பட மூலாதாரம், youtube.com/@ParastooAhmadii
-
- எழுதியவர், டேவிட் கிரிட்டன், கொன்சே ஹபிபியாசாத்
- பதவி, பிபிசி பாரசீக சேவை
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய பிரபல இரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கும், அவரது இசைக்குழு மற்றும் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கும் இரான் அதிகாரிகள் சவுக்கடிகள் வழங்கியுள்ளதாக அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பரஸ்தூ அஹ்மதி, மூன்று இசைக் கலைஞர்கள் மற்றும் ஒரு தயாரிப்பாளர் ஆகியோருக்கு கோம் நகரில் தலா 74 சவுக்கடிகள் வழங்கப்பட்டதாக அவர்களது வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
29 வயதான அஹ்மதி, 2024 டிசம்பரில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இசை நிகழ்ச்சியில் கையற்ற உடை அணிந்து பாடியிருந்தார். இரானில் பெண்கள் பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஹிஜாப் அணிவதுடன், உடல் அமைப்பு வெளியே தெரியாத வகையில் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அந்நாட்டுச் சட்டங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
இந்த ஆண்டு ஜூன் மாதம், ‘பொது ஒழுக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டது’, ‘ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களை’ வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அஹ்மதிக்கும் மேலும் எட்டு பேருக்கும் கோம் நகர குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்திருந்தனர்.
74 சவுக்கடிகள் வழங்கப்பட்டதுடன், ஒலி-ஒளி ஊடகத் துறையில் செயல்படுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
செப்டம்பர் மாத இறுதியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோம் நகர மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்ததாக அஹ்மதியின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தண்டனைகளுக்கு இரானைச் சேர்ந்த கலைஞர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் பரவலாகக் கண்டனம் தெரிவித்தனர்.
சவுக்கடி என்பது கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் தண்டனை என்றும், சித்திரவதைக்கு எதிரான சர்வதேசத் தடையை மீறும் செயல் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

திங்களன்று, அஹ்மதிக்கும் அவருடன் குற்றம்சாட்டப்பட்ட நான்கு ஆண்களுக்கும் கோம் நகரில் உள்ள தண்டனை நிறைவேற்றும் அலுவலகத்தின் மூன்றாவது பிரிவில் சவுக்கடிகள் வழங்கப்பட்டதாக அவர்களது வழக்கறிஞர்களில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“தீர்ப்பை ரத்துசெய்யவோ, குறைந்தபட்சம் தண்டனையைக் குறைக்கவோ அல்லது அதை நிறுத்திவைக்கவோ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். ஆனால், எங்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
“தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைக்குமாறு மற்ற வழக்கறிஞர்களும் நானும் முயற்சி செய்தோம். ஆனால், தண்டனை நிறைவேற்றும் பிரிவு அதை உடனடியாகச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தது,” என்றும் அவர் தெரிவித்தார்.
சீர்திருத்தங்களை ஆதரிக்கும் நாளிதழான ‘எத்தெமாத்’, அஹ்மதியுடன் சவுக்கடி தண்டனை பெற்ற நான்கு ஆண்களின் பெயர்களை சோஹெயில் ஃபகிஹ்-நசிரி, அமின் தஹேரி, அமிராலி பிர்னியா, மொஹ்சென் லஷ்கரி என்று மற்றொரு வழக்கறிஞரான முஸ்தஃபா நிலி தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
“தனது விருப்பப்படி உடையணிந்து பாடியதற்காகப் பரஸ்தூ அஹ்மதிக்கு சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டிருப்பது அவரது அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்கவும், தங்களது பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை எதிர்ப்பவர்களை வன்முறையாகத் தண்டிக்கவும் இரான் அதிகாரிகள் உறுதியாக இருப்பதை இது அச்சமூட்டும் வகையில் வெளிப்படுத்துகிறது” என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இரானுக்கான மனித உரிமைகள் மையத்தின் உரிமைகள் சார்ந்த செயல்பாட்டுப் பிரிவின் இயக்குநர் பஹார் கந்தேஹரி தெரிவித்தார்.
இரானின் ஷரியா சட்ட விளக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ள அந்நாட்டுச் சட்டத்தின்படி, பருவமடைந்த பெண்களும் சிறுமிகளும் ஹிஜாப் அணிந்து தலைமுடியை மறைக்க வேண்டும். உடல் அமைப்பு வெளியே தெரியாத வகையில் நீளமான, தளர்வான ஆடைகளையும் அணிய வேண்டும்.
2022-ஆம் ஆண்டு, 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி காவல்துறைக் காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 2022 செப்டம்பரில், முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் தெஹ்ரானில் ஒழுக்கக் காவல்துறையினரால் அமினி கைது செய்யப்பட்டார்.
மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற அந்தப் போராட்டங்களின்போது, பெண்கள் தங்களது ஹிஜாப்களை எரித்தனர் அல்லது காற்றில் வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகு, பல பெண்களும் சிறுமிகளும் பொது இடங்களில் தலைமுடியை மறைக்காமல், ஆடை கட்டுப்பாட்டு விதிகளை வெளிப்படையாக மீறி வருகின்றனர். இதற்குப் பதிலடியாக, அதிகாரிகள் அவ்வப்போது கைது நடவடிக்கைகள், எச்சரிக்கைகள், வணிக நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டின் பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டு, ஆட்சிக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. அவற்றைப் பாதுகாப்புப் படையினர் ஒடுக்கியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி மாத இறுதியில் இரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து, போராட்டக்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை இரான் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நார்வேயைத் தளமாகக் கொண்ட ‘இரான் மனித உரிமைகள்’ அமைப்பின் தகவலின்படி, ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாகக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட குறைந்தது 39 ஆண்களுக்கும், 2022-ஆம் ஆண்டு போராட்டங்கள் தொடர்பாகத் தண்டிக்கப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட எதிர்க்கட்சிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும், உளவு பார்த்ததாக அல்லது வெளிநாடுகளுடன் ஒத்துழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட மேலும் 17 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனவரி மாத போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட மேலும் 121 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் ஆறு பெண்களும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் 18 வயதுக்குக் குறைவாக இருந்த ஐந்து பேரும் அடங்குவர். அவர்கள் எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு