திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இன்று காலையில் அங்கு சுமார் 60க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தபோது அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இந்த வாயுவை சுவாசித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷ சாயி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?
கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில், “பிரஷர் வால்வில் இருந்து கசிந்த அம்மோனியா வாயுவை அங்கிருந்த தொழிலாளர்கள் நுகர்ந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டது,” என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்படியாக, “மயக்கம், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளோம். அரசு மருத்துவமனை மட்டுமின்றி சிலர் வேல்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி நல்ல நிலையில் இருப்பவர்கள் அருகில் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று ஆட்சியர் கவிதா நிலவரம் குறித்து விவரித்தார்.
மேலும் பேசிய அவர், “வாயுக் கசிவு ஏற்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். இப்போதைக்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று விளக்கினார்.
பட மூலாதாரம், HANDOUT
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் குமுதா, “சிகிச்சைக்கு வந்தவர்களில் சிலர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருப்பதாக” தெரிவித்தார்.
அத்துடன், “இங்கு சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றாலும், பெரிதும் அச்சப்படும் அளவுக்கு இல்லை. அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரேயொரு ஆண் என்றும் மீதம் அனைவரும் பெண் தொழிலாளர்கள்” என்றும் கூறிய அவர், “அவர்களும் சுமார் 20 முதல் 23 வரையிலான வயது வரம்புகளில் இருப்பதால், விரைவில் குணமாகிவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார் மருத்துவர் குமுதா.
அமைச்சர் குமார் கூறியது என்ன?
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் பொறுப்பு அமைச்சர் குமார், “உயர்மட்ட மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
பட மூலாதாரம், HANDOUT
பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே வடமாநில தொழிலாளர்கள் என்று கூறிய அமைச்சர் குமார், “அவர்களில் 60 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இவற்றுடன், இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விளக்கிப் பேசிய அவர், “சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு இறால் பண்ணை, அங்கு பதப்படுத்தி வைக்கும் சேமிப்புக் கிடங்கில் இருந்த அம்மோனியா மூலமாக இயங்கி வந்த குளிரூட்டியில் ஏற்பட்ட கசிவால் விபத்து நிகழ்ந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இன்னும் விரிவாக விசாரணை நடத்தி, ஆராய்ந்து முழு தகவல்களையும் தெரிவிக்கிறோம்,” என்றார்.
கூடுதலாக, நிறுவனத்தின் உரிமையாளர்கள் காவலில் எடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் குமார், “அவசர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் உள்ளனர். மற்றவர்கள் உடல்நிலை பயப்படக்கூடிய கட்டத்தைத் தாண்டி முன்னேறிவிட்டது” என்றார்.
தொழில்துறை சட்டத்தின்கீழ் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம், முதலமைச்சர் தரப்பில் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரணம் என அனைத்துக்குமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அது விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.