முடிவு இன்னமும் எட்டப்படவில்லை எனவும் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பிளாஸ்டிக் குடிநீர் குடுவைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகக் கூறியிருந்தது.
இதனை தனது வாதத்தில் தெரிவித்த ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இது பேக்கேஜிங் பொருட்களில் இருந்து மட்டும் கசிந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. நீரின் ஆதார மூலம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம். உப்பு, சர்க்கரையிலும் இதே நிலை தான்” எனக் கூறினார்.
இது வளர்ந்து வரும் மாசுப் பொருளாக உள்ளதாகக் கூறிய அவர், “நீதிமன்றம் கூறியவாறு குறியீட்டை (label) இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உலகின் எந்த நாடுகளிலும் இல்லை. அது சாத்தியமற்றது” எனத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் உணவுப் பொருட்களில் இத்தகைய குறியீடுகளைப் பார்க்கும்போது அவர்களுக்குள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அவர் வாதிட்டார்.
சுற்றுச்சூழலுக்கான பெட் பேக்கேஜிங் சங்கம் (PACE) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், குடுவைகளில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு இந்திய தரநிலைப் பணியகம் (Bureau of Indian Standards) வகுத்துள்ள விதிகளை தங்கள் அமைப்பும் உறுப்பினர்களும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
‘உண்மையை வெளிப்படுத்த வேண்டும்’
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஓர் உணவைப் பாதுகாப்பற்றது என அறிவிப்பதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை என்பது குறித்து முன்வைக்கப்படும் வாதங்கள் பரிசீலனைக்குரியவை அல்ல” எனக் கூறினர்.
“உறைகளில் அடைக்கப்பட்ட குடிநீர், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை பாதுகாப்பற்ற உணவு என்று அறிவிக்கவோ அல்லது அதுபோன்ற கருத்தை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை” எனக் கூறிய நீதிபதிகள், ‘மனித உடலில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்கின் தாங்கும் அளவு (tolerance level) கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டனர்.
‘உறைகளில் அடைக்கப்பட்ட குடிநீர், சர்க்கரை அல்லது உப்பில் மைக்ரோ அல்லது நானோ பிளாஸ்டிக் இருப்பதை FSSAI, PACE ஆகிய அமைப்புகள் ஒப்புக் கொள்கின்றன. அவர்கள் அதை மறுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘ஒரு பொருளுக்குள் ஏதேனும் உள்ளடங்கியிருந்தால் அதுகுறித்த விவரத்தை லேபிளில் குறிப்பிடுவது கட்டாயம். குறியீட்டை செய்வதன் அடிப்படை நோக்கமே உண்மையை வெளிப்படுத்துவது தான்’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வணிகரீதியான பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக உண்மைகளை மறைத்துவிட வேண்டும் என்பதையே மேற்கண்ட வாதங்கள் கோருவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
‘தாய்ப்பாலில் பிளாஸ்டிக் துகள்கள்’
மக்காத பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைந்தவுடன் தடுப்பு அரண்களைத் தாண்டி ரத்த ஓட்டத்தில் நுழைந்து ரத்த நாளங்களுக்குச் செல்வதாக அனைத்து ஆய்வுகளும் உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ‘நஞ்சுக் கொடி மாதிரிகள் மற்றும் தாய்ப்பாலில் கூட இந்தத் துகள்கள் இருந்தன’ எனக் குறிப்பிட்டனர்.
இதனால் ஏற்படும் தீங்குகளை உறுதிப்படுத்துவதற்கு நோய்ப் பரவல் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்த நாடுகளில் லேபிளிங் முறை பின்பற்றப்படவில்லை என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படும் பிற நாடுகளைவிட நம் நாட்டில் நிலவும் சூழல் மாறுபட்டது” எனக் குறிப்பிட்டனர்.
தீர்ப்பில், ‘2024-25 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் குடுவைகளின் (PET) பயன்பாடு 1.9 மில்லியன் டன்என்ற அளவில் இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் 1.10 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது. அந்தவகையில் ஆண்டுக்கு 12 முதல் 14 சதவிகித அளவு பயன்பாடு அதிகரித்து வருகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை கவலைக்குரிய விஷயமாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் எந்தளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதை தீர்மானிப்பதற்கு மறுஆய்வு தேவை என்ற மனுதார்களின் வாதம் தேவையற்றது’ எனக் கூறினர்.
அந்தவகையில், தகவல்களின் அடிப்படையில் நுகர்வோர் முடிவெடுப்பதற்கு ஏதுவாக (informed choice) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
‘350 நஞ்சுக் கொடி மாதிரிகளில் ஆய்வு’

நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாகக் கூறுகிறார், பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக மருத்துவத் துறையின் இயக்குநர் மருத்துவர் சுதா ராமலிங்கம்.
இவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. “எங்கள் ஆய்வில் 350 நஞ்சுக் கொடி மாதிரிகள் உட்படுத்தப்பட்டன. தாயின் நஞ்சுக்கொடியில் பிஸ்பினால் ஏ சற்று அதிகமாக உள்ளது” என்கிறார்.
தாயின் உடல்நிலை, குழந்தை பிறப்பு, அதன் எடை, பிரசவத்தின் போதிருந்த நிலை ஆகியவற்றை ஆராய்ந்து வருவதாகக் கூறிய மருத்துவர் சுதா ராமலிங்கம், “பிறந்த குழந்தையின் எடைக்கும் பிஸ்பினால் ஏ-வுக்கும் தொடர்புள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
“ஆனால், பிஸ்பினால் ஏ எப்படி வந்தது என்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிவது கடினம்” எனக் கூறிய அவர், “நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகள், வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனம், சாம்பார் உள்ளிட்ட உணவுகளை வாங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறைகள் ஆகியவற்றில் உள்ளது” என்கிறார்.
பிஸ்பினால் ஏ ரசாயனம் – என்ன ஆபத்து?

இதே கருத்தை முன்வைக்கிறார், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளுடன் இவை இணைந்துவிடுவதால் நச்சு ரசாயனம் எனக் கூறுகின்றனர். உடலின் அமைப்பையே சீர்குலைக்கும் பணியை இது செய்கிறது” என்கிறார்.
உணவகங்களில் சாம்பார் உள்ளிட்டவற்றை ஊற்றித் தரப்படும் பாலித்தீன் பைகள் குறித்துப் பேசும் பார்த்திபன், “அதிக வெப்பநிலையில் இவை உருகும். பாலித்தீன் பைகளில் பிஸ்பினால் ஏ இருந்தால் அது உணவுடன் இணைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்” எனக் கூறுகிறார்.
காலநிலை மாற்றம், காற்று மாசு, காற்றின் தரம் ஆகியவற்றின் மூலம் பின்விளைவுகள் அதிகமாகிக் கொண்டே செல்வதாகக் கூறுகிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.
“நீரிழிவு நோய், இதயநோய் அதிகரிப்பது போன்றவை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோது சில விஷயங்கள் தெரியவந்தன” என அவர் தெரிவித்தார்.
“பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” எனக் கூறும் மருத்துவர் சுதா ராமலிங்கம், “நம்மால் முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்த வேண்டும்” என்கிறார்.
“நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் ரசாயனங்கள் (Endocrine disruptors) குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் ஆய்வு நடந்து வந்தாலும் கொள்கை அளவில் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு