பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
தொன்மையான வரலாறு மற்றும் பல புதிர்களுக்குப் பெயர் பெற்ற துவாரகை மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரலாற்றுடன் தொடர்புடைய பல மறைந்த ரகசியங்கள் இந்தப் பகுதியில் இன்றும் புதைந்து இருக்கக்கூடுமென பலர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக, ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் தேடல்களின் வாயிலாக இந்த ரகசியங்களை வெளிக்கொணர முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அத்தகைய ஒரு முயற்சியின் விளைவாக, துவாரகை, பெட் துவாரகை மற்றும் அரபிக் கடலின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது “முக்கியமான வரலாற்றுச் சான்றுகள்” கண்டறியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சன்க்கிழமை மாலை, இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநரான அலோக் திரிபாதி, துவாரகையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பின்போது, இப்பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள “புதிர்கள்” மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்தது என்ன?
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் அலோக் திரிபாதி, செய்தியாளர் சந்திப்பின்போது, துவாரகை எவ்வளவு பழமையானது, வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, தொல்லியல் துறையின் நீருக்கடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் பிரிவு, துவாரகை, அரபிக் கடல், பெட்-துவாரகை ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறினார்.
“இந்த ஆய்வு இன்னும் தொடர்வதாகவும்” குறிப்பிட்ட அவர், இந்தப் பணியின் ஒரு பகுதியாக, பெட்-துவாரகையின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பண்டைய குடியிருப்புப் பகுதியின் எச்சங்களில், தொல்பொருள் ஆய்வாளர்கள் அதிகாரபூர்வமாக சுமார் 20 குழிகளை அகழாய்வு செய்ததாக விளக்கினார்.
அவரைப் பொறுத்தவரை, இந்த அகழாய்வுகள் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு வளாகத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தக் கட்டமைப்பில் பல அறைகளும், அனைத்துப் பக்கங்களிலும் திறந்த தாழ்வாரங்களும் உள்ளன. அந்தப் பகுதியைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவர் இருந்ததற்கான தடயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பட மூலாதாரம், SACHIN PITHVA
அங்கு பல்வேறு வகையான வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் நடந்ததற்கான வலுவான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மணிகள் தயாரிக்கும் பணி, செம்பு மற்றும் இரும்பு உருக்கும் நடவடிக்கைகள், வெளிநாடுகளுடனான வர்த்தகத்திற்கான தெளிவான சான்றுகள் ஆகியவை அடங்கும்.
“ரோமுடன் தொடர்புடைய பொருட்களும் கண்டறியப்பட்டு இருப்பதாக” திரிபாதி கூறினார். இவற்றில் பண்டைய ரோமின் இன்டாக்லியோ கற்களும் அடங்கும். இவை பெரும்பாலும் மோதிரங்களில் பயன்படுத்தப்பட்ட, செதுக்கப்பட்ட வடிவமைப்புகள் அல்லது வாக்கியங்கள் பதிக்கப்பட்ட ரத்தினக் கற்கள் ஆகும். அதோடு, ரோமானிய நாணயங்களின் பதிவுகள், ரோமானிய ஆம்ஃபோராக்கள் (பெரிய களிமண் பாத்திரங்கள்), டர்பிடோ ஜாடிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த மட்பாண்டங்களின் எச்சங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும் பேசிய திரிபாதி, “இந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் இந்த இடம் மிகவும் முக்கியமானதாக இருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன. இது சர்வதேச வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், செல்வம் மிகுந்த, பொருளாதார ரீதியாக செழிப்பான பகுதியாக இருந்திருக்க வேண்டும்,” என்றார்.
குறிப்பாக, இந்த எச்சங்கள் சிதைக்கப்பட்டதாகவோ அல்லது சேதப்படுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை என்பது மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று எனவும் அவர் கூறினார்.
“நாம் இங்கு கண்டறியும் சான்றுகள் மிகவும் முக்கியமானவை. இது ஒக்கமண்டல் பகுதியின் வரலாறு மற்றும் தொல்லியல் பற்றிய புதிய தகவல்களை அளித்து, அதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள உதவும்,” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், SACHIN PITHVA
முந்தைய அகழாய்வுகளில் கிடைத்தது என்ன?
இந்திய புராணங்களுடனும், பண்டைய செவிவழிக் கதைகளுடனும் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியாக துவாரகை உள்ளது. சமஸ்கிருத மொழியில், “துவாரகை” என்ற சொல்லுக்கு “சொர்க்கத்தின் நுழைவாயில்” எனப் பொருள்.
இந்து மத நம்பிக்கைகள் மற்றும் புராணங்களின்படி, கிருஷ்ணர் இந்த உலகைவிட்டு நீங்கிய பிறகு துவாரகை நகரம் கடலுக்குள் மூழ்கிப் போனது. இந்த நிகழ்வே கலியுகத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. புராணக் கதைகள் தவிர, கடந்த ஆண்டுகளில் கண்டறியப்பட்ட சில தொல்லியல் சான்றுகளும், பண்டைய கட்டுமானங்களும், இப்பகுதியில் ஒரு நகரம் திடீரென நீருக்கடியில் மூழ்கியிருக்கக் கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் காரணமாகப் பலருக்கும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. துவாரகை உண்மையில் கடலுக்குள் மூழ்கியதா? அந்த நகரம் எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது? அங்கு எத்தகைய கட்டடங்களும் கட்டுமானங்களும் அமைந்திருந்தன? அந்த நகரின் எஞ்சிய பகுதிகள் ஏதேனும் இன்றும் நீருக்கடியில் நிலைத்து இருக்கின்றனவா?
துவாரகை என்பது உண்மையில் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட ஒரு பண்டைய நகரமாகத் திகழ்ந்ததா அல்லது அது வெறும் புராணக் கதைகளின் அங்கமாக மட்டுமே இருந்ததா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
துவாரகையின் நீருக்கடியிலான மர்மங்களை வெளிக்கொணரும் தேடல், 1930களில் ஹிருதயானந்த சாஸ்திரியின் முயற்சிகளுடன் தொடங்கியது. பின்னர் 1963இல் ஜே.எம்.நானாவதி, ஹெச்.டி.சங்காலியா ஆகியோரின் தலைமையில் அமைந்த ஒரு குழுவினரால் அங்கு பெருமளவிலான அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடல்சார் தொல்லியல் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட நீருக்கு அடியிலான அகழாய்வுகளின்போது, பண்டைய துவாரகை நகருடன் தொடர்புடையவை எனக் கருதப்படும் பல எச்சங்கள் கண்டறியப்பட்டன.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 1990 வரையிலான காலகட்டத்தில், துவாரகையின் நீருக்கடியில் மூழ்கிய எச்சங்கள் மற்றும் பண்டைய கலைப் பொருட்கள் தொடர்பான பல முக்கியக் கண்டுபிடிப்புகளைத் தொல்லியல் அறிஞர்கள் வெளிக்கொண்டு வந்தனர். பண்டைய நகரத்தின் சுவர்களைத் தாங்கி நின்றிருக்கக்கூடிய கோட்டைச் சுவர்களின் அடித்தளங்கள், பெரிய கல் பாறைகள், தூண்கள், கல் நங்கூரங்கள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்கள் இந்தக் கண்டுபிடிப்புகளில் அடங்கும்.
கடந்த 1960களின் முற்பகுதியில், துவாரகையில் அமைந்துள்ள ஜகத் மந்திர் ஆலயத்திற்கு அருகிலிருந்த ஒரு வீட்டை இடிக்கும் பணிகள் நடந்தபோது, ஒரு பழமையான கோவிலின் மேல் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது.
பின்னர், புனேவில் அமைந்துள்ள டெக்கான் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு விஷ்ணு கோவிலின் எச்சங்களை வெளிப்படுத்தின. ஆய்வாளர்கள் அந்தப் பகுதியிலுள்ள பிற இடங்களையும் ஆராய்ந்து, அங்கிருந்தும் பல கூடுதல் கலைப் பொருட்களைக் கண்டெடுத்தனர்.
இந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, துவாரகை நகரமானது வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அழிவைச் சந்தித்து இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், CSIR-NIO
பெட்-துவாரகையில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள்
கோவாவில் இருக்கும் தேசிய கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரும் கடல்சார் தொல்லியல் அறிஞருமான, சுந்தரேஷ் மற்றும் ஏ.எஸ்.கௌர், துவாரகை மற்றும் பெட்-துவாரகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் குறித்த ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர்.
இந்த ஆய்வுக் கட்டுரையின்படி, இந்தியாவின் பண்டைய கடல்சார் மற்றும் வர்த்தக வரலாற்றில் பெட்-துவாரகை மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தியாவுக்கும் மெசபடோமியாவுக்கும் இடையிலான வர்த்தகம் இந்தப் பகுதியின் வாயிலாகவே நடைபெற்றதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தப் பகுதி சங்குகளுக்குப் பெயர் பெற்றதாகத் திகழ்ந்தது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிந்து சமவெளி நாகரிகக் காலகட்டத்தில், இந்தச் சங்குகள் ஆபரணங்களையும் அலங்காரப் பொருட்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன.
