பட மூலாதாரம், Subhendu Sarkar/LightRocket via Getty Images
-
- எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தீபாவளிக்கு இனிப்புகள் வாங்கும்போது, அவற்றில் உள்ள கலோரிகளை மட்டும் கவனித்தால் போதாது, அவை கலப்படமற்றவையா என்பதையும் கவனிக்க வேண்டும். அவற்றில் பயன்படுத்தப்படும் திராட்டுப்பால், நெய் போன்றவை உண்மையானவையா?
தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள் மற்றும் பலகாரங்களுக்கான தேவை அதிகரிக்கிறது. இதனால், உண்மையான பொருட்களையும் கலப்படப் பொருட்களையும் வேறுபடுத்திக் கண்டறிவது சவாலாகிறது.
நவம்பர் 3ஆம் தேதி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, துர்க்மான் கேட் பகுதிக்கு நேரடியாகச் சென்று, அங்கு கலப்பட திரட்டுப்பாலை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த நடவடிக்கை தொடர்பான காணொளியைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த அவர், “பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் டெல்லியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். கலப்படத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், x.com/gupta_rekha
பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, கடந்த இரண்டு மாதங்களில் டெல்லி உணவுப் பாதுகாப்புத் துறை, சந்தைகளில் இருந்து 4,000 கிலோவுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை அழித்துள்ளது. அவற்றில் திரட்டுப்பால், நெய், பனீர் மற்றும் இனிப்புகள் அடங்கும்.
உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய பரிசோதனையில், 290 உணவுப் பொருட்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 85 மாதிரிகள் பாதுகாப்பற்றவை அல்லது நிர்ணயிக்கப்பட்ட தரத்தை எட்டாதவை என்று கண்டறியப்பட்டன.
மோரி கேட் பகுதியிலுள்ள திரட்டுப்பால் மண்டி, ஓக்லா, ஜனக்புரி உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. மொத்தம் 30 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதிக அளவிலான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆனால், பண்டிகைக் காலங்களில் கலப்பட இனிப்புகளின் விற்பனை ஏன் அதிகரிக்கிறது? அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது? அவற்றைச் சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
பண்டிகைக் காலங்களில் கலப்படம் ஏன் அதிகரிக்கிறது?
பட மூலாதாரம், NARINDER NANU/AFP via Getty Images
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) 2026 செப்டம்பரில், ‘சிறப்புப் பண்டிகைக் கால நடவடிக்கை’ தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், நவராத்திரி மற்றும் தீபாவளிக்கு முன்னதாக இனிப்புகள், எண்ணெய், பனீர், திரட்டுப்பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் காலகட்டத்தில் கலப்படமான, போலியான மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தியிருந்தது.
பண்டிகைக் காலங்களில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, கலப்படம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் ஏற்கெனவே பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
‘மின்ட்’ நாளிதழில் வெளியான செய்திப்படி, இந்தியாவில் அமைப்பு சார்ந்த இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களின் ஓராண்டு விற்பனையில் சுமார் 35% பண்டிகைக் காலத்திலேயே நடக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் அனில் அரோரா பிபிசியிடம் பேசுகையில், “பண்டிகைக் காலங்களில் இனிப்புகளின் தேவை மிகவும் அதிகமாகிறது. சில நேரங்களில் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இருப்பதில்லை. இதனால் சந்தையில் கலப்படப் பொருட்கள் கிடைப்பதற்கான ஆபத்து அதிகரிக்கிறது” என்றார்.
இது தொடர்பாக இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்களின் சங்கத்திடமும் பேச முயன்றோம். ஆனால், அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
டெல்லியின் மோரி கேட் சந்தையில் செயல்படும் திரட்டுப்பால் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் தோமர், கலப்பட இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தையின் வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “இந்த ஆண்டு வணிகம் முற்றிலும் சரிந்துவிட்டது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தது 40% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரிய தொழில் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வதற்காகவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. நாங்கள் டெல்லியை சேர்ந்த சிறு வணிகர்கள். எங்களுடைய திரட்டுப்பாலில் கலப்படம் இல்லை. எங்களுடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்போது, அதற்கான காரணம்கூட எங்களிடம் தெரிவிக்கப்படுவதில்லை” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை, பதில் கிடைத்ததும் அது சேர்க்கப்படும்.
கலப்படத்தைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது?
பட மூலாதாரம், sb stock/getty images
பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எஃப்எஸ்எஸ்ஏஐ பரிந்துரைக்கிறது. இதன்படி, இனிப்புக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், கிடங்குகள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அங்கிருந்து உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
இதுதவிர, முக்கியமான சந்தைப் பகுதிகளில் நடமாடும் உணவுப் பரிசோதனை ஆய்வகங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை எஃப்எஸ்எஸ்ஏஐ கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆய்வகங்கள் மூலம் உணவுப் பொருட்களை அந்த இடத்திலேயே ஆரம்பக் கட்டமாகப் பரிசோதிக்க முடியும். இருப்பினும், அனைத்து வகை கலப்படங்களையும் உறுதிப்படுத்த விரிவான ஆய்வகப் பரிசோதனைகள் அவசியம்.
கலப்படமான அல்லது பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைக்காரர் அல்லது தயாரிப்பாளர் மீது 2006ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்தச் சட்டத்தின்படி அபராதம் விதிப்பது, உரிமத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கடுமையான குற்றங்களில் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
கடந்த மார்ச் மாதம், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இணையமைச்சர் பி.எல். வர்மா மக்களவையில் ஒரு தகவலைத் தெரிவித்தார். அதன்படி, 2024-25 நிதியாண்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2006இன் கீழ் மொத்தம் 12,057 சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில், சிவில் வழக்குகள் தொடர்பாக 8,636 அபராதங்கள் விதிக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.36.43 கோடி. மேலும், 179 குற்றவியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.28.23 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
உணவுப் பொருட்களின் மாதிரிகள் பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை எட்டவில்லை என்பது தெரிய வந்தால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சம்பந்தப்பட்ட வணிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்படமான அல்லது பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து நுகர்வோரும் புகார் அளிக்கலாம். இதற்காக எஃப்எஸ்எஸ்ஏஐயின் ‘Food Safety Connect’ செயலி மற்றும் இணையவழிப் புகார் வசதியைப் பயன்படுத்தலாம்.
உடல்நலத்துக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், anubhav saxena/getty images
கலப்பட உணவுகளைச் சாப்பிடுவதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அவை உடனடியாகவும் ஏற்படலாம், நீண்ட காலத்திற்குப் பிறகும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
சர் கங்கா ராம் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் அனில் அரோரா, பண்டிகைக் காலங்களில் கலப்பட உணவுப் பொருட்கள் அதிக அளவில் சந்தைக்கு வருகின்றன என்றார். அவரது கூற்றுப்படி, கலப்பட இனிப்புகள் அல்லது பலகாரங்களைச் சாப்பிடுவதால் முதலில் செரிமான மண்டலம்தான் அதிகம் பாதிக்கப்படலாம்.
“அந்த உணவில் வீக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் இருந்தால், குமட்டல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மாசுபட்ட உணவுப் பொருட்கள் குடலுக்குச் சென்று தொற்றையும் ஏற்படுத்தலாம்” என்றார். மேலும், நீண்ட காலமாக அதிக அளவில் இத்தகைய உணவுகளைச் சாப்பிடும்போது, அவற்றிலுள்ள சில வேதிப்பொருட்கள் உடலில் படிப்படியாகச் சேரக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.
ஆரம்பத்தில் இந்தப் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை அவை பாதிக்கக்கூடும்.
“இந்தப் பொருட்கள் குறிப்பாக கல்லீரலை பாதிக்கலாம். இதனால் உடலில் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புச் சத்துகளைச் செயலாக்கும் திறன் பாதிக்கப்படலாம். இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் கன உலோகங்கள் சேரும்போது, கன உலோக நச்சுத்தன்மை ஏற்படலாம். இது படிப்படியாக உடலுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்” என்றார்.
உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அவற்றில் கலப்படம் இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ நுகர்வோருக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ள ‘விரைவுப் பரிசோதனைகள் மூலம் கலப்படத்தைக் கண்டறிதல்’ என்ற கையேட்டில், வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய 50க்கும் மேற்பட்ட பரிசோதனை முறைகள் இடம்பெற்றுள்ளன.
பால் மற்றும் பால் பொருட்கள், சமையல் எண்ணெய், நெய், மசாலாப் பொருட்கள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் உள்ள பொதுவான கலப்படங்களைக் கண்டறிய இந்த முறைகள் உதவும். இருப்பினும், இந்தப் பரிசோதனை முறைகள் நடைமுறையில் எப்போதும் பயனுள்ளதாக இருக்காது என்கிறார் மருத்துவர் அரோரா.
“உணவுப் பொருட்களைப் பரிசோதிப்பது அரசின் பொறுப்பு. தெருவோரக் கடைகளில் விற்கப்படும் மருந்துகள் அல்லது உணவுப் பொருட்கள்கூட உரிய சான்றிதழ் பெற்றவையாகவும் தூய்மையானவையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போதும் ஒரு சாதாரண நுகர்வோர் பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. இந்தப் பொறுப்பு அரசுக்கும் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும்தான் உள்ளது” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு