“என் பக்கத்துக்கு வீடுகளில் ஒருசில மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே, ‘இன்று வீட்டில் எந்த வேலையையும் ஒழுங்காக செய்யமுடியவில்லை’ எனக் கூறுவார்கள். ஆனால், எங்கள் குடும்பம் 17 வருடங்களாக மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறோம்”.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார்.
திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தனது வீட்டிற்கு மட்டும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என்கிறார் நந்தினி.
நந்தினியின் வீட்டிற்கு மேலே தாழ்வழுத்த மின்பாதை செல்வதால், அதை மாற்றி அமைக்க பங்களிப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, பணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், “40,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள், நான் கூலி வேலைக்குச் செல்பவள். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது” என்கிறார் நந்தினி.
‘அன்றாட வாழ்க்கை பாதிப்பு’
படக்குறிப்பு, கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலாஜி 10ஆம் வகுப்பும், பிரபாவதி 9ஆம் வகுப்பும் படித்து வருகிறார்.
நந்தினி வேல்முருகனுக்கு திருமணமாகி பாலாஜி, பிரபாவதி என இரு பிள்ளைகள் உள்ளனர். கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலாஜி 10-ஆம் வகுப்பும், பிரபாவதி 9-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். கணவர் வேல்முருகன், உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதாக நந்தினி கூறுகிறார்.
“நாங்கள் இருவரும் படிப்பறிவு அற்றவர்கள். அதனால் என் பிள்ளைகளுக்கு கல்வி முக்கியம் என்பதை அறிந்துள்ளேன். ஆனால் தினமும் தெருவில் அமர்ந்து, வீட்டின் முன் உள்ள தெரு விளக்கின் வெளிச்சத்தில் தான் என் பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்கின்றனர், தேர்வுகளுக்கு படிக்கின்றனர்.” என்கிறார் நந்தினி.
தனது வீட்டில் செல்போன்கள் தவிர்த்து வேறு எந்த மின் சாதனங்களும் இல்லை எனக்கூறும் நந்தினி, “செல்போன்களுக்கு சார்ஜ் போட சற்று தூரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வோம், அவசரத்திற்கு அண்டை வீடுகளில் சார்ஜ் செய்துகொள்வோம்” என்கிறார்.
“பகலில் வேலைக்குச் செல்லும் முன், வீட்டு வேலைகளை முடித்துவிடுவேன். இரவு உணவு தயார் செய்வது என்பது மெழுகுவர்த்தி அல்லது டார்ச் வெளிச்சத்தில் தான். ஒருமுறை இருட்டில் அமர்ந்து சாப்பிடும்போது பூச்சிகள் விழுந்து பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எனவே இப்போது இரவில் தெருவில் தான் அமர்ந்து உண்கிறோம்” என்கிறார்.
“உறங்குவதும் கூட வீட்டு வாசலில், தெருவில் தான். பிள்ளைகள் தொலைக்காட்சி பார்க்க அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் செல்வார்கள். அண்டைவீட்டார்களும் அவ்வப்போது உதவிகள் செய்கிறார்கள், ஆனால் மின்சாரம் இல்லாத அன்றாட வாழ்க்கை என்பது கொடுமையாக உள்ளது.” என்கிறார் நந்தினி.
படக்குறிப்பு, நந்தினியின் வீட்டின் மேல் தாழ்வழுத்த மின் பாதை செல்கிறது என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மழை காலங்களில் தானும் தனது தங்கையும் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதாகக் கூறுகிறார் நந்தினியின் மகன் பாலாஜி.
“இரவில் தெருவில் அமர்ந்து தான் படிப்போம், தினமும் பக்கத்துக்கு வீடுகளுக்கு சென்று படிப்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும் அல்லவா?” என்கிறார் அவர்.
தன்னுடைய வீட்டிற்கு நண்பர்கள் யாரையும் இதுவரை அழைத்து வந்ததில்லை எனக் கூறும் பாலாஜி, “என் வீட்டில் மின்சாரம் இல்லை என்றும் கூறியதில்லை. அது தெரிந்தால் கேலி செய்வார்களோ என்று பயம்.” என்கிறார்.
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சருமான சி.டி.ஆர் நிர்மல்குமார் இரு மாதங்களுக்கு முன்பாக தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது, அவரைச் சந்தித்து மனு அளித்ததாகக் கூறுகிறார் பாலாஜி.
“அமைச்சர் அருகில் இருந்த மின்துறை அதிகாரிகளை அழைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு என் முன்னால் அறிவுறுத்தினார். ஆனால், இன்றுவரை எங்கள் வீட்டிற்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை” என்று கூறுகிறார் பாலாஜி.
“இது தொடர்பாக அண்டை வீட்டாரின் உதவியோடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவும் அளித்தோம்.” என்று குறிப்பிடுகிறார் நந்தினி.
மின்வாரிய அதிகாரிகள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாழ்வழுத்த மின் பாதை என்பது மின்மாற்றிகளில் இருந்து வீடுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கம்பிகள் ஆகும் (விளக்கப் படம்)
நந்தினி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்ததாக பனையூர், உதவி மின்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில், “வேல்முருகன் என்பவரது வீட்டின் மேல் தாழ்வழுத்த மின் பாதை செல்கிறது. அந்த மின் பாதையை மாற்றி அமைக்க பங்களிப்பு திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய மதிப்பீட்டு கட்டணத்தை செலுத்தும் பட்சத்தில் மின்பாதை மாற்றி அமைக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“புதிய மின் இணைப்பு வேண்டுமெனில் மனுதாரர் பெயரில் நடப்பு வீட்டுவரி ரசீது அல்லது பத்திர நகல் அல்லது கணினி பட்டா மற்றும் ஆதார் நகலுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மின் இணைப்பு கோரும் இடம் புறம்போக்கு இடம் எனில் துணைவட்டாட்சியரிடமிருந்து புதிய மின் இணைப்பு வழங்க தடையில்லா சான்று பெற்று இணைக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்” என்று அந்த விளக்கக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த மின் பாதை என்பது உள்ளூர் மின்மாற்றிகளில் இருந்து வீடுகளுக்கும் பிற நுகர்வோருக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கம்பிகள் ஆகும். பொதுவாக, தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் இந்த மின் கம்பிகள் செல்வதையும், அதிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக மின் இணைப்பு வழங்கப்படுவதையும் காணலாம். பெரும்பாலும் இவற்றில் மூன்று பேஸ் கம்பிகளும் ஒரு நியூட்ரல் கம்பியும் இருக்கும்.
படக்குறிப்பு, திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் தனது வீட்டிற்கு மட்டும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என்கிறார் நந்தினி.
தமிழக மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி, தாழ்வழுத்த மின்பாதை கட்டடத்திற்கு மேலே செல்லும்போது மின்கம்பிக்கு நேர் கீழே 2.5 மீட்டர் செங்குத்து இடைவெளி இருக்க வேண்டும். மின்பாதை கட்டடத்திற்கு அருகில் செல்லும்போது, 1.2 மீட்டர் கிடைமட்ட இடைவெளி இருக்க வேண்டும். இதற்கு குறைவான இடைவெளி இருந்தால் அந்த கட்டடத்திற்கு புதிய மின்சார இணைப்பு வழங்க முடியாது.
மின் இணைப்பு, மின்பாதை, மின்கம்பம் அல்லது மின் சாதனங்களை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கான முழுச் செலவையும் நுகர்வோர் அல்லது விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
இதற்கான முழு மதிப்பீட்டுத் தொகையையும் நுகர்வோர் முன்கூட்டியே செலுத்த வேண்டும். முழுத் தொகையையும் செலுத்திய பிறகே இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
பொதுநலன் அல்லது அரசு உள்கட்டமைப்பு சார்ந்த சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து, மற்ற சாதாரண நேர்வுகளில் மின்வாரியம் இலவசமாக மின்பாதைகளை மாற்றித் தர மாட்டாது.
செப்டம்பர் 2023 முதல், இதற்கான விண்ணப்பங்கள் மின்வாரிய இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே பெறப்படுகின்றன என தமிழக மின்சார வாரியம் தெரிவிக்கிறது.
மதுரை மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?
இது குறித்துப் பேசிய நந்தினி, “மதிப்பீட்டு கட்டணம் என்று 40,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள். கூலி வேலைக்குச் செல்லும் என்னால் எப்படி அவ்வளவு பணம் கொடுக்க முடியும். இந்த வீடு என் மாமனார் கட்டியது, பட்டா குறித்து எல்லாம் எனக்கு எதுவும் தெரியவில்லை” என்கிறார் அவர்.
“எவ்வளவோ அதிகாரிகளை பார்த்துவிட்டோம், எங்களுக்கு அவர்கள் கூறும் பல விளக்கங்கள் புரியவில்லை. என்னுடைய கேள்வி எளிமையானது, பக்கத்து வீடுகளுக்கு மின்சாரம் உள்ளது, எங்களுக்கு ஏன் 17 வருடங்களாக இல்லை?” என்று கேள்வியெழுப்புகிறார் நந்தினி.
இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
“வேல்முருகன் என்பவரது வீடு ‘நத்தம் புறம்போக்கு’ நிலத்தில் (கிராமங்களில் மக்கள் குடியிருப்பதற்காக அரசு ஒதுக்கிய இடம்) அமைந்துள்ளது. பட்டா மூலம் வீட்டு வரி ரசீது பெற்று சமர்ப்பித்தால் தான் மின்வாரிய அதிகாரிகள் புதிய மின்சார இணைப்பு அளிப்பார்கள் அல்லது தாசில்தாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இந்தச் செயல்முறைகள் குறித்து அக்குடும்பத்திற்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு, அவர்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.