கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய சென்னை சுப்பர் கிங்ஸ், செவ்வாய்க்கிழமை தனது 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டி அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
கடந்த போட்டியில் சதம் குவித்த சஞ்சு செம்சன் இந்தப் போட்டியில் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட அயூஷ் மஹாத்ரே 38 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரெவிஸ் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சர்பராஸ் கான் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷிவம் டுபே 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெரும் தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முன்வரிசை வீரர்கள் மூவர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற போதிலும் அவர்களால் அந்த எண்ணிக்கையை கணிசமானதாக்க முடியாமல் போனது.
சுனில் நரேன் (24), அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (28), அங்ரிஷ் ரகுவன்ஷி (27) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
எனினும் மத்திய வரிசையில் ராமன்தீப் சிங், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் பொறுமை கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையைக் கொடுத்தனர்.
ராமன்தீப் சிங் 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ரொவ்மன் பவல் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் நூர் அஹ்மத் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்ஷுல் கம்போஜ் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: நூர் அஹ்மத்
The post நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன் கொல்கத்தாவை 32 ஓட்டங்களால் வென்றது சென்னை appeared first on Vanakkam London.