திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவ பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், துணைவேந்தர் “மாணவிகள் ‘ஷார்ட்ஸ்’ அணிவது மற்றவர்கள் அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கான ‘அழைப்பாக இருக்கும்’ என கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் பெருமளவில் போராட்டம் நடத்தினர்.
கடும் எதிர்ப்பு எழவே, “மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவே தான் கருத்து கூறியதாகவும் அக்கல்வி நிறுவனம் கிராமத்திற்குள் இருப்பதால் அதற்கேற்றாற் போல் உடையணிய வேண்டும் என்ற பின்னணியிலேயே அவ்வாறு கூறியதாகவும்” துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், அவருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என மாணவர்கள் கூறுகின்றனர். என்ன நடந்தது?
என்ன நடந்தது?
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி வகுப்பு பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில், துணைவேந்தர் வி.நாகராஜ் உள்ளிட்டோரும் கல்லூரி பணியாளர்கள், மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது, மாணவிகள் ‘ஷார்ட்ஸ்’ அணிவது கல்லூரி பணியாளர்கள் உட்பட்டோருக்கு ‘கவனச்சிதறலை” ஏற்படுத்தும் என்றும் அது “பாலியல் துன்புறுத்தலுக்கான அழைப்பாக” இருக்கும் என்றும் துணைவேந்தர் நாகராஜ் கூறியதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாணவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், “பெங்களூருவில் அமைந்துள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் முன்பு பணியாற்றியபோதும் இதுபோன்ற ஒரு கருத்தைக் கூறியதாகவும் அதுகுறித்து தான் “பெருமை கொள்வதாகவும்” துணைவேந்தர் கூறியதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “துணைவேந்தர் தற்போது இரண்டு நிறுவனங்களில் தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியிருப்பது, ஒரு தனிப்பட்ட தவறான முடிவைக் குறிக்கவில்லை; மாறாக, துன்புறுத்தலை இயல்பாக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் ஒரு நிறுவன ரீதியான நடத்தை முறையையே இது காட்டுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கருத்தைத் துணைவேந்தர் திரும்பப் பெற்று மன்னிப்பு கோர வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் நிறுவன ரீதியிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஆடை தேர்வு துன்புறுத்தலுக்கு வழிவகுக்காது என்பதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பட மூலாதாரம், Handout
“நிர்வாகம் சார்பில் மாணவ பிரதிநிதிகளுடன் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படும். மாணவர்கள் தரப்பில் இருக்கும் குறைகள், பிரச்னைகள் அக்கூட்டத்தில் முன்வைக்கப்படும். அப்போது, துணைவேந்தர் நாகராஜ், பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கையை மேம்படுத்துவது குறித்து பேசினார்.
அப்போது, மாணவிகள் ‘ஷார்ட்ஸ்’ அணிவது கல்லூரி பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதற்கான “அழைப்பாக” (invite) இருக்கும் என துணைவேந்தர் கூறினார். அங்கிருந்த ஒரு பெண் பணியாளர் உட்பட யாரும் இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. துணைவேந்தரின் கருத்து, எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.” என்கிறார், பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையின்பேரில் பிபிசி தமிழிடம் பேசிய அப்பல்கலைக்கழக மாணவி ஒருவர்.
இதையடுத்து, மாணவ, மாணவிகள் ஷார்ட்ஸ் அணிந்து, கடந்த ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவு நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
வியாழக்கிழமை இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் மாணவர்கள், நிர்வாகம் சார்பாக அன்று யாரும் வந்து பேசவில்லை என்கின்றனர்.
“பல்கலைக்கழகத்தில் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினோம். நிர்வாகம் சார்பில் யாரும் வந்து எங்களை பார்க்கவில்லை. ஒரு சிறிய விஷயம் நடந்தாலே நிர்வாகம் சார்பில் வந்து பேசுவார்கள். ஆனால், அவ்வளவு பெரிய போராட்டத்தை மாணவர்கள் திரண்டு இரவு முழுவதும் நடந்தபோது நிர்வாகம் சார்பில் யாரும் பேசவில்லை” என்கிறார் அந்த மாணவி.
தன் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் பிபிசி தமிழிடம் பேசிய அப்பல்கலைக்கழக மாணவர் ஒருவர், “மறுநாளான வெள்ளிக்கிழமை பதிவாளர், துணைவேந்தர் உள்பட நிர்வாகம் சார்பில் எங்களிடம் பேசினர். மேலும் தன் பேச்சு குறித்து விளக்கமளித்து துணைவேந்தர் தரப்பில் விளக்கம் அளித்து அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று கூட்டத்தில் விவாதித்தபோது, மாணவிகள் ‘ஷார்ட்ஸ்’ அணிவது குறித்து துணைவேந்தர் கருத்து தெரிவித்தார். தன் கருத்தை அவர் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்போ கோரவில்லை. அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது குறித்து மாணவர்களிடம் பேசிவருகிறோம். அதனடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்,” என்றார்.
பட மூலாதாரம், Social Media
துணைவேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஏப்ரல் 19 அன்று துணைவேந்தர் நாகராஜ் அதிகாரபூர்வமாக இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மாணவர்கள் 16, 17 ஆகிய தேதிகளில் நடத்திய போராட்டங்களுக்கு முன் அனுமதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சங்க தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அக்குறிப்பிட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக துணைவேந்தர் தன் விளக்கத்தில் கூறியுள்ளார்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் துணைவேந்தராக பொறுப்பேற்றபோது பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, நிதிநிலைமை உள்ளிட்ட பல விஷயங்கள் முறையாக இல்லை என்றும், அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தான் தெரிவித்ததாக துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில், அந்த பல்கலைக்கழகத்தை உயர் இடத்துக்குக் கொண்டு வருவதற்கும் அதன் பிம்பத்தை மேம்படுத்துவதற்கும் என்ன செய்யலாம் என மாணவர்களிடம் தான் கேள்வியை முன்வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
“பல கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடுகள் குறித்து பேசப்படுவதில்லை. அதுகுறித்து இப்பல்கலைக்கழக மாணவர்கள் ஏதேனும் செய்தால், அது இக்கல்வி நிறுவனத்தின் பிம்பத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும். என்னால் ஆடை விதிமுறைகளை புகுத்த முடியாது என்பதையும் நான் கூறினேன். அப்போது, 2016ம் ஆண்டில் பெங்களூருவில் அமைந்துள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளியில் ஆடை விதிமுறைகள் தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டேன்.” என அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Handout
மேலும் அவர், ”அதன் பின்னணியில், சிலவித ஆடைகள் பல்கலைக்கழக வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் (பெண்கள் விடுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது), வருகை தருபவர்கள், கடைகள் வைத்திருப்பவர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். மேலும், இக்கல்வி நிறுவனம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்டு அமைந்திருப்பதால், உடைகள் அணிதல், நடத்தைகள் போன்றவற்றில் பொதுவாகவே தங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம், வெளிநபர்களிடமிருந்து தேவையற்ற கவனமோ, கருத்துகளோ ஏற்படாது.” என குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 29, 2026 அன்று கல்வி நிறுவனத்தின் உள்மட்ட புகார் குழுவுக்கு (ஐசிசி) வந்த ஒரு புகார் குறித்து மாணவர்களிடம் கூறி, பாதுகாப்பு குறித்து தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“தன்னுடைய கருத்து பல்கலைக்கழகத்தின் மாணவ சமூகத்தினர், பணியாளர்கள், நிர்வாக பணியாளர்களை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதில் எந்த தயக்கமும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
ஆனால், துணைவேந்தரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்கிறார், பிபிசியிடம் பேசிய மாணவி.
“துணைவேந்தர் அக்கருத்தை எந்த பின்னணியில் பேசினாலும் தவறுதான். அங்கு கட்டட வேலை செய்பவர்களை குறிப்பிட்டு தொழிலாளர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்றெல்லாம் விளக்கத்தில் கூறியிருப்பது, வகுப்புரீதியாக அவர்களை பொதுபார்வையுடன் அணுகுவது போன்று உள்ளது. அதேபோன்று, கிராமத்தில் இருப்பதால் உடைகளை அதற்கேற்றாற்போல் அணிய வேண்டும் என கூறுவதும் தவறானதாக உள்ளது. அந்த கூட்டத்தில் துணைவேந்தர் குறிப்பிட்டது போன்று ஐசிசி புகார் குறித்து எதுவும் பேசப்படவில்லை.” என்றார்.
அதேபோன்று, பிபிசியிடம் பேசிய மாணவரும், “துணைவேந்தர் தன் கருத்தை திரும்ப பெறவில்லை. மன்னிப்பும் கோரவில்லை. மாறாக, புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன் என்றே கூறுகிறார். இது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை” என்றார்.
இந்த விஷயத்தில் துணைவேந்தர் அளித்த விளக்கம் தெளிவாக உள்ளதாக கூறுகிறார், பல்கலைக்கழகத்தின் சார்பில் பேசிய உயர்மட்ட அதிகாரி ஒருவர்.
அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின்பேரில் பிபிசி தமிழிடம் பேசினார்.
அவர் பேசுகையில், “துணைவேந்தர் தன் கருத்து குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அவருடைய கருத்தை மாணவர்கள் உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக புரிந்துகொண்டுள்ளனர். எனினும் , இறுதியில் அவருடைய விளக்கமே பொருத்தமாக இருக்கும். அந்த கூட்டத்தில் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. ஐசிசி புகார் ஒன்றை குறிப்பிடும்போதே, துணைவேந்தர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதன் பின்னணியிலேயே அக்கருத்தை பார்க்க வேண்டும். மேலும், உடை கட்டுப்பாடு குறித்து அவர் எதுவும் கூறவில்லை, மாணவர்களிடம்தான் கருத்து கேட்டார். தான் எந்த விதிமுறையையும் புகுத்துவேன் என கூறவில்லை.” என்றார்.