பட மூலாதாரம், Deva/X
”நான் நல்லதொரு மெலடி போட்டால் இது இளையராஜா பாடலில் இருந்து காப்பி எடுத்ததாகச் சொல்வார்கள். கொஞ்சம் வெஸ்டர்ன் ஆக பாட்டுப்போட்டால் ரஹ்மான் இசையிலிருந்து எடுத்துவிட்டதாகப் பேசுவார்கள். அதனால்தான் எனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள கானா பாடல்களை உருவாக்கினேன். நான் எவ்வளவோ மெலடி பாடல்கள் போட்டிருந்தாலும் அதைப் பற்றிப் பேசாமல் கானா பாடல்களை மட்டும் பேசும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும். ஆனால் அதுதான் எனக்கு பெரும் பெயர் பெற்றுத்தந்தது!”
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் தேனிசைத்தென்றல் என்று தமிழ்ச் சினிமா இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா இவ்வாறு கூறியிருந்தார்.
தமிழர்கள் ஒன்று கூடும் தருணங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இருந்தால் அங்கே தேவாவின் கானாவும் இருக்கும் என்பது கால் நூற்றாண்டு கால வரலாறு. ஆனால் அவற்றைத் தாண்டி அவருக்கு பல்வேறு அடையாளங்களும் இருப்பதைச் சொல்கிறார் பாடலாசிரியர் சிநேகன்.
தேவா இன்று காலையில் மரணமடைந்த செய்தி கேட்டபின்பு, ஊடகங்களில் சிநேகன் பேசியபோது, ”கானா என்ற பாடலுக்குள் அவரை அடக்கி விடுவார்கள். ஆனால் அவர் போல மெலடி கொடுத்தவர், ஹீரோ ஓப்பனிங் பாடல் கொடுத்தவர், கதைப்பாடல்கள், காதல் பாடல்கள் கொடுத்தவர் யாருமில்லை. ஆனால் கானாவை நவீன இசையோடு கை கோர்க்க கொண்டு வந்ததில் அவர்தான் கானாவுக்கு தந்தை. அவருடைய பல மெலடி பாடல்கள் ராஜா சார் இசையமைத்ததா என்று கேட்பார்கள். அஜித், விஜய்க்கு அவர் கொடுத்த ஹிட் அதிகம். ரஜினிக்கு அவர் கொடுத்த ஹிட் பாடல்களை இன்று வரை யாராலும் மிஞ்ச முடியவில்லை!” என்று கூறியிருந்தார்.
இசைக்கலைஞர்கள், இசை விமர்சகர்கள் பலரும் அவர் இசையமைத்த பல படங்கள் மற்றும் பாடல்களைப் பற்றி நீளமான பட்டியலிடுகின்றனர். அவற்றில் தேவா இசையில் அதிகம் பேசப்பட்ட 10 திரைப்படங்களின் தொகுப்பு இது:
1. ”நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்!” – பாட்ஷா
பட மூலாதாரம், IsaiEnuyir/YT
ரஜினி நடித்த பாட்ஷா படம், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த ரஜினியை இன்னும் அதிகமான உயரத்துக்குக் கொண்டு சென்ற படம். அந்தப் படத்தில் இடம் பெறும், ”நான் ஒரு தடவ சொன்னா…100 தடவை சொன்ன மாதிரி!” என்ற வசனத்துக்குப் பின்பே, ‘பஞ்ச்’ வசனங்களும் பிரபலமாகத் துவங்கின. அந்த படத்துக்கு இசையமைத்தவர் தேவா.
படத்தில் ”நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்…நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்” பாடலுடன்தான் ரஜினி என்ட்ரி கொடுப்பார். படம் வெளியான அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல் முடியும்வரை தியேட்டரே ரசிகர்களின் ஆட்டத்தால் அதகளமாக மாறும். ஆட்டத்துக்கு ஆட்டோக்காரன் என்றால், ”ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்” என்ற பாடல் ரஜினி ரசிகர்களை மிதக்கவிடும் டூயட் பாடலாக அமைந்தது.
படத்தில் 3 டூயட் பாடல்கள் இடம் பெறும். அதைத் தவிர்த்து ”ரா…ரா…ராமையா’ என்ற வைரமுத்துவின் தத்துவப் பாடலும் இடம் பெற்றிருக்கும். படத்தின் பாடல்கள் அனைத்தையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா இருவர் மட்டுமே பாடியிருந்தனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என எல்லாமே ரஜினியின் ஹீரோ அந்தஸ்தை உச்சமான உயரத்துக்கு தூக்கிப்பிடித்த நிலையில், அதற்கு எல்லா வகையிலும் ஈடு கொடுத்தது தேவா இசை.
2. ”வந்தேன்டா பால்காரன்…பசு மாட்டைப் பத்தி பாடப்போறேன்!” – அண்ணாமலை
பட மூலாதாரம், LahariMusicTamil
அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் என ரஜினி படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். அந்த படங்கள் அனைத்திலும் ஒரு ‘மாஸ் இன்ட்ரோ’ பாடல், 2 அல்லது 3 டூயட் பாடல்கள், ஒரு தத்துவப்பாடல் அல்லது சோகப்பாடல், ஒரு தன்னம்பிக்கைப் பாடல் போன்றவை இடம் பெற்றிருக்கும். பாட்ஷாவில் ஆட்டோகாரருக்கு பாட்டுப் போட்ட தேவா, அண்ணாமலையில் வைரமுத்துவின் வரிகளுடன் பசு மாட்டின் பெருமையைப் பாடும் பால்காரனாக அறிமுகப்பாடலைக் கொடுத்திருப்பார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ”ஒரு பெண் புறா” பாடலைக் கேட்ட ரஜினி, தன்னை ஒரே நாளில் 3 முறை அழைத்துப் பாராட்டியதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் தேவா. அதுபற்றிப் பேசியிருந்த அவர், ”ஏ.வி.எம்மில் பாட்டு ரெக்கார்டிங் முடிந்ததும் ரஜினி பாட்டை கேட்டார். அதன்பின்னர் வீட்டிற்கு சென்றுவிட்டு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை போன் செய்து ‘பெண் புறா’ பாட்டு குறித்து பேசினார். அந்த பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்று கூறியிருந்தார் தேவா.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருப்பார். அவருக்காகவே ”கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ…கூடையில் என்ன பூ…குஷ்பூ!” என்று தன்னுடைய இயல்பு எழுத்து நடையிலிருந்து மாறுபட்டு வைரமுத்து எழுதிய பாடலுக்கு தேவா அமைத்த இசை அந்தப் பாடலை பெரும் ஹிட் பாடலாக மாற்றியது.
படத்தில் ‘பெண் புறா’ பாடல் தவிர மற்ற எல்லாப் பாடல்களையும் எஸ்.பி.பி.–சித்ரா பாடியிருப்பார்கள். ‘பெண் புறா’ பாடலை மட்டும் கே.ஜே.ஜேசுதாசை பாடவைத்திருப்பார் தேவா. அது அவருடைய பாடலுக்கேற்ற குரல் தேர்வுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அருணாசலம் படத்திலும் அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பட்டை கிளப்பின.
3. ”காதலி காதலி…காதலில் தவிக்கிறேன்!”– அவ்வை சண்முகி
பட மூலாதாரம், APInternational
நகைச்சுவைக்காகவே கமல் எடுத்த பல படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் அவ்வை சண்முகி, பம்மல் கே.சம்பந்தம், பஞ்ச தந்திரம் ஆகிய படங்களுக்கு தனி இடமுண்டு. இந்த 3 படங்களுக்குமே தேவாதான் இசை. அவ்வை சண்முகி படத்தில் அவருடைய பின்னணி இசையும், பாடல்களும் அப்போது திரை விமர்சனங்களில் பெரிதும் பாராட்டப்பட்டன.
