• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

சவுதி தலைநகர் ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

Byadmin

Oct 12, 2026


சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் போது பயணிகளுக்கான முனையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக சவுதி இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தனது எக்ஸ் தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த விமான நிலையத்தின் மீது முந்தைய நாள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்து, 308 பேர் காயமடைந்திருந்த பின்னணியிலேயே இந்த இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளதுடன், சவுதி அரேபியாவின் வான்பரப்பு மற்றும் விமான நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் எனப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்ததாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், கிழக்கு சவுதி அரேபியாவில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தம்மாம் விமான நிலையத்தின் மீதும் தாக்குதல்களை முன்னெடுத்ததாக ஹூதி அமைப்பின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரீ தெரிவித்துள்ளார்.

புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவைத் தவிர்த்து, சவுதி அரேபியாவின் ஏனைய அனைத்து விமான நிலையங்களும் தங்களின் தாக்குதல் இலக்குகளாகவே கருதப்படும் என எச்சரித்துள்ள அவர், சவுதி எல்லைக்குள் தீவிரத் தாக்குதல்கள் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அரசாங்கப் படைகளுக்கு சவுதி அரேபியா வழங்கி வரும் ஆதரவுக்கும், சனா விமான நிலையத்தின் மீது அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவுமே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin