படக்குறிப்பு, உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் விலைமதிப்புள்ள உலோகங்களின் விலை சரிவு
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கடந்த மாதம் விலைமதிப்புள்ள உலோகங்களின் மதிப்பு சரிந்தது. வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. அதே நேரத்தில், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் ஆகிய உலோகங்களின் விலைகளும் கடுமையாகச் சரிந்தன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதால் போதிய வருவாய் கிடைக்குமா என்ற கவலைகளுக்கு மத்தியில், தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளன. இந்தச் சூழலில்தான் விலைமதிப்புள்ள உலோகங்களின் விலைகளும் குறைந்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற கவலை ஆகியவை விலைமதிப்புள்ள உலோகச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
“பணவியல் கொள்கை மேலும் இறுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, வட்டி அல்லது வழக்கமான வருவாயைத் தராத சொத்துகளின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று டி.எச்.எஃப் கேபிட நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ் கூய்மேன் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.
“எண்ணெய் விலை உயர்வது, பணவீக்கம் நீண்ட காலத்துக்கு அதிகமாக நீடிக்கக்கூடும் என்ற கவலையை அதிகரிக்கிறது. இது சந்தையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தங்கத்தின் விலை மீதான அழுத்தம் தணியக்கூடும். அதேவேளையில், விநியோகச் சங்கிலியில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டு பணவீக்க அழுத்தம் அதிகரித்தாலோ அல்லது அக்டோபர் மாதத்துக்கான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக அமைந்தாலோ, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்பு வலுப்பெறலாம். இத்தகைய சூழல் தங்கத்தின் விலையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
அக்டோபர் மாத இறுதியில், அமெரிக்காவின் கோமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 7.26 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 3,884.9 டாலராகக் குறைந்தது. இதே சந்தையில் வெள்ளியின் விலை கடந்த மாதம் 19.1 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 49.13 டாலராக நிறைவடைந்தது.
அமெரிக்காவில் செயல்படும் முக்கிய உலோகச் சந்தைகளில் ஒன்றான கோமெக்ஸ்-இல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
உலகச் சந்தைகளின் போக்குக்கு ஏற்ப, இந்திய உள்நாட்டுச் சந்தையிலும் விலைமதிப்புள்ள உலோகங்களின் விலைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 7.16 சதவீதம் குறைந்து, 10 கிராம் 1,38,419 ரூபாயாக இருந்தது. வெள்ளியின் விலை 20 சதவீதம் சரிந்து, ஒரு கிலோ 1,78,900 ரூபாயாக நிறைவடைந்தது.
காமெக்ஸ் (கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் இன்க்) நிறுவனத்தைப் போலவே, எம்.சி.எக்ஸ் (மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்) என்பது இந்தியாவின் ஒரு பரிவர்த்தனை சந்தையாகும். இங்கு தங்கம் மற்றும் வெள்ளியின் எதிர்கால வர்த்தகம் (Futures trading) நடைபெறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அக்டோபர் 30ஆம் தேதி, அமெரிக்காவின் கோமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டாலர் என்ற அளவுக்கும் கீழே சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்த தங்கத்தின் விலை
அக்டோபர் 30ஆம் தேதி, அமெரிக்காவின் கோமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டாலர் என்ற அளவுக்கும் கீழே சரிந்தது.
மேலும், விலை சரிவைத் தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட $3,900 என்ற ஆதரவு நிலையையும் தாண்டிக் கீழே சென்றது. இது தங்கத்தின் விலை மேலும் பலவீனமடைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், தங்கத்தின் விலை அடுத்த ஆதரவு நிலையான 3,650 முதல் 3,750 டாலர் வரை குறையக்கூடும். இந்தச் சரிவுப் போக்கு மாற வேண்டுமானால், தங்கத்தின் விலை 4,550 டாலர் அளவைக் கடக்க வேண்டும்.
கோமெக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த மாதம் சரிந்தது. அதன் ஆதரவு நிலையான 54 டாலருக்குக் கீழே விலை குறைந்தது. இந்த முக்கிய நிலையைத் தாண்டிச் சரிந்த பிறகு, வெள்ளியின் விலை மேலும் குறைந்து, வெள்ளிக்கிழமை 48.9 டாலர் என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது.
குறுகிய காலத்தில் வெள்ளியின் விலை சரிவுப் போக்கிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் விலை 42 முதல் 43 டாலர் வரை குறையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிவுப் போக்கு முடிவுக்கு வர வேண்டுமானால், வெள்ளியின் விலை 55 டாலர் என்ற எதிர்ப்பு நிலையைத் தாண்ட வேண்டும்.