படத்தின் ”டைட்டில் சாங்” ஆக இடம் பெற்ற ”கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சுடி…!” பாடல், படம் எவ்வளவு வேகமாகப் போகும் என்பதற்கு ஒரு டிரைலர் போல அமைந்திருக்கும். பாடலை எஸ்.பி.பி. பாடிய விதமும், இசைக்கோர்ப்பின் இடையில் வரும் ரயிலின் ஒலியும் பாடலைக் கேட்கும்போது ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதாக இருக்கும்.
பிரிந்து சென்ற பணக்கார மனைவியின் வீட்டில் தன் குழந்தைக்கே தாதியாவதற்காக பெண் வேடமிட்டுச் செல்லும் கமல், நவராத்திரி கொலுவில் பெண் குரலில் பாடும் பாடலாக இடம் பெற்ற ”ருக்கு ருக்கு ருக்கு” பாடல் படத்தில் பார்க்கும்போது மட்டுமின்றி, வெளியில் கேட்கும்போதும் நம்மையறியாமல் ஒரு புன்னகையை வெளியே கொண்டு வரும். வாலி தன்னுடைய பாணியில், ”பூசல்கள் வந்தால் டோன்ட் பி ஆங்க்ரி…பொறுமையை காத்தால் வாழ்க்கை ஜாங்கிரி” என்று எழுதிய வரிகளுக்கு கச்சிதமாக இசையமைத்திருப்பார் தேவா.
ஆனால் படத்தின் சூப்பர் ஹிட் பாடல் ”காதலி காதலி”தான். வாலி எழுதிய ”ஓயாத தாபம்… உண்டான நேரம்…நோயானதே நெஞ்சம்…!” என்ற வரிகளை ஹரிஹரன் பெரும் காதலுடன் பாடியிருப்பார். அந்த வரிகளைத் தொடரும் சித்ராவும், ”ஊர் தூங்கினாலும்…நான் தூங்க மாட்டேன்…தீயானதே மஞ்சம்!” என்று கேட்போர் செவிகளில் காதலை உருக்கி ஊற்றியிருப்பார். இருவரும் பாடி முடித்த பின் ஒலிக்கும் ”ஓ…ஹோ’ என்ற கோரஸ், பாடலை மேலும் மெருகேற்றியது. பாடலின் ‘கம்போசிங்’கை இதழ்கள் கொண்டாடின.
4. ”ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்…சென்டி மீட்டர் சிரிக்கச் சொல்லி கேட்டேன்!”– குஷி
பட மூலாதாரம், APInternational
தேவா என்ற பெயரிலேயே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் இன்றைய முதல்வர் விஜய். அந்தப் படத்துக்கு தேவாதான் இசை. அவர் நடித்த ரசிகன், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், நெஞ்சினிலே, மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களுக்கு, தேவா இசையமைத்திருக்கிறார். அதில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் குஷி. பெயருக்கேற்பவே படம் முழுவதும் இளமைத்துள்ளலுடன் விஜய் வலம் வந்திருப்பார். அதற்கேற்ப படத்திற்கு குதூகலமான பாடல்களைக் கொடுத்திருந்தார் தேவா.
பெண்ணின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கென ஏராளமான தனிப்பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் முக்கியப் பாடலாக மாறியது ”மேகம் கருக்குது மின்னல் அடிக்குது” பாடல். நாயகி மழையில் நனையும் அந்தப் பாடல் ரசிகர்களை இசை மழையில் நனையவிட்டது. படத்தில் இடம் பெற்ற ”கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலும் பண்பலைகளின் இரவுகளை நகர்த்தும் பாடலாகும். மெலடி பாடலான ”மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்” பாடலும் விஜய் ரசிகர்களின் விருப்பத்தேர்வானது.
5. ”நலம் நலம் அறிய ஆவல்…!” – காதல் கோட்டை
பட மூலாதாரம், RJSMusic
அஜித்துக்கும் தேவாவுக்கும் இடையில் ஏதோ ஒரு விதமான ‘கெமிஸ்ட்ரி’ நன்றாக இருந்தது என்று திரைத்துறையினர் பலரும் சொல்லும் அளவுக்கு அஜித்தின் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார் தேவா. அவற்றில் காதல் கோட்டை, வாலி, ஆசை ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அஜித் அப்போது இளம் நாயகனாக வளர்ந்து கொண்டிருந்த காலம். 1990 களில் படம் நன்றாக இருந்தாலும் பாடல்களும் ஹிட் ஆனால்தான் தியேட்டரில் படம் பார்க்க எல்லாத் தரப்பு மக்களும் வருவார்கள் என்றிருந்தபோது, அஜித் படங்களுக்கு அசத்தல் பாடல்களை கொடுத்தார் தேவா. அந்த வரிசையில் காதல் கோட்டை மிக முக்கியமான படம்.
பெரிதும் பேசப்பட்ட ஒரு ‘க்ளைமாக்ஸ்’ காரணமாக அந்தப்படம் ஒரு மெகா ஹிட் அடித்தது என்றால், அந்தப் படத்தை தேவாவின் இசையும் பாடல்களும் மேலும் தூக்கி நிறுத்தின. ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட ‘சிகப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது’ பாடலுக்கு அந்த மண்ணுக்கேற்ற இசையுடன் மெட்டமைத்து பாடலை பெரிதும் ரசிக்க வைத்தார் தேவா. படத்தில் இடம் பெற்ற ”காலமெல்லாம் காதல் வாழ்க”, ”நலம் நலம் அறிய ஆவல்” ”வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ என எல்லாப் பாடல்களுமே தமிழ் ரசிகர்களை நன்கு ஈர்த்தன.
இந்த படத்துக்கு சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ்ப்படம் என 3 தேசிய விருதுகள் கிடைத்தன. ஆனால் தேவாவுக்கு இறுதிவரை தேசிய விருது கிடைக்கவேயில்லை என்பது அவருடைய ரசிகர்களின் பெரும் வருத்தம்தான்.
6. ”பதினெட்டு வயது இளம்மொட்டு மனது…ஏங்குது பாய் போட!” – சூரியன்
பட மூலாதாரம், APITamilsongs
தேவாவை நோக்கி பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் கவனத்தை திருப்பிய படம் ‘சூரியன்’ என்று சொல்லலாம். அந்த காலகட்டத்தில் அதிக பொருட்செலவில் படமெடுப்பதற்குப் பெயர் பெற்றிருந்த கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். கதையும், ஆக்கமும் விறுவிறுப்பாக இருக்கும். சரத்குமாரின் கேரியரில் இது மிக முக்கியமான படம்.
இந்த படத்துக்கு தேவா போட்டிருந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இளையராஜாவின் பாடல்களை தமிழ்த் திரையுலகமே கொண்டாடிக் கொண்டிருந்த காலத்தில், இளையராஜா பாணியிலேயே தேவா இசையமைத்தது போன்று அமைந்த இந்தப் பாடல்கள், தமிழகத்தின் கிராமத்து, நகரத்துப் பேருந்துகள், டீக்கடைகள் எல்லாவற்றிலும் பல மாதங்களுக்கு இடைவிடாது ஒலித்தன.
கந்தசஷ்டி கவசம் மெட்டில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ”பதினெட்டு வயது இளம்மொட்டு மனது” இன்று வரை எல்லாத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கிறது. அதேபோன்று ”லாலாக்கு டோல் டப்பிமா கண்ணே” பாடலை டீஜே மற்றும் நண்பர்களின் ஆடல் கூடல்களில் ஒலிக்கிற பாடலாகவுள்ளது.
7. ”அவள் வருவாளா…என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா?”–நேருக்கு நேர்
பட மூலாதாரம், APInternational/YT
விஜய், சூர்யா இணைந்து நடித்து, வசந்த் இயக்கிய ”நேருக்கு நேர்” படம், 90களின் இறுதிகளில் இளையோரை ஈர்த்த முக்கியப்படம். அந்தப் படத்துக்கு தேவாதான் இசை. அதில் விஜய்க்கும், சூர்யாவுக்கும் தனித்தனியாக டூயட் பாடல்களை தனித்துவத்துடன் அமைத்திருந்தார் தேவா. முக்கியமாக ”அவள் வருவாளா…” பாடல், இன்று வரை இளைய தலைமுறை விரும்பிக்கேட்கும் ‘எவர்க்ரீன்’ காதல் பாடலாகவுள்ளது.
இதே படத்தில் இடம் பெற்ற ”மனம் விரும்புதே உன்னை” பாடல், ஆண் குரல், பெண் குரல் என தனித்தனியாக இரு பாடல்களாக வெளியிட்டிருந்தார் தேவா. அதில் பெண் குரலில் ஹரிணியும், ஆண் குரலில் உன்னி கிருஷ்ணனும் பாடியிருந்தனர். இரு பாடல்களுமே ரசிகர்களைக் கவர்ந்து இன்று வரை பலருடைய விருப்பத்தேர்வாகவுள்ளன.
8. ”தஞ்சாவூரு மண்ணை எடுத்து…தாமிரபரணி தண்ணியை விட்டு!” –பொற்காலம்
பட மூலாதாரம், TamilCinemaWorld
சேரனுக்கு தமிழ்த்திரையுலகில் முக்கிய அடையாளத்தைத் தந்த படம் ”பொற்காலம்”. மறைந்த நடிகர் முரளி, மீனா நடித்த இந்தப் படம், மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்க வேண்டுமென்ற சமூகச் சிந்தனையை விதைக்கிற படமாக பெரும் வெற்றி பெற்றது. படத்தில் ”ஊனம் ஊனம் ஊனமிங்கே ஊனம் யாருங்க!” என்ற பாடலை கோவை கமலாவுடன் சேர்ந்து தேவா பாடியிருந்தார்.
அந்த பாடலில் இடம் பெற்ற ”உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே…உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே…!” என்று தேவா குரலை உயர்த்திப்பாடுவது அவருடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளாவே ஒலிக்கும். மற்றொரு பாடலான ”தஞ்சாவூரு மண்ணை எடுத்து தாமிரபரணி தண்ணியை விட்டு” பாடல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்ட பாடலாக மாறியது.
வைரமுத்துவின் வரிகள்தான் இந்தப் பாடலின் ஒட்டுமொத்த உருவம் என்றால், அதற்கு உயிர் கொடுத்தது தேவாவின் இசை. சாதாரண மண் பானையை வைத்துக்கொண்டே இந்தப் பாடலை ஒருவர் பாடமுடியும் என்பது போல வரிகள் தெளிவாகக் கேட்கும் வகையில் தேவா இசையமைத்திருந்தார். கிருஷ்ணராஜ் அதை உணர்ந்து பாடியிருப்பார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மரணமடைந்தபோது, அவருடைய உயிலில் எழுதியிருந்தபடி, இறுதிச்சடங்கு நடந்த அரங்கத்தில் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டு அதன் பின்பே தகனம் செய்யப்பட்டது. இதை தேவாவின் இசை நிகழ்ச்சியில் சிலாகித்துப் பேசிய ரஜினி, அந்தப் பாடல் பல்வேறு நாடுகளில் மொழி பெயர்த்து படிக்கப்பட்டதாகவும் நினைவு கூர்ந்தார்.
9. ”சலோமியா….சுண்டக்கஞ்சி சோறுடா…!”–கண்ணெதிரே தோன்றினாள்
பட மூலாதாரம், RJSMusic
தேவாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரியளவில் அடையாளம் பெற்றுத்தந்த படம் ‘வைகாசி பொறந்தாச்சு’. பிரசாந்த் நடித்த அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதன்பின் பிரசாந்த் நடித்த பல படங்களுக்கு தேவா இசையத்திருந்தார். பல படங்களின் பாடல்களும் பிரபலமாயின.
அவற்றில் முக்கியமான படம் ”கண்ணெதிரே தோன்றினாள்”. ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ”சலோமியா” ”கொத்தவால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி” ஆகிய 2 கானா பாடல்களும், அந்த படத்தைத் தேடி தியேட்டருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை இழுத்துச் சென்றன. அதேபோன்று உதித் நாராயணன் பாடிய ”ஈஸ்வரா வானும் மண்ணும் ஃபிரண்ட்ஷிப் பண்ணுது உன்னால் ஈஸ்வரா” பாடல் இன்று வரை நட்பைக் கொண்டாடுவோரின் விருப்பப்பாடலாகவுள்ளது.
”கனவே கலையாதே, ”, ”சந்தா ஓ சந்தா”, ”சின்ன சின்ன கிளியே” என எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆகி, படத்தின் வெற்றிக்கும் பெரிதும் கைகொடுத்தன.
10. ”ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச!”– என் ஆசை மச்சான்
பட மூலாதாரம், Pyramid/YT
மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். அவற்றில் மிக முக்கியமான வெற்றிப்படம் ”என் ஆசை மச்சான்”. இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் இடம் பெற்ற பல பாடல்கள், விஜயகாந்த் ரசிகர்களால் இப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல்களாக உள்ளன. முக்கியமாக ”ஆடியில சேதி சொல்லி” பாடல், பண்பலைகளின் ‘ரெட் ரோ’ நாட்களில் இடைவிடாது இடம் பெறுகிறது.
இதே படத்தில் இடம் பெற்ற ”கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்”, ”ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்” ஆகிய பாடல்கள், விஜயகாந்த் ரசிகர்களுக்காகவே எழுதி இசையமைக்கப்பட்ட பாடல்களைப் போலிருக்கும். அவருடைய பிறந்தநாள், நினைவு நாள்களில் இந்தப் பாடல்களை பண்பலைகளின் கேட்கின்ற ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
தேவா பாடலும் பிரபுதேவா ஆடலும்: ஓர் இணையற்ற இணை!
அஜித் இசையமைப்பாளராக நடித்த முகவரி படமும் தேவாவுக்கு முக்கியமான படமாக இருந்தது. யாரிடமுமே உதவியாளராகப் பணியாற்றாமல் நேரடியாக இயக்குநராக படமெடுத்த தனக்கு தேவாவின் இசை பெரிதும் கை கொடுத்ததாக இயக்குநர் வி.இசட்.துரை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இப்படத்தின் ”ஓ நெஞ்சே நெஞ்சே ரா…ரா…” பாடலில், ”நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய் சங்கீத ராஜாங்கத்தின் கிரீடம் கொள்வாய் கிரீடம் கொள்வாய்” என்று வைரமுத்து எழுதிய வரிகள், பல்வேறு போராட்டங்களைத் தாண்டி தேவா பிரபல இசையமைப்பாளராக மாறிய கதையையும் நினைவூட்டுவதாக இருக்கும்.
1996 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 37 படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார். அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான 8 படங்கள் தன்னுடைய இசையில் வெளியானதைக் குறிப்பிட்டுப் பேசிய தேவா, தன்னுடைய உழைப்பில் ஓய்வைப் பற்றிக் கவலை கொண்டதேயில்லை என்று கூறியிருந்தார்.
பிரபுதேவாவின் ”இந்து”, ”நினைவிருக்கும் வரை”, ”ஏழையின் சிரிப்பில்” ஆகிய பாடல்களில் இடம் பெற்ற ”ஹே குட்டி முன்னால…!”, ”போர்த்திக்கினு படுத்துக்கவா, படுத்துக்கினு போர்த்திக்கவா”, ”யப்பா யப்பா ஐயப்பா” போன்ற கானா பாடல்களும் அந்தப் பாடல்களும் பிரபுதேவாவின் நடனங்களும் இரண்டு தலைமுறையாக ரசிகர்களை ஆட வைத்துக் கொண்டிருக்கின்றன.
அதேபோல பல மெலடி பாடல்களும் அவர் இசையமைத்தது என்று தெரியாமலே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, ”தாய்மனசு” படத்தில் இடம் பெற்ற ”தூதுவளை இலை அரைச்சு” பாடலை, ஒரு பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் சிறுமி ஒருவர் பாடிய பின்பு மீண்டும் பிரபலமாகி, அப்போதுதான் அது தேவா இசையமைத்த படம் என்பதே பலருக்கும் தெரியவந்தது.