• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பூர்: பெண் ஜவுளி தொழிலாளர்களின் மாதவிடாய் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு

Byadmin

Jun 7, 2026


மாதவிடாய் சுகாதாரம், வெப்ப அலை, ஆடை தொழிற்சாலைகள்
படக்குறிப்பு, கௌரி

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் வெப்ப அலையால் மாதவிடாய் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். அதுகுறித்து பிபிசி தமிழின் கள ஆய்வு)

ஒரு வீட்டின் மாடியில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறியளவிலான ஆடை தொழிற்சாலைக்குள் நுழைந்தபோதே அனல் வீசியதை நம்மால் உணர முடிந்தது. 10 மின் தையல் இயந்திரங்கள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தன. இயந்திரத்தையோ அல்லது அமரும் இடத்தையோ தொட்டாலே வெப்பத்தை உணர முடிகிறது.

திருப்பூரில் தாராபுரம் சாலையில் உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது அந்த தொழிற்சாலை. வெளியே சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் தகித்தது. அதன் தாக்கம் ஆடை தொழிற்சாலைக்குள்ளும் நிலவியது. அங்கு காலையில் இருந்து கடும் வியர்வையுடன் துணிகளை தைத்துக் கொண்டிருந்த கௌரியை சந்தித்தோம்.

கோடை காலத்தில், தனக்கு மாதவிடாய் ஒழுங்கின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

“வெயில் காலத்தில் மாதவிடாய் நேரத்தில் அடிவயிற்றை பிய்த்துப்போட்டது போன்று வலி இருக்கும். ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்ல முடியாது. அதற்கான பொருளாதார சூழல் எனக்கு இல்லை. நானே மெடிக்கல் சென்று வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கிக்கொள்வேன். வலி மிகவும் அதிகமாக இருந்தால் அதற்கென ஊசி போட்டுக்கொள்வோம். மாதவிடாய் ஏற்படும் 5 நாட்களும் இந்த நிலைதான்” என்கிறார் கௌரி.

By admin