ஜனவரி மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,595 டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்பிறகு தங்கத்தின் விலை 30 சதவீதம் சரிந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், “வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்ற அச்சமே இதற்குக் காரணம். தற்போது ஆசியாவில் தேவை குறைந்திருப்பதும் தங்கத்தின் விலைக்கு அழுத்தம் கொடுக்கிறது. எனினும், தங்கத்தின் விலை 4,000 டாலருக்குக் கீழே குறையும் போதெல்லாம் மத்திய வங்கிகள் வழக்கமாகத் தங்கம் வாங்குவதை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தே வெள்ளியின் விலை அதிகளவில் மாறும் ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. தொழில்துறை மற்றும் நகைத் துறையில் வெள்ளிக்கான தேவை குறைந்து வருவதாக எச்எஸ்பிசி வங்கி தெரிவித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
2027ஆம் ஆண்டில் வெள்ளியின் சராசரி விலை ஒரு அவுன்ஸ் 64 டாலராக இருக்கும் என்று அந்த வங்கி கணித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான அதன் சராசரி விலை கணிப்பு 71 டாலராக உள்ளது.
தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க 79 அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது. இது 11 மாதங்களில் இல்லாத அதிகபட்ச விகிதமாகும். ஜனவரி மாதத்தில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 122 டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியபோது, ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க 46 அவுன்ஸ் வெள்ளி தேவைப்பட்டது.
“வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, தங்கத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. ஆலோசனை நிறுவனமான மெட்டல்ஸ் ஃபோகஸ் தரவுகளின்படி, 2020 முதல் 2025 வரை தங்கம் – வெள்ளி விகிதம் சராசரியாக 82 ஆக இருந்தது” என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் மோதல் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
தங்கம், வெள்ளியின் விலை இனி எப்படிச் செல்லும்?
அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் தங்கத்தின் விலை மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக, நிதி விவகாரங்கள் ஆய்வு நிறுவனமான சாஹியின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் கௌரவ் அரோரா, லைவ் மிண்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கி அக்டோபர் மாதத்தில் வட்டி விகிதங்களை 3.75 முதல் 4 சதவீதம் என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருந்தது. ஆனால், அதன் கொள்கைக் குழு உறுப்பினர்களில் இருவர் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், டிசம்பர் மாதத்தில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று சந்தை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளதாக அரோரா கூறுகிறார்.
“கடந்த ஒரு மாதமாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்க வர்த்தத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது, 10 கிராம் தங்கத்துக்கான உடனடி ஆதரவு நிலை 1,38,250 ரூபாயாக உள்ளது. இந்த அளவுக்குக் கீழே விலை குறைந்தால், மீண்டும் விற்பனை அதிகரிக்கக்கூடும். வெள்ளியின் விலையில் பொதுவாக ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். அதற்கான உடனடி ஆதரவு நிலை ஒரு கிலோவுக்கு 1,78,800 ரூபாயாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய சரிவுக்குப் பிறகும் ஒட்டுமொத்தச் சந்தைப் போக்கு பலவீனமாகவே இருப்பதாக அரோரா கூறுகிறார்.
விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்று எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பொருட்கள் சந்தை ஆய்வுப் பிரிவுத் தலைவர் வந்தனா பார்தி கருதுகிறார்.
பணத் தேவைக்காக முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துகளை விற்பனை செய்ததால் சந்தையில் சரிவு ஏற்பட்ட முந்தைய நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தகைய சூழல்களுக்குப் பிறகு தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கான தேவை அதிகரித்ததாக அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.
2008ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின்போது, பணம் திரட்டுவதற்காக முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துகளை விற்க வேண்டியிருந்தது. அப்போது தங்கத்தின் விலை தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் சுமார் 700 டாலராகக் குறைந்தது. ஆனால், அதன்பிறகு மீண்டு, 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,917 டாலரை எட்டியது.
கொரோனா பெருந்தொற்றின்போது, 2020 மார்ச் மாதத்தில் சந்தை சரிந்தபோதும் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. பணத்தைத் திரட்டுவதற்காக முதலீட்டாளர்கள் அவசரமாகச் சொத்துகளை விற்றதால், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் சுமார் 1,472 டாலராகக் குறைந்தது. ஆனால், அதன்பிறகு முதலீட்டாளர்கள் நேரடித் தங்கத்திலும் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளிலும் (ETF) அதிகளவில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கணிசமாக மீண்டது.
பணப்புழக்க நெருக்கடியின் அழுத்தம் குறையத் தொடங்கும்போது, விலைமதிப்புள்ள உலோகங்களை நீண்ட கால நோக்கில் வாங்குபவர்கள் சந்தையில் தீவிரமாகச் செயல்படக்கூடும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுவதாக வந்தனா பார்தி கூறுகிறார்.
தங்கத்தின் விலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவை, முதலீட்டாளர்கள் படிப்படியாகத் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக அவர் பார்க்கிறார். தற்போது இந்திய உள்நாட்டுச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1.38 லட்சம் ரூபாயாக உள்ளது.
மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல், மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பாகத் தங்கம் கருதப்படுவது ஆகிய காரணங்களால், 2027ஆம் ஆண்டுக்குள் இந்திய உள்நாட்டுச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,65,000 முதல் 1,80,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று அவர் கணிக்கிறார்.
எனினும், இது ஒரு கணிப்பு மட்டுமே; உறுதியான விலை உத்தரவாதம் அல்ல.