
-
- எழுதியவர், மமூன் துரானி
- பதவி, பிபிசி ஆப்கன் சேவை
- மற்றும்
- எழுதியவர், ஃபுளோரா ட்ரூரி மற்றும் விஷுவல் ஜர்னலிசம் குழுவினர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
சிறுவன் ஒருவன், 70 மீட்டர் (230 அடி) ஆழமுள்ள கிணற்றின் மூலையில் சுருண்டு அமர்ந்திருந்தான். அவனது கால்களைத் தண்ணீர் தொட்டுக்கொண்டிருந்தது. தலையிலும் தண்ணீர் சொட்டியது. பயத்திலும் குளிரிலும் அவன் நடுங்கிக்கொண்டிருந்தான்.
துளைக்கு மேலே, மீட்புப் பணியாளர்கள் கீழே இறக்கிய கேமரா மூலம் கிடைத்த காட்சிகளை ஒரு திரையில் பார்த்தபடி ஆண்கள் குழுவினர் காத்திருந்தனர். தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஐந்து வயதான ஜைனுல்லா இரண்டு நாள்களுக்கு முன்பு தண்ணீர் வற்றிப்போன ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்தான்.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரை சங்கடம் தரும் தகவல்களை கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், கால்பந்து மைதானத்தின் அகலத்துக்கு இணையான ஆழத்தில் விழுந்தும் அவன் உயிர் பிழைத்திருந்தான்.
ஆனால், வெறும் 30 சென்டிமீட்டர் விட்டம் மட்டுமே கொண்ட அந்தக் கிணறு, ஒரு வயது வந்தவர் உள்ளே இறங்கி சிறுவனைச் சென்றடைய முடியாத அளவுக்குக் குறுகலாக இருந்தது. மேலும், அவனை மேலே இழுத்து மீட்பதற்காகக் கீழே இறக்கப்பட்ட கயிற்றில் தன்னை எப்படிக் கட்டிக்கொள்வது என்பதைக்கூடப் புரிந்துகொள்ளும் வயதில் ஜைனுல்லா இல்லை. பயமும் அவனை ஆட்கொண்டிருந்தது.
மீட்புக் குழுவினர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் மூன்று சிறுவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றனர். ஆனால், கிணறு மிகவும் குறுகலாக இருந்ததால் அவர்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டனர். இதனால், தங்களை மேலே தூக்கிவிடுமாறு அவர்கள் கெஞ்சினர்.

5 வயது சிறுவனை மீட்ட 11 வயது சிறுவன்
அப்போதுதான் மீட்புப் பணியாளர்கள் 11 வயதேயான ஹஸ்ரத் உமரின் உதவியை நாடினர். அவன் ஏற்கெனவே ஒரு நிலத்தடி மீட்புப் பணியிலும் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கிணற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று அங்கிருந்த பெரியவர்கள் எச்சரித்தபோதும், தனது மாமாவின் ஒப்புதலுடன் ஹஸ்ரத் இறங்கச் சம்மதித்தான்.
முதல் முயற்சியின்போது, கைகளில் கயிற்றைக் கட்டி அவனைக் கீழே இறக்கியபோது, தனது தோளும் தொடையும் சிக்கிக்கொண்டது என்று அவன் நினைவுகூர்ந்தான்.
“வலிக்கிறது என்று நான் கத்தினேன். அவர்கள் என்னை மீண்டும் மேலே இழுத்தார்கள்” என்றான்.
மீண்டும் முயற்சி செய்தார்கள். இந்த முறை, அவர்கள் கிணற்றின் அடிப்பகுதியைச் சென்றடைந்தனர்.
மேலே, நூற்றுக்கணக்கானவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இறுதியில், கிணற்றை சுற்றி நின்றிருந்த ஆண்கள் கயிற்றை ஒவ்வொரு மீட்டராக இழுத்தனர். சிறிது சிறிதாகக் கயிற்றை மேலே இழுத்து, சிறுவர்களை வெளியே கொண்டுவந்தனர்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தோண்டப்படும் ஆழ்துறை கிணறுகள்
ஆப்கானிஸ்தான் முழுவதும் தண்ணீருக்கான தீவிர தேடல் காரணமாக, லட்சக்கணக்கான ஆழமான, குறுகிய, எளிதில் கண்டறிய முடியாத கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், விவசாய நிலங்களே மரணப் பொறிகளாக மாறியுள்ளன.
ஜைனுல்லா விழுந்த கிணறு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுவிட்டது. அந்தக் கிணற்றைத் தோண்டிய உள்ளூர் விவசாயிகள், அதன் திறப்பை மரக்கட்டைகளாலும் மண்ணாலும் மூடியிருந்தனர். ஆனால், காலப்போக்கில் மரம் அழுகிவிட்டது, மண்ணும் தளர்ந்துவிட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜைனுல்லாவைப் போல நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள், தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின்னர் முறையாக மூடப்படாத கிணறுகளில் விழுந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2021-ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற 100-க்கும் மேற்பட்ட சம்பவங்களை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உள்ளடக்கியவை. அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் இறக்கும் குழந்தைகள்
கைவிடப்பட்ட கிணறுகளில் மக்கள் தவறி விழுவது என்பது தெற்காசியாவில் அரிதான நிகழ்வு அல்ல. 2009 முதல் 2023 வரை, இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முறையாக மூடப்படாத கிணறுகளில் விழுந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், பல்வேறு காரணிகளின் கூட்டுவிளைவால் ஆப்கானிஸ்தானில் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடைந்துள்ளதாக, ஜெர்மனியில் வசிக்கும் அந்நாட்டின் முன்னணி நீர்வள நிபுணர்களில் ஒருவரான நஜிபுல்லா சாதித் தெரிவிக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் 2021-ஆம் ஆண்டு வெளியேறின. இதையடுத்து, கட்டுமானம், வர்த்தகம், வெளிநாட்டு உதவிகளைச் சார்ந்திருந்த அந்நாட்டின் பலவீனமான பொருளாதாரம் சரிந்தது. தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சர்வதேச உதவிகளும் பெருமளவில் குறைக்கப்பட்டன. இதனால், மேலும் பலர் வேலைவாய்ப்புகளை இழந்தனர்.
வேலைவாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் மீண்டும் விவசாய நிலங்களுக்குத் திரும்பினர். முன்பு போர்ப் பகுதிகளாக இருந்த அந்த நிலங்கள், போர் அச்சுறுத்தல் நீங்கியதால் மீண்டும் விவசாயத்துக்கு ஏற்ற இடங்களாக மாறியிருந்தன.
பருவநிலை மாற்றம், நீண்டகால வறட்சி காரணமாக நீர் கிடைப்பது குறைந்ததே முக்கியப் பிரச்சினையாக இருந்தது. இதனால், விவசாயிகள் நிலத்தடி நீரை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதிகரிக்கும் ஆழ்துளை கிணறுகள்
இத்துடன், சீனாவில் தயாரிக்கப்பட்ட மலிவான சூரிய மின்தகடுகள் தாராளமாகக் கிடைத்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அவற்றின் உதவியுடன் விவசாயிகளால் “நாள் முழுவதும் தண்ணீரை இறைக்க” முடிந்ததாக நஜிபுல்லா சாதித் கூறுகிறார். இதன் விளைவாக, ஆப்கானிஸ்தானில் ஆபத்தான கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிணறுகளின் எண்ணிக்கை “மிகப் பெரிய அளவில்” அதிகரித்ததாக சாதித் கூறுகிறார். செயற்கைக்கோள் படங்களின்படி, தற்போது அங்கு ஐந்து லட்சம் கிணறுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஹெல்மண்ட் ஆற்றுப் படுகைப் பகுதியில் அமைந்துள்ளன. குறிப்பாக, ஹெல்மண்ட், கந்தஹார், ஃபரா, கஸ்னி ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான கிணறுகள் உள்ளன.

மீட்புக் கருவியை உருவாக்கிய கைபேசி விற்பனையாளர்
இந்தக் கிணறுகளில் மக்கள் விழும்போது அவர்களை மீட்பதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது, மீட்புப் பணிகளில் ஈடுபடப் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் சுமார் ஐந்து பேர் மட்டுமே உள்ளனர்.
இதனால், தெற்கு மாகாணமான ஹெல்மண்டைச் சேர்ந்த 28 வயதான கைபேசி விற்பனையாளர் ஒருவர், இந்தப் பிரச்னையைத் தானே கையில் எடுக்க முடிவு செய்தார்.
மீராஜன் அப்துல்லா, ஒருவர் கிணற்றில் விழுந்த சம்பவம் குறித்து முதன்முதலில் கேள்விப்பட்டது 2021 ஏப்ரல் மாதத்தில்தான். அப்போது, ஹெல்மண்ட் மாகாணத்தின் சாங்கின் பகுதியில் உள்ள அவரது கிராமத்தில், கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் ஐந்து வயதுச் சிறுவன் விழுந்திருந்தான்.
“அந்தச் சிறுவன் கதறி அழுதுகொண்டிருந்தான்” என்று மீராஜன் நினைவுகூர்கிறார்.
“அவன் தொடர்ந்து, ‘எனக்குக் குளிருகிறது. பசிக்கிறது. தாகமாக இருக்கிறது. இருட்டாக இருக்கிறது. என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள்!’ என்று கத்திக்கொண்டே இருந்தான்.” என்று கூறினார்.
அவனை மீட்கும் வழியைக் கண்டுபிடிக்க கிராமவாசிகளுக்கு 48 மணி நேரம் ஆனது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தச் சிறுவன் இறந்துவிட்டான்.
இது ஒரு தனிப்பட்ட துயரம் என்று மீராஜன் நினைத்திருந்தார், ஆனால் ஒரு வருடம் கழித்து, ஹைதர் என்ற மற்றொரு குழந்தை கிணற்றில் விழுந்த போதுதான் ஆழ்கிணறுகளில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு வழி தேவை என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.
அவர் ஒரு கருவியை உருவாக்கினார். அதில் ஒரு கேமரா கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், தரையில் இருந்தபடியே கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர் இருக்கும் இடத்தைப் பார்க்க முடியும்.
பின்னர், அவர் இருக்கும் துல்லியமான இடத்துக்குக் கயிற்றை இறக்கலாம். அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர் மேலே வருவதற்கு முன்பாகத் தன்னை அதனுடன் இணைத்துக்கொள்ள முடியும்.
இந்தக் கருவியைச் சோதித்துப் பார்ப்பதற்காக, அப்போது வெறும் ஐந்து வயதே ஆன தனது சொந்த மகனையே 25 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் இறக்கினார். அந்த முயற்சி பலனளித்தது.

அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில், 113 மீட்புப் பணிகளில் அவர் பங்கேற்றுள்ளார். கிட்டத்தட்ட 70 பேரைக் காப்பாற்றியுள்ளார்.
அத்தகைய மீட்புப் பணிகளில் ஒன்று ஹெல்மண்ட் மாகாணத்தில் நடைபெற்றது. அங்கு, நூர் ஆகா என்ற ஐந்து வயதுச் சிறுவன் 140 மீட்டர் ஆழத்தில் நான்கு மணி நேரமாகச் சிக்கியிருந்தான். மீராஜன் தனது கருவியைப் பயன்படுத்தி அவனை மீட்டார்.