துவாரகையில் பெருமளவிலான சங்குகள் கண்டெடுக்கப்பட்டதை, தேசிய கடலியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தின. தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ‘முன்வரலாற்றுக் காலத்தை’ சேர்ந்த பல எச்சங்களையும் வெளிக்கொண்டு வந்தன. விரிவான எழுத்துப்பூர்வ ஆவணங்கள் கிடைப்பதற்கு முந்தைய மனித வரலாற்றின் மிகத் தொடக்க காலத்தையே இந்தக் காலம் குறிக்கிறது.
இதுமட்டுமின்றி, சங்கில் செய்யப்பட்ட ஒரு முத்திரையையும், ஒரு மண்பாண்டத் துண்டின் மீது பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளையும் தொல்லியல் அறிஞர்கள் கண்டெடுத்தனர். இந்த அகழாய்வுகளின்போது, பல்வேறு மண்பாண்டப் பொருட்களும், கல்லால் செய்யப்பட்ட கூர்மையான கருவியான ‘செர்ட் பிளேடு’ ஒன்றும் கண்டறியப்பட்டன.
கடந்த 1981 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் பெட்-துவாரகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டே, இந்த ஆய்வுக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், CSIR-NIO
அகழாய்வுப் பணிகள் எங்கே நடந்தன?
பெட்-துவாரகை என்பது மணல் மற்றும் பாறைகளால் ஆன, நீண்ட மற்றும் குறுகிய ஒரு தீவு. இது துவாரகைக்கு வடக்கே சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் நீளம் ஏறக்குறைய 13 கி.மீ.
இப்பகுதியில் பெருமளவில் சங்குகள் காணப்படுவதால், இந்த இடம் “சங்கோதார்” என்றும் அழைக்கப்படுகிறது. “சங்கோதார்” என்னும் பெயர் மகாபாரதத்தில், குறிப்பாக அதன் ‘சபா பர்வம்’ என்னும் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலின் கூற்றுப்படி, யாதவர்கள் துவாரகையில் இருந்து ‘அந்தர்த்வீபம்’ நோக்கிப் பயணித்து, அங்கே மகாதேவரை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாகக் கடல் நீரால் பெட்-துவாரகை கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதன் விளைவாக, கி.மு.2000-1000 மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்ததாகக் கருதப்படும் இந்தத் தொன்மையான துறைமுகத்தின் கிழக்குப் பகுதி, தற்போது பகுதியளவு கடலுக்குள் மூழ்கிவிட்டது. இப்பகுதியின் தென்புறத்தில் அமைந்திருந்த பல முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் கடலால் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 1930ஆம் ஆண்டில், தொல்லியல் துறை அதிகாரிகள் திங்கேஷ்வர் மகாதேவர் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள நீலகண்ட மகாதேவர் கோவிலுக்கு அருகில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது, கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மனித குடியிருப்புகளுக்கான தடயங்களைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
அங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உடைந்த மண்பாண்டத் துண்டில், மௌரிய பேரரசுக் காலத்தைச் சேர்ந்த ‘பிராமி’ எழுத்துருவில் பொறிப்புகள் காணப்பட்டன. இந்த எழுத்துப் பொறிப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பின்னர், 1981ஆம் ஆண்டில், ‘கடல்சார் தொல்லியல் மையம்’ பெட்-துவாரகையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘சிதி பாவா தர்கா’வுக்கு அருகில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
கடந்த 1984-85 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளின்போது, கி.மு.1500ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு சுவரின் எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.
இந்தச் சுவர், “பெட்டி முறை (Box Technique)” என்று அழைக்கப்படும் ஒரு கட்டுமான நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு இருந்தது. பிற்கால ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த முத்திரைகள், ஜாடிகள் மற்றும் பிற தொல்லியல் எச்சங்களையும் தொல்லியலாளர்கள் அங்கு கண்டுபிடித்தனர்.
அதே பகுதியில், சுமார் 580 மீட்டர் நீளம் கொண்ட மிகப் பிரமாண்டமான ஒரு சுவரின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பட மூலாதாரம், CSIR-NIO
பாலபூரில் 1991இல் நடந்த அகழாய்வில் கிடைத்தது என்ன?
