• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளுக்கும் என்ன தண்டனை கிடைக்கக் கூடும்? ஒரு பார்வை

Byadmin

Oct 28, 2026


17 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு: சிறையில் இருந்து தப்பினால் என்ன தண்டனை? 'ஆட்டோ' சங்கர் வழக்கு சொல்லும் தகவல்கள்

படக்குறிப்பு, சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதிகளில் ஒருசிலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்ற வழக்கில் சிறைப் பணியாளர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சிறைத்துறை தெரிவித்துள்ளது.

காவலர்களைத் தாக்கிவிட்டுச் சென்ற கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் கண்டமனூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? சிறை வாழ்வில் இவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? என்பதைப் பார்க்கலாம்.

தேனி சிறையில் நடந்தது என்ன?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்தச் சிறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு 334 பேர் அடைக்கப்பட்டிருந்ததாக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

“திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சில கைதிகள் கூச்சல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு பாரா காவலராகப் பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபு, கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றுள்ளார். அப்போது, அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டு சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றனர். பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களைத் தாக்கி சாவிகளைப் பறித்து நுழைவாயிலைத் திறந்துகொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.



By admin