7
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது தலையை மொட்டை அடித்துள்ளதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் முற்றிலும் போலியானது என ‘உண்மைகள் சரிபார்ப்பு தளம்’ நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகை நயன்தாரா மொட்டை அடித்துள்ளதைப் போன்ற புகைப்படமொன்று பதிவேற்றப்பட்டு, பலராலும் வைரலாகப் பகிரப்பட்டு வந்தது.
இத் தகவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தன.
திருப்பதிக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து, அவர் மொட்டை அடித்தது போல் போலி புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
அண்மையில் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ (Hi) திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக வழங்கிய தொலைக்காட்சி நேர்காணல்களில் அவர் வழக்கமான தலைமுடியுடன் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.
எனவே, நடிகை நயன்தாரா திருப்பதி சென்ற போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக எடிட் செய்தே இத் தகவலைப் பரப்பியுள்ளனர் என்பதும், அவர் மொட்டை அடிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