துரதிர்ஷ்டவசமாக, சிலரை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்களில் சிலர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மீராஜன் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கிணறுகள் உடனடி உயிராபத்தை ஏற்படுத்துவதுடன், நிலத்தடி நீர் வளத்தின் நீடித்த பயன்பாடு குறித்த கவலைகளையும் எழுப்புகின்றன.
பல ஆண்டுகளாக நிலவும் வறட்சியால், கிணறுகள் தொடர்ந்து அதிக ஆழத்தில் தோண்டப்படுகின்றன. சில கிணறுகள் 80 மீட்டர் ஆழம் கொண்டவை. சில கிணறுகள் 200 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் விவசாயம் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ளது. இதற்காக, மிக ஆழத்தில் உள்ள நீர் இருப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த நீர் வளம் வரையறுக்கப்பட்டது; இதைத் தொடர்ந்து அளவின்றிப் பயன்படுத்த முடியாது.
“சில பகுதிகள் முற்றிலும் மக்கள் வசிக்காத இடங்களாக மாறிவிடும். மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்தப் பகுதிகள் வறண்ட சமவெளிகளாகவும் பாலைவனங்களாகவும் மாறிவிடும்” என்று சதீத் சுட்டிக்காட்டுகிறார்.
நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டதாக மீராஜன் கூறுகிறார். “சில மீட்டர் இடைவெளியிலேயே இரண்டு அல்லது மூன்று கிணறுகள் இருப்பதைப் பார்ப்பது அங்கு வழக்கமாகிவிட்டது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இத்தனை சிக்கல்கள் இருந்தபோதிலும், விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவு.
“பொதுவாக, ஒரு கிலோ தக்காளியை உற்பத்தி செய்ய 100 முதல் 300 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அறுவடைக் காலத்தில் ஒரு கிலோ தக்காளி ஐந்து முதல் பத்து ஆப்கானிகளுக்கு (0.08 முதல் 0.16 அமெரிக்க டாலர்) விற்கப்படுகிறது” என்று சாதித் விளக்குகிறார்.
“அடிப்படையில், 10 ஆப்கானி மதிப்புள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்ய 300 ஆப்கானி மதிப்பிலான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது முற்றிலும் நீடிக்க முடியாத நிலை” என்கிறார் அவர்.
கிணறுகளில் நீர் வற்றியதும், அவை கைவிடப்படுகின்றன. பின்னர், புதிய கிணறுகள் தோண்டப்படுகின்றன. இதனால், அப்பகுதி வழியாகப் பயணிப்பவர்களுக்குப் பல ஆபத்துகள் ஏற்படுகின்றன.
கடுமையான வறுமையில் வாழும் பல ஆப்கானியர்களால், இந்தக் கிணறுகளை மூடுவதற்கான செலவை ஏற்க முடியவில்லை. மேலும், பொதுப் பாதுகாப்பு தங்களின் முக்கியக் கவலைகளில் ஒன்றாக இல்லை என்று அப்பகுதி மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
தாலிபன் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?
ஆப்கானிஸ்தானில், ஒருவர் சொந்தமாகக் கிணறு தோண்டுவதைத் தடைசெய்யும் சட்டம் எதுவும் இல்லை.
கிணறுகளால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கேட்டு பிபிசி தாலிபன் அதிகாரிகளைத் தொடர்புகொண்டது. அவசரகால மீட்புப் பணிகளை வலுப்படுத்துவதற்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுக்களுக்குத் தேவையான கருவிகளை வாங்க முயற்சிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
குடிநீரைத் தவிர வேறு எந்தப் பயன்பாட்டிற்கும், அதிகாரப்பூர்வ அனுமதியின்றி நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யத் திட்டமிட்டுள்ளதாக தாலிபன்களின் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த நடவடிக்கை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து குறிப்பிடவில்லை.
முன்னதாக, கிணறுகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று தாலிபன்களின் உள்துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது. அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இருப்பினும், மைவந்த் பகுதியில் ஐந்து வயதுச் சிறுவன் ஜைனுல்லா கிணற்றுக்குள் விழுந்தான்.
ஜைனுல்லாவை மீட்பதற்காக மீராஜனுக்கு அழைப்பு வந்தபோது, இதுவரை அவர் எதிர்கொண்டதிலேயே மிகவும் சிக்கலான மீட்புப் பணி இது என்பதை அவர் விரைவிலேயே உணர்ந்தார்.
செங்குத்தாகக் கிணற்றுக்குள் இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், அவரது கருவியால் சிறுவன் இருந்த இடத்தை அடைய முடியவில்லை. கிணற்றின் அடிப்பகுதியில், 4 x 4 மீட்டர் அளவிலான வெற்றிடப் பள்ளத்தின் விளிம்பில் ஜைனுல்லா அமர்ந்திருந்தான்.
கிராம மக்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி ஜைனுல்லாவை வெளியே இழுக்க முயன்றதாக அவனுடைய தந்தை கூறினார். ஆனால், உடலின் சில பகுதிகளில் ஏற்கெனவே காயங்கள் ஏற்பட்டிருந்ததால் பயத்தில் இருந்த சிறுவன் கிணற்றின் ஓரமாக நகர்ந்துவிட்டான் என்கிறார்.
மீராஜனின் கருவியைச் சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியவில்லை. அதற்குப் பிறரின் உதவியும் தேவைப்பட்டது.
எனவே, சிறுவனைக் காப்பாற்ற வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
ஆபத்துகள் இருந்தபோதிலும், சிறுவனை மீட்பதற்காக சிறுவன் ஹஸ்ரத் கிணற்றுக்குள் இறங்கும் நிலை ஏற்பட்டது. கிணற்றின் அடிப்பகுதியை அடைந்ததும், ஜைனுல்லாவை அவன் முதல்முறையாகப் பார்த்தான்.
ஜைனுல்லாவின் கைகளை இரண்டாவது கயிற்றுடன் ஹஸ்ரத் வெற்றிகரமாக கட்டினான்.
கிணற்றின் மேற்பகுதியில் கூடியிருந்தவர்கள் கயிறுகளை இழுக்கத் தொடங்கினர்.
ஒலிபெருக்கி மூலம், சுற்றியிருந்த கூட்டம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
“நீ கிட்டத்தட்ட மேலே வந்துவிட்டாய். எங்களைப் பார்க்காதே. கீழே பார்” என்று ஹஸ்ரத்தை நோக்கி மீராஜன் கத்தினார்.
கயிறுகளை இழுப்பவர்கள் “மெதுவாக, மெதுவாக”என அறிவுறுத்தப்பட்டனர். மீட்புப் பணியின் இறுதிக்கட்டக் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காக, அங்கிருந்தவர்கள் சற்று விலகி நிற்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அருகில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்தன.

ஹஸ்ரத்தை மக்கள் பார்த்ததும், அங்கு ஆரவாரம் எழுந்தது. “சிறப்பாகச் செய்தாய், சிங்கமே! சிறப்பாகச் செய்தாய்!” என்று அவர்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
பின்னர், அந்தச் சிறிய துளை வழியாக, கயிற்றின் முனையில் தொங்கியபடி, உடல் முழுவதும் சேறு படிந்த நிலையில் சிறுவன் ஹஸ்ரத் வெளியே வந்தான்.
அந்த இளம் மீட்புப் பணியாளர் பாதுகாப்பாக மேலே கொண்டுவரப்பட்டபோது, “விலகி நில்லுங்கள்! அருமையாகச் செய்தாய், வீரனே!” என்று மீராஜன் கத்தினார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஜைனுல்லாவும் கிணற்றிலிருந்து மேலே இழுத்து மீட்கப்பட்டான். அங்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் வெடித்தது.
ஜைனுல்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் வீடு திரும்பினான்.
ஹஸ்ரத் தனது மகனை மரணத்திலிருந்து மீட்டதாக அவனது தந்தை கருதுகிறார்.
“அந்த உணர்வை விவரிப்பது கடினம். நாம் இழந்துவிட்டதாக நினைக்கும் ஒருவரை நினைத்து வருந்திக்கொண்டிருப்போம். ஆனால், திடீரென்று அவர் மீண்டும் நம் கண் முன்னால் உயிருடன் நிற்பார்.”
ஹஸ்ரத் இல்லையென்றால், கிராம மக்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி ஜைனுல்லாவை வெளியே இழுத்திருப்பார்கள் என்றும், அதனால் அவன் படுகாயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என்றும் அவரது தந்தை அஞ்சுகிறார்.
கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம். தனது மகன் விழுந்த கிணற்றின் துளையை, கிராம மக்கள் மேலே ஒரு பெரிய பாறையை வைத்துத் தற்போது மூடியுள்ளனர்.
மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்ததில் சிறுவன் ஹஸ்ரத்தின் உறவினர் அசீஸுல்லா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். இருப்பினும், தனது உறவினரை அந்தக் கிணற்றுக்குள் அனுப்புவது குறித்து அவருக்குக் கவலை இருந்தது.
“எனக்குச் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், பின்னர் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, ஒருவருக்காக மற்றொருவர் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறினேன். கிணற்றுக்குள் சிக்கிக்கொண்டால் அது ஆபத்தாகிவிடும் என்று ஹஸ்ரத்தை எச்சரித்தேன். ஆனாலும், அவன் உள்ளே செல்ல விரும்பினான்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“அந்தக் கிணற்றின் வாயைப் பார்த்திருந்தால், யாரையும் அதிலிருந்து மீட்பது சாத்தியமற்றது என்றே அவர்கள் நினைத்திருப்பார்கள்.”
மீராஜனைப் பொறுத்தவரை, ஜைனுல்லாவை மீட்டது, அவர் இதுவரை மேற்கொண்ட மீட்புப் பணிகளின் பட்டியலில் சேர்ந்த மற்றொரு பணியாகும்.
தான் எதிர்கொள்ளும் பிரச்னையின் தீவிரத்தை மீராஜன் நன்கு உணர்ந்திருக்கிறார். அவர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே, முறையான பயிற்சி இல்லாதவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட முயற்சிப்பது பெரும்பாலும் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
“சிறிய தவறுகூட கிணற்றுக்குள் சிக்கியிருப்பவரின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்” என்கிறார் அவர்.
கஸ்னி மாகாணத்தில் நடைபெற்ற மற்றொரு மீட்புப் பணியை நினைவுகூர்ந்த அவர், ஆழமான கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க முயன்றபோது மூன்று பேர் உயிரிழந்ததாகக் கூறுகிறார். இறுதியில், அந்தச் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழும்போது, மீட்புப் பணியாளர்கள் விரைவாகச் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு ஏதுவாக, மேலும் பலருக்குப் பயிற்சி அளிக்க அவர் விரும்புகிறார்.

விபத்து நிகழ்ந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2-ஆம் தேதி, ஜைனுல்லாவின் வீட்டுக்கு அருகே, அவன் கிணற்றில் விழுந்த இடத்தில் இரு சிறுவர்களும் மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.
ஜைனுல்லாவின் பெற்றோர், சிறுவன் ஹஸ்ரத்துக்கு நேரில் நன்றி தெரிவித்து, அவனுக்குப் பரிசுகளை வழங்கினார்கள்.
ஹஸ்ரத் அந்தப் பகுதி மக்களின் பார்வையில் ஒரு நாயகனாகத் திகழ்கிறார்
“கிராமத்தில் குழந்தைகள் என்னைப் பார்க்கும்போதெல்லாம், நான் துணிச்சலான, அசாதாரணமான ஒரு செயலைச் செய்ததாகக் கூறுகிறார்கள்” என்கிறான் அவன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு