7
ஸ்கொட்லாந்தின் அபெர்டீன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் கீழ் தளத்தில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி காரணமாக ஏற்பட்ட பாரிய தீ விபத்திலேயே, சகோதரிகள் இருவர் உயிரிழந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அபெர்டீன், பேக் ஹில்டன் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிக்ஷியா சுபேதி மற்றும் ஆஞ்சல் சுபேதி ஆகிய 24 மற்றும் 28 வயதுடைய சகோதரிகளே உயிரிழந்தனர். இவர்கள் சிறுவயதிலேயே குடும்பத்தினருடன் ஸ்கொட்லாந்திற்கு இடம்பெயர்ந்து அபெர்டீனில் வசித்து வந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில் எவ்வித சந்தேகத்துக்கிடமான பின்னணியும் கண்டறியப்படவில்லை.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிபிசி ஸ்கொட்லாந்து செய்திப் பிரிவினால் பெறப்பட்ட ஸ்கொட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் விபரிக்கப்பட்டுள்ளது.
கீழ் தளத்தில் உள்ள படுக்கையறையில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியால் மெத்தையில் தீப்பற்றியதாகவும், அங்கிருந்த லித்தியம் மின்கலமொன்று வெடித்ததால் தீ மிகத் தீவிரமாகப் பரவியதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் 07 வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், அடர்ந்த புகையில் சிக்கிய சகோதரிகள் இருவரும் தீயணைப்புப் படையினர் அவர்களைச் சென்றடைவதற்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் விபத்து தொடர்பான முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சட்ட நிறுவனமொன்றின் உதவியை நாடியுள்ளனர். தமது குடும்பம் தாங்க முடியாத துயரத்தில் உள்ளதாகவும், எதிர்கால கனவுகளுடன் இருந்த இளம் சகோதரிகளை இழந்துவிட்டதாகவும் அவர்களின் மூத்த சகோதரியான சுசான் சுபேதி கவலை வெளியிட்டுள்ளார்.
