பட மூலாதாரம், Getty Images
நீங்கள் தினமும் சாப்பிடும் பனீர் உண்மையில் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறதா? அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பனீர் போல தோற்றமளிக்கும் வேறு ஏதாவது பொருளா?
அரசாங்கங்கள் தற்போது இந்தக் கேள்வியில் கவனம் செலுத்தி வருகின்றன.
மத்தியப் பிரதேச அரசு ‘செயற்கை (அனலாக்) பனீர்’ உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளது.
இதன் மூலம், நாட்டில் செயற்கை பனீருக்கு தடை விதித்த நான்காவது மாநிலமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளது. இதற்கு முன்பு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் செயற்கை பனீருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு உடல்நலம் தொடர்பான கவலைகளையே மத்தியப் பிரதேச அரசு காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.
வெவ்வேறு பகுதிகளில் உள்ள பனீர் உற்பத்தித் தொழிற்சாலைகளை ஆய்வு செய்யவும், அனலாக் பனீர் கண்டுபிடிக்கப்பட்டால் அதைப் பறிமுதல் செய்யவும் உணவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனலாக் பனீர் என்றால் என்ன? அது ஏன் இவ்வளவு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது?
அனலாக் பனீர் என்றால் என்ன? அது ஏன் இவ்வளவு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
பாரம்பரிய பனீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சில புளிப்புப் பொருட்களின் உதவியுடன் பால் திரிய செய்யப்படுகிறது. அதன் மூலம் பனீர் கிடைக்கிறது.
அனலாக் பனீர் என்பது பாலுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மலிவான மாற்று வகையாகும்.
உதாரணமாக, பாலில் உள்ள கொழுப்புக்குப் பதிலாக தாவர எண்ணெய் அல்லது தாவரக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், பாலில் உள்ள புரதத்துக்குப் பதிலாக சோயா அல்லது பட்டாணிப் புரதம் பயன்படுத்தப்படுகிறது.
சில நேரங்களில் செயற்கை பனீரைத் தயாரிக்க ஸ்டார்ச் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
உண்மையான பனீர் போலவே தோற்றமளிக்கும் வகையில் இது தயாரிக்கப்படுகிறது.
இதனால், செயற்கை பனீரை வெறுமனே பார்த்து அடையாளம் காண்பது எளிதல்ல.
ஆனால், இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் பாலின் இயற்கையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதேசமயம், செயற்கை பனீரில் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாக இருக்கும்.
போலி பனீரின் பயன்பாடு ஏன் அதிகரித்துள்ளது?

பல்வேறு தரப்பினரிடமும், வணிகர்களிடமும், நிபுணர்களிடமும் பேசியதில், இதற்கான முக்கியக் காரணம் குறைந்த உற்பத்திச் செலவும் மலிவான விலையுமே என்பது தெரியவந்துள்ளது.
போபாலைச் சேர்ந்த முக்கிய பால் மற்றும் பனீர் விநியோகஸ்தரான சுமித் ஜெயின், செயற்கை பனீரின் விலை, பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பனீரின் விலையில் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது என்கிறார்.
பிபிசியிடம் அவர் கூறுகையில், “சந்தையில் மலிவான பனீருக்கு அதிக தேவை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை பனீர் படிப்படியாக சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற நகரங்களிலும் எங்களுக்கு தொடர்புகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் செயற்கை பனீர் நன்றாக விற்பனையாகிறது. போபால் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பனீரில் 60 முதல் 65 சதவீதம் செயற்கை பனீராக இருந்தது” என்றார்.
விநியோகஸ்தர்கள், கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுவாக பனீர் பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதா அல்லது செயற்கை பனீரா என்பதைச் சரிபார்ப்பதில்லை என்கிறார் அவர்.
தற்போது மத்தியப் பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் சந்தையிலும் தெரிகிறது.
போபாலைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளர், தனது பெயரை வெளியிடாமல் பேசியபோது, முன்பு செயற்கை பனீரை பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதை அவர் நிறுத்திவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போது வாடிக்கையாளர்கள் பனீர் ஆர்டர் செய்வதற்கு முன்பு அது பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதா அல்லது செயற்கை பனீரா என்று கேட்கிறார்கள். தடை விதிக்கப்பட்டுள்ளதால், பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பனீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் பனீர் கையிருப்பில் இல்லாததால், வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை ஏற்க மறுக்க வேண்டியுள்ளது” என்றார்.
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிபிசி மராத்தி வெளியிட்ட ஒரு செய்தியின்படி, குஜராத்தில் பனீர் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட முன்னாள் உணவு மற்றும் மருந்து ஆணையர் ஹெச்.ஜி. கோஷியா, பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரும் செயற்கை பனீரும் ஒன்றல்ல என்று கூறியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால், செயற்கை பனீரில் பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைவாக உள்ளன.
செயற்கை பனீர் உண்ணக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அது உண்மையான பனீர் அல்ல என்று அவர் கூறினார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோவும் செயற்கை பனீரின் ஊட்டச்சத்து தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவர், “இந்தப் பொருள் பனீர் அல்ல என்றால், அது ஏன் செயற்கை பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். நாட்டின் எந்த ஊட்டச்சத்து தேவையை அல்லது அவசியத்தை செயற்கை பனீர் பூர்த்தி செய்கிறது என்பதே எனக்குப் புரியவில்லை” என்றார்.
சந்தையில் செயற்கை பனீருக்கு இடம் கொடுப்பது பால் உற்பத்தித் துறையில் பணியாற்றும் சிறு விவசாயிகளையும் பாதிக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
“செயற்கை பொருட்களுக்கு வழிவகுப்பதன் மூலம், நீங்கள் எல்லா இடங்களிலும் அழிவை ஏற்படுத்துகிறீர்கள். தொழிற்சாலைகளிலும் ரசாயனங்களைப் பயன்படுத்தியும் பனீர் தயாரிக்கத் தொடங்கினால், பசு மற்றும் எருமை வளர்க்கும் விவசாயிகளின் நிலை என்னவாகும்?” என்று அவர் கூறினார்.
செயற்கை பனீரின் மூலப்பொருள், ஊட்டச்சத்து மதிப்பு, உடல்நலம் தொடர்பான கவலைகள் மற்றும் அதைச் சோதிக்கும் முறைகள் குறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ-யிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
அதேபோல், செயற்கை பனீரின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, மாதிரி சேகரிப்பு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களிடம் ஆணையம் தகவல் கேட்டுள்ளது.
நாடு முழுவதும் செயற்கை பனீர் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான கேள்வியாக இருப்பது, அதை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதுதான்.
செயற்கை பனீரை எப்படி அடையாளம் காண்பது?
பட மூலாதாரம், Getty Images
பேக்கிங் செய்யப்பட்ட பனீர் என்றால், அதனை அடையாளம் காண்பதற்கான எளிய வழி, அதன் லேபிளையும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலையும் படிப்பதுதான்.
அதில் தாவர எண்ணெய், தாவரக் கொழுப்பு, சோயா புரதம், பட்டாணிப் புரதம் அல்லது பிற பால் அல்லாத பொருட்கள் இடம்பெற்றிருந்தால், அது பாரம்பரியமாக பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரிலிருந்து வேறுபட்டதாகும்.
ஆனால், பேக்கிங் இல்லாமல் விற்பனை செய்யப்படும் பனீரை பொறுத்தவரை, அது பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பனீரா அல்லது செயற்கை பனீரா என்பதை அடையாளம் காண்பது கடினம்.
செயற்கை பனீரை அதன் நிறம், வாசனை, மென்மை அல்லது பதத்தை வைத்து மட்டும் துல்லியமாக அடையாளம் காண முடியாது.
அதேபோல், அயோடின் சோதனை குறித்தும் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, பனீர் மாதிரியில் அயோடினைச் சேர்த்தபோது அதன் நிறம் நீலமாகவோ அல்லது நீல-கருப்பாகவோ மாறினால், அதில் ஸ்டார்ச் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், அயோடின் சோதனை என்பது செயற்கை பனீரை அடையாளம் காண்பதற்கான சோதனை அல்ல.
ஒரு செயற்கை பனீர் தயாரிப்பில் ஸ்டார்ச் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே, நிறம் மாறுவது ஸ்டார்ச் இருப்பதை மட்டுமே குறிக்கும். அந்த பனீர் செயற்கை பனீர் என்பதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொள்ள முடியாது.
அதேபோல், பனீரை சூடாக்கும்போதோ அல்லது வறுக்கும்போதோ அதிக அளவில் எண்ணெய் வெளியேறினாலோ, ரப்பர் போன்ற பதத்தில் இருந்தாலோ அல்லது அதிகமாகச் சுருங்கினாலோ, நீங்கள் பயன்படுத்தப் போகும் பனீரின் பதம் வழக்கமான பனீரிலிருந்து வேறுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கலாம்.
ஆனால், இந்த மாற்றங்களை மட்டும் வைத்து அது செயற்கை பனீரா அல்லது உடல்நலத்துக்கு பாதுகாப்பற்றதா என்பதைத் தீர்மானிக்க முடியாது.
துல்லியமாக அடையாளம் காண, ஆய்வகப் பரிசோதனையே மிகவும் நம்பகமான முறையாகும்.
செயற்கை பனீரால் ஏற்படும் உடல்நல பாதிப்பு என்ன?

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பனீர் தொடர்பான மிகப்பெரிய கவலை, அதன் ஊட்டச்சத்து மற்றும் அதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், கொழுப்புகள் குறித்ததுதான்.
போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியின் இதய சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் அஜய் சர்மா பிபிசியிடம் பேசுகையில், அனலாக் பனீரில் பயன்படுத்தப்படும் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பிற பொருட்கள் கொழுப்பின் அளவை அதிகரித்து, நீண்ட காலத்தில் இதயம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், “செயற்கை பனீரில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பிற பொருட்கள் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். இதயப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு மற்றும் பல்வேறு ரசாயனங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. மாதத்திற்கு ஒருமுறை சாப்பிட்டாலும், தொடர்ந்து ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால், அது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
குஜராத்தைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் தேஜஸ் படேலும் செயற்கை பனீரில் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய் அடிப்படையிலான கொழுப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
அதில் உள்ள சில கூறுகள் நீண்ட காலத்தில் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய மருத்துவர் ராஜேஷ் ஷா, “சுவையை அதிகரிப்பதற்காக செயற்கை பனீரில் தயாரிக்கப்படும் உணவுகளில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்” என்றார்.
எனினும், செயற்கை பனீரையும் கலப்படம் செய்யப்பட்ட அல்லது தரம் குறைந்த பனீரையும் ஒன்றாகக் கருதுவது சரியாக இருக்காது.
அதேபோல், செயற்கை பனீர் அனைத்தையும் நச்சுத்தன்மை கொண்டது அல்லது உடல்நலத்துக்கு பாதுகாப்பற்றது என்று கூறுவதும் சரியானதல்ல .
அதன் உடல்நல பாதிப்புகள் பயன்படுத்தப்படும் கொழுப்பின் வகை, பிற பொருட்கள், அவற்றின் அளவு, மேலும் அவை எவ்வளவு அளவில், எவ்வளவு காலம் உட்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இருக்கும்.
குஜராத்தில் பனீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர் அதுல் சோனி, சில மாதிரிகளில் யூரியா, சலவைத் தூள், காஸ்டிக் சோடா மற்றும் மலிவான தாவர எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
நிபுணர்களைப் பொறுத்தவரை, பாலில் இருந்து பனீர் தயாரிக்கப்பட்டதா என்பது மட்டுமே கேள்வியல்ல. செயற்கை பனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாற்றுப் பொருட்கள் என்ன, அவற்றின் தரம் என்ன, எவ்வளவு அளவு பயன்படுத்தப்படுகிறது என்பதும் முக்கியம்.
இந்த விவகாரத்தில் சாதாரண நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், பனீர் போலத் தோற்றமளிக்கும் ஒவ்வொரு பொருளும் கட்டாயம் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பனீராக இருக்க வேண்டிய அவசியமல்ல என்பதுதான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு