• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

நாளை 4 படங்கள் ரிலீஸ்..!- திரையரங்குகளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!

Byadmin

Aug 27, 2026


நாளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரையரங்கு விருந்து காத்திருக்கிறது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாய்’, ‘ஒன்ஸ் மோர்’, ‘கராத்தே பாபு’ மற்றும் ‘அமரம்’ ஆகிய நான்கு முக்கியத் திரைப்படங்கள் நாளை ஒரே நாளில் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகின்றன.

ஆக்ஷன், காதல், காமெடி மற்றும் த்ரில்லர் என அனைத்து வகையான கதைகளும் இதில் அடங்கியுள்ளதால் பாக்ஸ் ஆபீஸில் பலத்த போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாய்! – கவின் & நயன்தாரா

இளமைத் துள்ளல் மற்றும் ஃபீல்-குட் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ஹாய். அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக நடித்துள்ளனர்.

ஒரு நடுத்தர வர்க்க இளைஞனுக்கும், அவனது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறான ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டது இக்கதை.

ஜென் மார்ட்டின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கத் தயாராகியுள்ளது.

ஒன்ஸ் மோர் – அர்ஜுன் தாஸ் & அதிதி சங்கர்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்‘.

வழக்கமான தனது தீவிரமான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி, அர்ஜுன் தாஸ் இதில் காதல் நாயகனாக களம் இறங்குகிறார். அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். காதலில் ஏற்படும் ஏமாற்றம், மனக்காயங்கள் மற்றும் வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது காதல் வாய்ப்பு ஆகியவற்றை உணர்வுபூர்வமான பாணியில் இத்திரைப்படம் விவரிக்கிறது.

ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் டிரெண்டாகி படத்தின் மீதான ஆர்வமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.

கராத்தே பாபு – ரவி மோகன் & தவ்தி ஜிவால்

ரசிகர்களின் அதிரடி ஆக்ஷன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நாளை வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘கராத்தே பாபு‘.

‘டாடா’ பட புகழ் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், ரவி மோகன் மற்றும் தவ்தி ஜிவால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் சதிவலைகள், பழிவாங்குதல் மற்றும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் நகர்கிறது.

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது மிரட்டலான பின்னணி இசையை வழங்கியுள்ளார். மாஸ் ஆக்ஷன் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு செம ட்ரீட்டாக அமையும்.

அமரம் – தேஜேஷ் ராஜன் & இரா அகர்வால்

இயக்குநர் திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில், தேஜேஷ் ராஜன் மற்றும் இரா அகர்வால் இணையாக நடித்துள்ள ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படமாக நாளை வெளியாக இருக்கிறதுஅமரம். சாய்தீனா மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர்.

அழகான காதலுக்குள் நுழையும் எதிர்பாராத ஆபத்துகளும், அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்ற விறுவிறுப்பான திரைக்கதையோடும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மிக்கி மேயரின் இசை இப்படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் விரும்பிகளுக்கு இப்படம் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்பு

ஒரே நாளில் இந்த நான்கு திரைப்படங்களும் மோதுவதால், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்குப் பெரிய அளவில் கூட்டங்கள் வரும் என திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த வார இறுதி பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் எந்தத் திரைப்படம் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

By admin