பட மூலாதாரம், Ramagundam Police Commissionerate/ Ambala Rajender
தெலங்கானா மாநிலத்தில் பெத்தபள்ளி மாவட்டம் கோதாவரிகனியில் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் உண்மை கண்டறியப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுல்தானாபாத் மண்டலத்தைச் சேர்ந்த 20 வயது அக்ஷிதா ராணி என்ற இளம்பெண் மயங்கிய நிலையில் இந்த மாதம் 12-ஆம் தேதி கோதாவரிகனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அடுத்த நாள் (13 ஆம் தேதி) அவர் உயிரிழந்தார்.
குடும்பத்தினரின் புகாரின் பேரில் ‘சந்தேகத்திற்கிடமான மரணம்’ என வழக்குப் பதிவு செய்த கோதாவரிகனி-1 நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
கர்ரெபள்ளியைச் சேர்ந்த ஜெட்டி நவீன் என்பவர்தான் அக்ஷிதா ராணியின் மரணத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோதாவரிகனி துணை ஆணையர் பூக்யா ராம்ரெட்டி தெரிவித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொள்ள பிபிசி முயற்சி செய்து வருகிறது. அவர்களிடமிருந்து பதில் கிடைத்தவுடன், அதுகுறித்த தகவலை உடனே இங்கு புதுப்பிப்போம்.
பட மூலாதாரம், Ambala Rajender
நடந்தது என்ன? காவல்துறை தகவல்
காவல்துறையினர் ஊடகங்களுக்கு அளித்த தகவல்களின்படி, அக்ஷிதா ராணி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சேரியால மாவட்டம் நஸ்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தனது பட்டயப் படிப்பு படித்தார். அந்தச் சமயத்தில், அதே கல்லூரியில் ஒப்பந்த விரிவுரையாளராக பணியாற்றி வந்த நவீன் குமார் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.
ஒரே ஊரைச் சேர்ந்த அக்ஷிதா, நவீன் இருவருக்கும் இடையேயான பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.
“ஏற்கனவே திருமணமான ஜெட்டி நவீன் குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக அவர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார். அக்ஷிதாவுடனான தனது உறவை திருமண வாழ்க்கை வரை கொண்டு செல்ல நவீன் குமார் விரும்பினார்” என்று கோதாவரிகனி துணை ஆணையர் பூக்யா ராம்ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
அக்ஷிதா பட்டயப் படிப்பை முடித்த பிறகு, ஹைதராபாத்தில் சுரங்கப் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். தொழிற்பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வகுப்புத் தோழர்களுடன் இணைந்து கோதாவரிகனியில் உள்ள ‘சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்திற்கு’ களப்பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார்.
“அங்கு மேலதிகாரியாக பணியாற்றி வந்த பொம்மகண்டி ரவிக்குமார் (35) என்பவருடன் அக்ஷிதாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இந்தச் சமயத்தில் நவீனுக்கும் அக்ஷிதா ராணிக்கும் இடையே இடைவெளி அதிகரித்து தகராறுகள் ஏற்பட்டன. அக்ஷிதா தன்னை ஒதுக்கிவிட்டு ரவிக்குமாருடன் நெருங்கிப் பழகுவதை நவீனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் இருவர் மீதும் நவீன் வஞ்சம் வளர்த்துக்கொண்டார்” என்று தங்களது விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் துணை ஆணையர் ராம்ரெட்டி தெரிவித்தார்.
இந்தத் தகராறுகள் குறித்து தெரியவந்ததும், அக்ஷிதா ராணியின் குடும்பத்தினர் அவரது படிப்பை நிறுத்திவிட்டனர். கடந்த சில மாதங்களாக அவர் கோதாவரிகனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பட மூலாதாரம், Ramagundam Police Commissionerate
செப்டம்பர் 12-ஆம் தேதி என்ன நடந்தது?
“இந்தச் சூழலில், செப்டம்பர் 12 அன்று தனது பணி முடிந்து ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த அக்ஷிதா ராணியை, எஃப்.சி.ஐ கூட்ரோடு அருகே நவீன் தனது காரில் ஏற்றிக்கொண்டார். காரில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘ரவிக்குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் தற்கொலை செய்துகொள்வதாக’ அக்ஷிதா ராணியை வற்புறுத்தி ஒரு தற்கொலை கடிதத்தை நவீன் எழுத வைத்துள்ளார். அதன் பிறகு, காரில் வைத்து அக்ஷிதா ராணியை பலவந்தப்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடிக்க வைத்துள்ளார்” என்று துணை ஆணையர் தெரிவித்தார்.
“அக்ஷிதா ராணியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்; ஆனால், நவீன் திட்டமிட்டே தாமதப்படுத்தியுள்ளார். அதன்பின், அக்ஷிதாவின் கைபேசியிலிருந்தே அவரது தந்தைக்கு அழைப்பு விடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நம்ப வைக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் தனது காரிலேயே அக்ஷிதாவின் பெற்றோரையும் ஏற்றிக்கொண்டு போய், கோதாவரிகனி அரசு மருத்துவமனையில் அக்ஷிதா ராணியை சேர்த்துள்ளார்” என்றும் துணை ஆணையர் கூறினார்.
செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்ஷிதா ராணி அடுத்த நாள் உயிரிழந்தார்.
“சிசிடிவி காட்சிகள், தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் இதர தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் இந்த வழக்கின் மர்மத்தை நாங்கள் தீர்த்துள்ளோம்” என்று கோதாவரிகனி துணை ஆணையர் பூக்யா ராம்ரெட்டி தெரிவித்தார்.
அக்ஷிதா ராணியைக் கொலை செய்துவிட்டு, அந்தத் தற்கொலை கடிதத்தை வைத்துத் தப்பித்துவிடலாம் என நவீன் கணக்கு போட்டதாகத் துணை ஆணையர் ராம்ரெட்டி கூறினார்.
தனது மகள் துன்புறுத்தப்பட்டிருப்பதாக அக்ஷிதாவின் தந்தை பிபிசியிடம் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவீன் குமாரைக் காவல்துறையினர் கைது செய்துவிட்டதால், அவரிடம் பேசும் வாய்ப்பு பிபிசிக்குக் கிடைக்கவில்லை. நவீன் குமாரின் குடும்பத்தினருடன் பேச முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் தொடர்பிற்கு வரும்போது இந்தச் செய்தியில் புதுப்பிக்கப்படும்.
பட மூலாதாரம், Ambala Rajender
ரவிக்குமார் மீதான குற்றச்சாட்டுகள்
காவல்துறையினர் அளித்த விவரங்களின்படி, ஜனவரி மாதம் தொழிற்பயிற்சியின் போது அறிமுகமான சிங்கரேணி ஊழியர் பொம்மகண்டி ரவிக்குமார் மீது, கடந்த ஏப்ரல் மாதம் அக்ஷிதா பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பொம்மகண்டி ரவிக்குமாரையும் செப்டம்பர் 20 அன்று கோதாவரிகனியில் காவல்துறையினர் கைது செய்தனர்.
தொழிற்பயிற்சியின் போது அக்ஷிதா ராணியுடன் நெருக்கமாகப் பழகிய பொம்மகண்டி ரவிக்குமார் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் துணை ஆணையர் பூக்யா ராம்ரெட்டி தெரிவித்துள்ளார்.
‘பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகக் காட்டியுள்ளனர்’
இருப்பினும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொம்மகண்டி ரவிக்குமாரின் மனைவி பொம்மகண்டி பிரியங்கா, தனது கணவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகக் காட்டியுள்ளனர்”* என்று பிரியங்கா பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “உயிரிழந்த பெண்ணும், என் கணவரும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு காலகட்டங்களில் டிப்ளமோ படித்தவர்கள். 12 நாட்கள் நடந்த தொழிற்பயிற்சியின்போது, சீனியர்-ஜூனியர் என்ற முறையில் அவர்களுக்குள் ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே இருந்தது. பயிற்சி முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, என் கணவர் மீது அவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். சிங்கரேணி நிறுவனத்தின் உள்விசாரணையில் என் கணவர் மீது குற்றமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டு விட்டது” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், நவீன் மற்றும் ரவிக்குமாரின் துன்புறுத்தலும், அதிகாரிகளின் அலட்சியமுமே தன் மகளின் கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்று உயிரிழந்த பெண்ணின் தந்தை தந்த்ரா இசாக் பிபிசியிடம் கூறினார்.
“என் மகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் அளித்த புகாரின் மீது சிங்கரேணி அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டனர். அவர்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் விஷயம் இந்த அளவிற்கு வந்திருக்காது” என்று அவர் வேதனையுடன் கூறினார்.
சிங்கரேணி ராமகுண்டம்-1 மண்டலப் பொது மேலாளர் லலித் குமார் மீதும் நிறுவனம் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் பிபிசி பேசியது.
“பாலியல் துன்புறுத்தல் புகாரைச் சிங்கரேணி நிறுவனம் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்”* என்று பொது மேலாளர் லலித் குமார் கூறினார்.
பணியிடங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்திற்குச் சிங்கரேணி நிறுவனம் உறுதிபூண்டுள்ளது அவர் தெரிவித்தார்.
“தொழிற்பயிற்சி முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் மாதத்தில் மேலதிகாரி ரவிக்குமார் மீது அக்ஷிதா ராணி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே பெண் உறுப்பினர்களைக் கொண்ட உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, மறுநாளே விசாரணை தொடங்கப்பட்டது. அவரது பெற்றோரையும் விசாரணைக்கு அழைத்தோம். ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரத்தையும் குழுவின் முன் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆதாரம் இல்லாமல் ஒரு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இருப்பினும், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையை அணுகலாம் என்று எழுத்துப்பூர்வமாகக் கடிதம் கொடுத்தோம். ஆனால், அவர்கள் காவல்துறையை அணுகவில்லை” என்று பொது மேலாளர் லலித் குமார் விளக்கமளித்தார்.
மேலும் அவர், “நடந்த சம்பவத்திற்கு நிறுவனத்தின் சார்பில் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிங்கரேணி நிறுவனத்தில் தினமும் 2,000 பெண் ஊழியர்கள் 1,600 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அனைத்துச் சுரங்கங்களிலும் பெண்களுக்கான சிறப்பு பாதுகாப்புப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தரைவழி மற்றும் பூமிக்கடியிலான சுரங்கங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
(குறிப்பு: தற்கொலை எண்ணங்கள் மேலிடும்போது உதவி பெற, இந்திய அரசின் ஜீவன் சாத்தி உதவி எண்ணான 18002333330-ஐ அழைக்கவும்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 18005990019 என்ற உதவி எண் 13 மொழிகளில் சேவை வழங்குகிறது.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் உதவி எண் 08026995000-ஐயும் அழைக்கலாம்).
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு