3
றினோன் கழகத்துக்கும் நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான தீர்மானம் மிக்க சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற றினோன் கழகத்துக்கு இப்போதைக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகின்றது.
இன்றைய போட்டியில் றினோன் கழகம் வெற்றிபெற்றால் அக் கழகத்துக்கு 15 புள்ளிகள் கிடைக்கும்.
ஏற்கனவே ரட்னம், நியூ யங்ஸ் ஆகிய கழகங்கள் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை இழந்துள்ளதுடன் புளூ ஈக்ள்ஸ் அணிக்கு அதிபட்சமாக 13 புள்ளிகளும் டிபெண்டர்ஸ் அணிக்கு அதிகப்பட்சமாக 10 புள்ளிகளும் கிடைக்கும் என்பதால் அவ்வணிகளால் றினோன் கழகத்தை எட்ட முடியாமல் போகும்.
அதேவேளை, புளூ ஸ்டார் கழகம் வெற்றிபெற்றால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது றினோன் வெற்றிபெற வேண்டிவரும். அந்த இரண்டு போட்டிகளும் றினோன் கழகத்துக்கு கடினமானவை என்பதால் இன்றைய போட்டியில் என்ன விலைகொடுத்தேனும் வெற்றிபெற றினோன் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
றினோன் கழகம் தனது முதல் 3 போட்டிகளில் இலகுவான வெற்றிகளை ஈட்டியபோதிலும் அடுத்த 3 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் றினோன் கழக வீரர்கள் சிறந்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் விளையாடவேண்டும்.
மறுபுறத்தில் மாறுபாடான பெறுபேறுகளைக் கொண்டுள்ள புளூ ஸ்டார் கழகம் 2 வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் ஒரு போட்டியை வெற்றிதோல்வியன்றி முடித்துக்கொண்டது. மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
புளூ ஸ்டார் கழகம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு செல்வதாக இருந்தால் இன்றைய போட்டியிலும் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
எனவே இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ரசிகர்களுக்கு பரபரப்பான கால்பந்தாட்டப் போட்டி காத்திருக்கிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் மற்றைய அணிகளின் போட்டி முடிவுகளும் தீர்மானம் மிக்கவையாக அமையும் என்பது உறுதி.