• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

துருக்கியில் 20,000 பேர் தங்கக்கூடிய நிலத்தடி நகரம்: கடும் வெப்பத்திலும் 15–17°C ஆக இருப்பது எப்படி?

Byadmin

Nov 29, 2026


கப்படோசியா பிராந்தியத்துக்கு அடியில் தோண்டி அமைக்கப்பட்ட டெரின்குயு நிலத்தடி நகரம், ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையைப் பேணுகிறது.

படக்குறிப்பு, கப்படோசியா பிராந்தியத்துக்கு அடியில் நிலத்தில் தோண்டி அமைக்கப்பட்ட டெரின்குயு நிலத்தடி நகரம், ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலையைப் பேணுகிறது.

    • எழுதியவர், செலின் உகுர்தாஸ்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

லட்சக்கணக்கான ஆண்டுகளாகக் காற்றும் மழையும் செதுக்கிய பாறை அமைப்புகள், துருக்கியின் மத்திய அனடோலியா பகுதியில் உள்ள கப்படோசியா (Cappadocia) சமவெளிக்கு மேலே கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் பிரமாண்டமான கூம்பு வடிவப் பாறைகள் பூமியின் ஆழத்தில் இருந்து மேலெழுந்து வருவது போலத் தோற்றமளிக்கின்றன.

அறிவியல்பூர்வமான விளக்கங்கள் கிடைப்பதற்கு முன்பு, இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளே இத்தகைய விசித்திரமான பாறை அமைப்புகளை உருவாக்கியதாக நம்பினர். அதனால்தான் அவை ‘தேவதைகளின் புகைப்போக்கிகள்’ (Fairy chimneys) என்று அழைக்கப்பட்டன. ஆனால், இந்த அசாதாரண நிலப்பரப்புக்கு அடியில் இதைவிட வியப்பூட்டும் மற்றொரு விஷயம் மறைந்திருக்கிறது. அதுதான் டெரின்குயு (Derinkuyu) என்று அழைக்கப்படும் பழமையான நிலத்தடி நகரம்.

அதன் இருண்ட சுரங்கப் பாதைகளுக்குள் நீங்கள் செல்லும்போது, உங்கள் உணர்வுகள் கூர்மையடைகின்றன. குளிர்ந்த காற்று உங்கள் சருமத்தைத் தீண்டுகிறது. கல் சுவர்கள் உங்களைச் சுற்றி நெருங்கி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. குறுகலான, மங்கலான வெளிச்சம் கொண்ட பாதைகள், உங்கள் காலடிச் சத்தத்தின் எதிரொலியைத் தவிர மற்ற எல்லா ஒலிகளையும் விழுங்கிவிடுவது போலத் தோன்றுகின்றன.

நீங்கள் இப்போதுதான் பனிப்புயலில் இருந்து வெளியேறி வந்திருக்கலாம் அல்லது ஜூலை மாதத்தில் அந்தப் பகுதி மீண்டும் ஒரு வெப்ப அலையை எதிர்கொண்டிருக்கலாம். உங்கள் கைகளில் கையுறைகள் இருக்கலாம் அல்லது வெப்பத்தால் உங்கள் முகம் வியர்வையில் நனைந்திருக்கலாம். ஆனால், துருக்கிய மொழியில் ‘ஆழமான கிணறு’ என்று பொருள்படும் டெரின்குயுவின் உள்ளே ஆண்டு முழுவதும் வெப்பநிலை 15 முதல் 17 டிகிரி செல்ஷியஸ் வரை இதமான நிலையில் இருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தப் பகுதியைச் சூறையாடிய அரபுப் படைகளின் படையெடுப்புகளின்போது மக்கள் தஞ்சமடைவதற்காகவே இந்த நிலத்தடி நகரம் முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்று முற்றிலும் மாறுபட்ட ஓர் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் இடமாக இது பார்க்கப்படுகிறது.

By admin