8
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. பெரும்பான்மை அமைக்க 118 இடங்கள் அவசியமான நிலையில், தவெக இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால், மாநிலத்தில் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும் வகையில் தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் (விசிக), மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தால், தவெக எளிதில் ஆட்சி அமைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. இந்தக் கட்சிகளும் அதற்கான சாதகமான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடன் தவெக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி அரசுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்களுடன் நேரடி ஆலோசனை நடத்தும் வகையில் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றடைந்துள்ளார். அங்கு செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அனைத்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு, ஆட்சி அமைப்பதற்கான அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக்குப் பின்னர், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் மற்றும் அடுத்த அரசியல் நடவடிக்கைகள் குறித்து விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் பரப்பில் அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்மானமானதாக அமையும் சூழல் உருவாகியுள்ளது.