பாலபூரில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, சுரங்கத் தோண்டல் மற்றும் அகழ்வுப் பணிகள் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே நடைபெற்றதாகத் தொல்லியல் துறை கருதியது. இதன் காரணமாக, தொல்லியலாளர்கள் பாலபூரிலும் அகழாய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இருப்பினும், அங்கு மிகக் குறைந்த அளவிலான தொல்லியல் எச்சங்களே கண்டறியப்பட்டன. இந்தப் பகுதி பல ஆண்டுகளாகக் கடுமையான மண் அரிப்புக்கு உள்ளாகி இருப்பதையும், அதன் விளைவாகப் பல பண்டைய எச்சங்கள் அழிந்து போயிருக்கக்கூடும் என்பதையும் இது தெளிவாக உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அகழாய்வில் மிகக் குறைந்த அளவிலான எச்சங்களே கிடைத்திருப்பினும், அவை ஹரப்பா காலத்தைச் சேர்ந்தவை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். பெட்-துவாரகையின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் ஒரு காலத்தில் மனித குடியிருப்புகள் இருந்தன என்பதையும் இது சுட்டிக்காட்டியது.
தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள், ஆறு சாத்தியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அடையாளம் கண்டன. இந்த இடங்கள் BDK-1 முதல் BDK-6 என்பதாகப் பெயரிடப்பட்டன.
பெட்-துவாரகையின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில்தான், அந்தத் தீவிலேயே அதிக அளவிலான தொல்லியல் எச்சங்கள் குவிந்து இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அங்கு கிடைத்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், தொல்லியலாளர்கள் பெட்-துவாரகையின் வரலாற்றை, வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம் என இரண்டு முகிய காலகட்டங்களாகப் பிரித்தனர்.
பட மூலாதாரம், CSIR-NIO
அகழாய்வில் கிடைத்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பொருட்கள்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இரண்டு எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட ஒரு பண்டைய முத்திரையை தொல்லியலாளர்கள் கண்டெடுத்தனர்.
வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்களையும் சங்குகைன் எச்சங்களையும் அவர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், அவற்றின் துல்லியமான காலத்தை அறிந்துகொள்ள இயலவில்லை.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது கி.மு.3,500 முதல் கி.மு.1000 வரையிலான காலகட்டத்தைக் குறிக்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் சிந்து சமவெளி நாகரிகம் செழித்து வளர்ந்தது.
பெட்-துவாரகையில் கண்டறியப்பட்ட நாகரிகமானது, சிந்து சமவெளி நாகரிகத்தின் பிற்காலத்தைச் சேர்ந்தது என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
இந்தக் காலகட்டத்தின் வயதை உறுதி செய்வதற்காக ‘வெப்ப ஒளிர்தல் காலக்கணிப்பு (TL dating)’ எனப்படும் அறிவியல் முறையைப் பயன்படுத்தி, அங்கு கிடைத்த மண்பாண்டத் துண்டுகளை தொல்லியலாளர்கள் பரிசோதித்தனர். இந்தப் பரிசோதனையின் அடிப்படையில், அவர்கள் காலத்தை மதிப்பிட்டனர்.
பெட்-துவாரகையில் கிடைத்த மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, சங்கால் செய்யப்பட்ட ஒரு முத்திரை. 20க்கு 18மி.மீ அளவுள்ள அந்த முத்திரையில், மூன்று தலைகளைக் கொண்ட ஒரு விலங்கின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அது காளையையோ, யுனிகார்ன் எனப்படும் ஒற்றைக் கொம்பு விலங்கையோ அல்லது சிறிய கொம்புகளைக் கொண்ட ஓர் ஆட்டையோ குறிப்பதாக இருக்கலாம் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையை ஒத்ததாகவே இதுவும் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். பெட்-துவாரகையில் மேற்கொள்ளப்பட்ட நீருக்கு அடியிலான் அகழாய்வின்போது இந்த முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது.
இவைதவிர, சிவப்பு மற்றும் சாம்பல் நிற மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகளையும், ஜாடிகள் மற்றும் தட்டுகளின் எச்சங்களையும் தொல்லியலாளர்கள் கண்டறிந்தனர். இந்தப் பொருட்கள் கி.மு.1000 ஆண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது.
பட மூலாதாரம், CSIR-NIO
அகழாய்வில் கிடைத்த வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த பொருட்கள்
பெட்-துவாரகையில் அமைந்திருந்த பழங்கால கட்டமைப்பின் வரலாற்றுக் காலத்தைக் கண்டறிய உதவும் வகையில், தொல்லியல் ஆய்வாளர்கள் நாணயங்களுய்ம் மண்பாண்டங்களையும் கண்டெடுத்தனர்.
அப்படி கண்டுபிடிக்கப்பட்ட நான்கு நாணயங்களில், மூன்று செம்பாலும், ஒன்று ஈயத்தாலும் செய்யப்பட்டிருந்தன.
இந்தச் செம்பு நாணயங்களில் இரண்டு, குஷானர் காலத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நாணயங்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாணயங்களில் ஒன்றில், நின்ற நிலையில் இருக்கும் ஒரு மன்னரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் கையில் வாள் ஏந்தியவாறும், தலையில் கிரீடம் அணிந்தவாறும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் காலப்போக்கில் மங்கிப் போனதால், அவற்றை இப்போது தெளிவாகப் படிக்க முடியவில்லை.
ஈயத்தால் செய்யப்பட்ட அந்த நாணயம் 3.4952 கிடாம் எடையைக் கொண்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் பன்னிரண்டு ஆரங்களைக் கொண்ட ஒரு சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது, மறுபக்கம் காலப்போக்கில் தேய்ந்து போய்விட்டது.
பட மூலாதாரம், CSIR-NIO
இந்த நாணயங்கள், அக்காலகட்டத்தில் இந்தப் பகுதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, துடிப்பான நாகரிகம் செழித்து விளங்கியதற்கான சான்றுகளாகத் திகழ்வதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
அதே காலகட்டத்தைச் சேர்ந்த மண்பாண்டப் பொருட்களும் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அந்த மண்பாண்டங்களின் வடிவம், வடிவமைப்பு, மேற்பரப்புத் தன்மை ஆகியவற்றில் காணப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டு, அங்கு பல்வேறு பாணிகளிலான மண்பாண்டங்கள் பயன்பாட்டில் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதோடு, அங்கு சங்கு சார்ந்த தொழில்துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. ஹரப்பா நாகரிக காலகட்டத்தில் வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் சங்குகள் முக்கியமான பங்கை வகித்தன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம் ஆகிய இரு காலகட்டங்களையும் சேர்ந்த சங்குகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெட்-துவாரகையில் சங்கு சார்ந்த பெரிய அளவிலான தொழில்துறை நீண்ட காலத்திற்கு செழித்து விளங்கியதை இது உணர்த்துகிறது. சங்குகளைக் கொண்டு வளையல்களைச் செய்யும் நுட்பங்களை மக்கள் உருவாக்கி இருந்ததற்கான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பட மூலாதாரம், CSIR-NIO
பெட்-துவரகையில் சங்குகள் பெருமளவில் எளிதாகக் கிடைத்ததே, அங்கு ஹரப்பா நாகரிகம் செழித்து வளர்ந்ததற்கான முதன்மைக் காரணம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அந்தக் காலகட்டத்தில், சங்குகள் பெரிய வணிக மதிப்பைக் கொண்டு இருந்ததுடன், முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பொருளாகவும் திகழ்ந்தன.
பண்டைய காலகட்டத்தில் பெட்-துவாரகையைச் சுற்றியுள்ள கடல் மட்டம் உயர்ந்ததன் விளைவாக, அங்கு பெரும்பகுதி நீருக்கு அடியில் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
எனினும், கடல் மட்டம் உயர்ந்ததற்கான துல்லியமான காரணத்தை தொல்லியல் துறையால் இதுவரை கண்டறிய இயலவில்லை.
இந்த ஆய்வின்படி, இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டு பார்க்கையில், கி.பி.மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் அங்கு மனித குடியேற்றம் மீண்டும் தொடங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கிறிஸ்தவத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இங்கு வாழ்ந்த மக்கள், ரோமானியர்களுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெட்-துவாரகையில் நீருக்கு அடியில் நடந்த அகழாய்வின்போது, தொல்பொருள் ஆய்வாளர்கள் கல் நங்கூரங்கள், மூன்று துளைகள் கொண்ட கல் நங்கூரங்கள், ஒரு கல் குவளை, வளையக் கைப்பிடி கொண்ட ஒரு துளைப்பான், ஒரு மண்பாண்ட நீர்த் தெளிப்பான் உள்ளிட்ட பல பழங்காலப் பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
மகாபாரத காலம் கி.மு.1500ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பெட்-துவாரகையில் கண்டெடுக்கப்பட்ட கல் நங்கூரங்களும் கி.மு.1500ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனக் காலவரையறை செய்யப்பட்டு இருப்பதால், இந்த எச்சங்கள் மகாபாரத காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு