பட மூலாதாரம், Facebook/Arivu being
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
டெல்லியில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, செவ்வாய்க்கிழமை காலையில் ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு சென்னை தலைமைச் செயலகம் முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரைக் காவல்துறையினர் வலுக்கட்டமாக காவல் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ‘நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பேச வேண்டும்’ எனக் கூறி அவர் முழக்கம் எழுப்பினார்.
த.வெ.கவின் கொள்கைப் பாடலுக்காக இசையமைத்த தெருக்குரல் அறிவு, காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
விக்கிரவாண்டியில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் த.வெ.கவின் முதல் மாநாடு நடைபெற்றது. அதில், அக்கட்சியின் கொள்கை விளக்கப் பாடல் ஒளிபரப்பானது. இந்தப் பாடலுக்கு ராப் பாடகர் தெருக்குரல் அறிவு இசையமைத்திருந்தார்.
இதைப் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தெருக்குரல் அறிவு, ‘த.வெ.க கொள்கை விளக்கப் பாடலுக்கு இசையமைக்க என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி’ எனக் கூறியிருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு, தற்போது நீட் எதிர்ப்பு குறித்து முழக்கமிட்டதற்காக அவரைக் காவல்துறை அழைத்துச் செல்லப்பட்ட விதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உதயநிதி விமர்சனம்
பட மூலாதாரம், X/Udhayanidhi Stalin
அவரைக் காவல்துறை கைது செய்ததாக அதிகாரபூர்வமற்ற தகவல் பரவியது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவை கைது செய்த தமிழக அரசை கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளை அவரது குரல் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், ‘நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் வேளையில், தெருக்குரல் அறிவை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
‘நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது; மாறாக, அவை செவிமடுக்கப்பட வேண்டும்,’ எனவும் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்துக்கு ‘தெருக்குரல்’ அறிவு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அடிக்கக் கூடாது. மாணவர்களை அடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.” எனக் கூறினார்.
‘முதலமைச்சரைச் சந்திக்கவில்லை’
இதன்பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை ‘தெருக்குரல்’ அறிவு சந்தித்துப் பேசினார். அப்போது பேசப்பட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. அதேநேரம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை அவர் சந்தித்துப் பேசியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை மறுத்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை ‘தெருக்குரல்’ அறிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்துப் பேசினேன். முதலமைச்சரைச் சந்திக்கவில்லை. இதற்கு மாறாகக் கூறும் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உடனான சந்திப்பின்போது, ‘மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்பதைப் பதிவு செய்ததாக ‘தெருக்குரல்’ அறிவு தெரிவித்துள்ளார்.
‘நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்’ எனவும் அறிக்கையில் ‘தெருக்குரல்’ அறிவு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் நடத்தியது ஏன்?
பட மூலாதாரம், Facebook/Arivu being
‘தெருக்குரல்’ அறிவு, தலைமைச் செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் குறித்தும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி தான் குரலெழுப்பியதாகக் கூறியுள்ளார்.
மேலும், ‘நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாகப் பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது.’ என்கிறார்.
“இந்தநிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது” எனக் கூறியுள்ள ‘தெருக்குரல்’ அறிவு, ‘தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
த.வெ.க அளித்த விளக்கம்
பட மூலாதாரம், Facebook/Arivu being
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் குறித்து முதலில் த.வெ.க தலைமை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஜூலை 22-ஆம் தேதி அன்று அக்கட்சியின் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
‘டெல்லியில் இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி காவல்துறையில் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்’ என, த.வெ.க விமர்சித்துள்ளது.
நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத்தன்மை குறைவது மட்டுமல்லாமல் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி தங்களின் எதிர்காலக் கனவு கேள்விக்குறியாவது தொடர்வதாக, த.வெ.க தெரிவித்துள்ளது.
‘ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆகவே, நீட் தேர்வை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்’ என வலியுறுத்துவதாகவும் த.வெ.க கூறியுள்ளது.
மற்றொரு பதிவில், ‘நீட் தேர்வு குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பது தான் த.வெ.வின் உறுதியான நிலைப்பாடு எனவும் த.வெ.க தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், X/DIPR
புதன்கிழமையன்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ‘மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும் கடுமையாகத் தாக்கியும் மத்திய அரசு கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது’ எனக் கூறியுள்ளார்.
இறுதியாக புதன்கிழமை மதியம் தவெக தலைவர் விஜயின் அதிகாரப்பூர்வ கட்சிப் பக்கத்தில் வெளியான பதிவில் டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை,” என்று அந்தப் பதிவில் தெரிவித்தார்.
மேலும் அந்தப் பதிவில், “நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.” என்றும் கூறியுள்ளார்.
‘சாலை, போராடுவதற்கான இடம் அல்ல’ – அமைச்சர் ராஜ்மோகன்
இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமையன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை அழைத்துச் சென்றது. இதுதொடர்பாக காட்சிகள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்பினர் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
“மாணவர்களின் அறவழிப் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையூறு செய்யும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” எனக் கூறினார்.
“சாலை என்பது போராடுவதற்கான இடம் அல்ல. மாலை நேரத்தில் அலுவலக பணி, மருத்துவ தேவைக்காக செல்வார்கள். டெல்லி போராட்டத்துக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.
“நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு என்பது தான் த.வெ.கவின் நிலைப்பாடு” எனக் கூறிய ராஜ்மோகன், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விரிவாகப் பேசியிருக்கிறோம்” என்கிறார்.
“நீட் எதிர்ப்பு தொடர்பாக, த.வெ.கவின் குரல் வலுவாக இல்லை எனக் கூறப்படுகிறதே?” என செய்தியாளர்கள் கேட்டபோது, “டபுள் ஸ்ட்ராங்காக பேசி வருகிறோம். சுமூகத் தீர்வை நோக்கிய அரசியலை முன்னெடுக்கிறோம்.” எனக் கூறினார்.
“கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது தான் நிரந்தர தீர்வாக அமையும். இதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மாநிலப் பட்டியலுக்கு மாற்றாமல் பிரச்னை தீராது.” எனக் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு – த.வெ.க நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டில் நீட் தேர்வு 2017-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதே ஆண்டில் நீட் தேர்வு மதிப்பெண் குறைவாக இருந்ததால் அரியலூரில் மாணவி அனிதாவால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தினார் அனிதா. இறுதியில் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் தற்கொலை மூலம் உயிரிழந்தார். அனிதா குடும்பத்தினரை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடிகர் விஜய் சந்தித்துப் பேசி ஆறுதல் அளித்தார்.
அரசியல் ரீதியாகவும் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் மையப்பொருளாக இருந்து வருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு நீட் தேர்வு எதிர்ப்பை அக்கட்சி முன்வைத்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை த.வெ.க நடத்தியது.
அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “நீட் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள மசோதாவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” எனப் பேசினார்.
‘மாநில அரசுகளுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் கல்லூரிகளுக்கு வேண்டும் என்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும்’ எனவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், X/DIPR
ஆனால், 2025 ஆம் ஆண்டு மே மாதம் மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், ‘நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் உள்ளது. அது ரொம்ப பெரிசு. உங்கள் மனதை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள்’ எனப் பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.
செவ்வாய்க் கிழமையன்று (ஜூலை 21) த.வெ.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவக் கல்வி விஷயங்களில் முழு அதிகாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்கால தீர்வு நோக்கிய த.வெ.கவின் பார்வையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பான தவெக அரசின் நிலைப்பாட்டை தன்னுடைய பதிவில் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், “நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.” என்றும் தெரிவித்தார்.
முக்கியக் குறிப்பு
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு