1
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலை மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருகிறதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”சட்டரீதியாகக் குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்காது, சமூக ஊடகப் பரப்பினூடாக அவமதிப்பை உருவாக்கும் பிம்பங்களைக் கட்டமைத்து, சமூக ஊடகப் பதிவர்களே நீதிபதிகளாக உருவாகும் துரதிர்ஷ்டவசமான நிலை தமிழ்ச்சமூகத்தின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு மாறானதும் எதிரானதுமாகும்.
நிதானமானதுமான ஊடகப் பொறுப்பு
இது, தமிழ்ச் சமூகத்தின் பொறுப்புமிக்கதும் நிதானமானதுமான ஊடகப் பொறுப்புணர்வைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், சமூக ஊடகங்களில் நிதானம் தவறிக் கருத்திடுபவர்களின் பின்னால் செல்லும் பரிதாபநிலையை எமது சமூகம் அடையும் ஆபத்தும் அதிகரித்துவருகின்றது.


வெறுமனே மானுட உணர்வுகளைக் கிளறிக் குளிர்காய முற்படும் இந்தத் தீயசக்திகளை பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடையாளங் கண்டுள்ளதுடன், அதுபற்றிய தெளிவுகளை சமூகத்தின்முன் கொண்டுசெல்லும் முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியான ஆதரவைத் தருவார்கள்.
அதேவேளை, சமூக ஊடகங்கள்வழியான அவமதிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தினதும் நீதியின்பாலானதுமான முன்னெடுப்புக்களால் தம்மீதான அவதூறுகளைக் களைய முற்படும் ஆளுமைகளுக்கு மாணவர் சமூகத்தின் ஆதரவு என்றுமுண்டு என்பதையும் ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றோம்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று (09.07.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பதையும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுடன் முன்னெடுக்கப்படுவவை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டிகாட்டுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.