தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
வரும் மே 10 ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை காலாவதியாவதால், அதற்குள் பெரும்பான்மையை பெற வேண்டும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில கட்சிகள் தவெக உடன் கூட்டணி ஆட்சியில் பங்கேற்கத் தயாராக இருப்பதால், விஜய் பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளது என பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அக்கட்சிகள் அதை உறுதிப்படுத்தவில்லை.
ஆட்சி அமைக்கத் தேவையான 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாதபட்சத்தில், முதல்வராக விஜய் பொறுப்பேற்று, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற வாய்ப்பும் இருப்பதாக சட்டநிபுணர்கள் கூறுகின்றனர். சபாநாயகராக ஒருவரை தற்காலிகமாக நியமிப்பதால் ஒரு வாக்கை இழப்பதைத் தவிர்க்க, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்தல் அலுவலராக வைத்தும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் அரசியல் சாசனம் வழி வகுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆட்சி அமைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?
தமிழக தேர்தலில் 234 தொகுதிகளில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு வேண்டுமென்ற நிலையில், 10 இடங்கள் அதற்குக் குறைவாகவுள்ளன.
இதிலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், ஒரே நபர் இரு வாக்குகள் பதிவு செய்ய முடியாது.
அத்துடன் சபாநாயகராக தேர்வு செய்யப்படும் நபரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இயலாது. இரு கட்சிகள் சமநிலை பெற்றால் மட்டும் சபாநாயகரின் ஒரு வாக்கு பயன்படுத்தப்படும்.
அதனால் தற்போதுள்ள நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் சவால்கள் என்ன? ஒரு கட்சி ஆட்சி அமைப்பதற்கு அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகள் என்ன?
வரும் மே 10-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகச் சொல்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தவெக வழக்கறிஞர் அணியிலும் நிர்வாகியாக இருக்கிறார்.
பட மூலாதாரம், @TVKPartyHQ/X
பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய கிருஷ்ணமூர்த்தி, ”தமிழக சட்டப்பேரவை, வரும் மே 10 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. அதற்குள் புதிய ஆட்சியை அமைத்தாக வேண்டும். அதற்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் தவெக வழங்கவேண்டும்.” என்கிறார்
பெரும்பான்மையை பெற மிகக்குறுகிய காலமே இருப்பதால் மற்றொரு வாய்ப்பை தவெக பயன்படுத்தலாம் என்று கூறிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மே 10 ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக விஜய் மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டு, 15 நாட்கள் அவகாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என்றார்.
பட மூலாதாரம், @TVKPartyHQ/X
ஆதரவு கிடைக்குமா?
இவை தவிர்த்து மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதையும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நாளில், அதில் பங்கேற்க வேண்டாமென்று அதிமுக கூட்டணி முடிவு எடுத்தால், சபைக்கு வருவோரின் எண்ணிக்கையில் பெரும்பான்மை நிரூபித்தால் போதுமென்ற நிலை ஏற்படும் என்கின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் எந்தத் தேவையும் இல்லாமல், 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் – 5, விசிக–2, கம்யூ கட்சிகள்–4, தேமுதிக–1 என 12 எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் கூறுகிறார்.
அதே சமயம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர பாமக, அமமுக போன்ற கட்சிகளும் விஜய் உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் கூறுகிறார்.
திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் விஜய் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறார் சிவப்பிரியன்.
படக்குறிப்பு, பத்திரிக்கையாளர் குபேந்திரன்
”விஜய் ஏற்கெனவே கூட்டணி ஆட்சி என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு அதிகமுள்ளது. பிரேமலதாவும் ஆதரவு தெரிவிப்பார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கவே வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.” என்றார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
மேலும் தொடர்ந்த அவர், ”பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நிலைக்கு முன்பாகவே, முறைப்படி ஆதரவுக் கடிதம் கொடுத்து, விஜய் ஆட்சி அமைத்துவிடுவார். இது அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான துவக்கமாகவும் இருக்கலாம்.” என்றார்.
ஆனால் தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்புக்காக தவெகவை காங்கிரஸ் ஆதரிக்கும் பட்சத்தில், மத்தியில் பாஜகவுக்கு எதிராக நிற்கும் திமுகவின் நட்பை காங்கிரஸ் நிரந்தரமாக இழக்க நேரிடும் என்கிறார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி.
அதன் காரணமாக அந்த முடிவை காங்கிரஸ் அவ்வளவு எளிதாக எடுக்கவும் வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து ராகுல் முடிவெடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், ”நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம். விஜயிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதுபோல எந்தவிதமான திட்டமும் எங்களுக்கு இல்லை.” என்றார்.
இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மற்றும் தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் சுதீஷ் ஆகியோர் இன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் திமுக அலுவலகத்திற்கு வரவில்லை.
”நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம். விஜயை நான் என்றுமே ‘எங்கள் வீட்டு பையன்’ என சொல்லி இருக்கிறேன். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்” என விருத்தாசலத்தில் வெற்றி பெற்ற தேமுதிகவைச் சேர்ந்த பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறினார்.
தொங்கு சட்டசபைக்கு கண்கூடான உதாரணம் கர்நாடகம்!
இந்தியாவில் அதிகளவில் தொங்கு சட்டசபையை சந்தித்த மாநிலம், அண்டை மாநிலமான கர்நாடகம்தான். அங்கு பல்வேறு தேர்தல்களில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி ஆட்சியமைக்க 113 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்.
ஆனால் பல தேர்தல்களில் அங்கு வெவ்வேறு கட்சிகள் ஒரே அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதால் தனித்து ஆட்சியமைக்க யாரையும் ஆளுநர் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக 2004 ஆம் ஆண்டில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும் ஜனதா தளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றன. தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டது.
அதன்பின் காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 123 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையைக் காண்பித்து. கர்நாடகாவில் ஆட்சி அமைத்தன. ஆனால் இரு ஆண்டுகளுக்குள் அந்த உடன்பாட்டில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் பாஜக ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்தது. அந்த ஆட்சியும் ஓராண்டுக்குப்பின் கவிழ்ந்தது.