• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

பலாலி காணி விடுவிப்புப் போராட்டம் | ஐவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Byadmin

Oct 26, 2026


பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி ஐந்து பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பலாலி பொலிஸார் வழக்கு தொடர்பான சில வாக்குமூலங்களையும் சான்றுகளையும் மன்றில் சமர்ப்பித்திருந்தனர். எனினும், சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதவான், வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகரின் ஏற்பாட்டில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடங்கியுள்ள மக்களின் சொந்தக் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

இப்போராட்டத்தின் போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகத் தெரிவித்து, பலாலி பொலிஸாரால் ஆகஸ்ட் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ‘MA/MC/PC/07381/26-B’ என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

பலாலி பகுதியில் மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரித் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்நடவடிக்கை தொடர்பிலான அடுத்தகட்ட வழக்கு விசாரணை டிசம்பர் 17ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin