4
பாரதிராஜா உழுத மண்ணில் பாக்கியராஜ் தன் திரைக்கதையால் செழுமை சேர்த்தார்…
— — —
* பாரதிராஜா – பாக்கியராஜ் கூட்டிணைப்பு ஓர் காவியம்..
* குரு – சிஷ்யன் உறவு முறைமைக்கு இலக்கணம்…
* தமிழ்த்தேசியத்தில் பாரதிராஜா அர்ப்பணிப்பு மிக்கவர் – பாக்கியராஜ் மிதவாத கொள்கையுடன் இருந்தார்.
— — —-
எந்தத் துறையாக இருந்தாலும், அத்துறையில் குருவாக இருப்பவர் தன்னிடம் பயிலும் தனது மாணவனுக்கு, அதாவது தனது சீடனுக்குச் சரியான உபாயங்களைக் கற்றுக் கொடுக்கும் நேர்மையான பண்பைக் கொண்டிருக்க வேண்டும்.
தனது சீடன் மேல்நோக்கி வருவதைக் கண்டு பொறாமை கொள்ளாமல் பெருமைப்பட வேண்டும்.
அதற்கான இலக்கணமாகத் திகழ்ந்தவர் இயக்குநர் பாரதிராஜா.
பாரதிராஜா மரணமடைந்து 17 நாட்களில் இயக்குநர் பாக்கியராஜ் மரணமடைந்த செய்தி, இவ்வாறு எழுதத் தூண்டுகிறது…
திரையுலகில் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டிய இந்த இரு மேதைகளும், உலகில் குரு – சிஷ்யன் உறவுக்கு முதன்மை உதாரணமாக விளங்குகிறார்கள்.
இவர்களின் பிணைப்பும் சாதனைகளும் தமிழ் சினிமா உலகுக்கு மாத்திரமல்லாமல், கல்வி உலகுக்கும் பண்பாட்டுத் தளத்துக்கும் ஒரு காவியத்தைப் படைத்துச் சென்றிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் பாரதிராஜா உழுத மண்ணில் பாக்கியராஜ் தன் திரைக்கதையால் செழுமை சேர்த்தார்.
தமிழர் நலன் சார்ந்த பொதுவெளியில் பாரதிராஜா ஒரு தீவிர தமிழ் தேசியப் போராளியாகவும், பாக்கியராஜ் ஒரு மிதவாத சமூக சிந்தனையாளராகவும் பயணித்தனர்.
தமிழ் சினிமா உலகில் பாரதிராஜா – பாக்கியராஜ் என்ற கூட்டிணைப்பு ஒரு மறக்க முடியாத அத்தியாயம். இந்த இருவரின் உறவு குரு – சிஷ்யன் என்ற உறவுக்கு சிறந்த இலக்கணப் பாடப் புத்தகமாகும்.
1977 இல், பாரதிராஜாவின் முதல் திரைப்படமான 16 வயதினிலே மூலம் பாக்யராஜ் உதவி இயக்குநராக சினிமா உலகில் அறிமுகமானார்.
கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் பாரதிராஜாவிடம் தொடர்ந்து பணியாற்றினார்.
பாக்கியராஜிடம் இருந்த தனித்துவமான கதை எழுதும் திறமையை பாரதிராஜா ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டார்.
1979 இல் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் பாக்கியராஜை வசனம் எழுத வைத்தார். அத்துடன் அவரை கதாநாயகனாகவும் பாரதிராஜா அறிமுகப்படுத்தினார்.
பாக்கியராஜ் இயக்கிய ”தாவணி கனவுகள்” திரைப்படத்தில் பாரதிராஜா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அவராகவே நடித்திருந்தார்.
பாக்கியராஜ் எழுதிய அழுத்தமான கதையான ஒரு ”கைதியின் டையரி” திரைப்படத்தை பாரதிராஜா இயக்கிப் பெரும் வெற்றி பெறச் செய்தார்.
பாரதிராஜா தமிழ் சினிமாவை ஒலிப்பதிவுக் கூடத்தில் (Studio) இருந்து கிராமத்து மண்ணிற்கு அழைத்துச் சென்றார்.
பாக்கியராஜ் அந்த முறைமையை (System) உள்வாங்கி, நடுத்தர மக்களின் உணர்வுகளையும், நகைச்சுவை கலந்த திரைக்கதை உத்திகளையும் புகுத்தி “திரைக்கதை மன்னனாக” உயர்ந்தார்.
பாரதிராஜா சினிமா எல்லையைக் கடந்து ஒரு சமூக அரசியல் போராளியாக தன்னை வெளிப்படுத்தினார்.
தமிழ், தமிழர் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வாதார அடிப்படைப் பிரச்சினைகளில் எப்பொழுதும் முன்னணியில் நின்று குரல் கொடுத்திருந்தார்…
காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்ற தமிழகத்தின் வாழ்வாதாரப் போராட்டங்களில் திரையுலக நட்சத்திரங்களை ஒன்று திரட்டிப் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.
“தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை” என்ற அமைப்பைத் தொடங்கி தமிழர் உணர்வுகளைப் பிரதிபலித்தார்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே தீவிரமான ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
இலங்கையின் வடக்கு கிழக்கு ஈழப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியத் தலைமைக்கும் பகிரங்கமாகத் தன் ஆதரவை வழங்கினார்.
அதேநேரம், பாக்கியராஜ், மிதவாத – சமரச அணுகுமுறையைக் கையாண்டார்.
ஈழத்தமிழர் விவகாரங்களில் பாரதிராஜாவைப் போல தீவிரமான களப் போராட்டங்களில் ஈடுபடாமல், மிகவும் மிதவாத நிலைப்பாடுகளையே பாக்கியராஜ் முன்னெடுத்திருந்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அமரர், எம்.ஜி.ஆரின் தீவிரமான கொள்கை வாரிசாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பாக்கியராஜ்.
‘எம்.ஜி.ஆர் மக்கள் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிப் பின்னர் கலைத்தார்.
திராவிட அரசியல் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வியல் சிந்தனைகளே இவருடைய அரசியலாக இருந்தது.
ஈழத் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் இவருடைய ஆதரவு, கலை மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் ஊடாக அமைந்ததே தவிர, அவை தீவிர அரசியல் உரைகளாக இருந்ததில்லை.
மாற்று அரசியல் கருத்துக்களைப் பேசிப் பின்னர் அதனை நியாயப்படுத்தும் போக்கையும் கொண்டிருந்தார் பாக்கியராஜ்.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-