பிகார் மாநிலத்தின் ஜமுயி மாவட்டத்தில், மைனர் மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதும், அவருடன் இருந்த மற்றொரு மைனர் மாணவர் தாக்கப்பட்டதும் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து சந்தேகத்தின் பேரில் மூன்று மைனர் சிறுவர்கள் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்துப் பேசிய பிகார் காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு ஏடிஜி கே. சுஹிதா அனுபம், “அந்த மைனர் பெண் தனது நண்பருடன் புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் அந்தப் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டு வம்பு செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் மூன்று மைனர் சிறுவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களைத் தவிர இன்னும் இரண்டு நபர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுஹிதா அனுபம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திய ஜமுயி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜீத் தயாள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை 7 மணியளவில் எடுக்கப்பட்டது என்றும், அந்த நேரத்தில் அந்த மாணவனும் மாணவியும் பயிற்சி வகுப்பிற்கு சென்றிருந்தனர் என்றும் ஜமுயி எஸ்பி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தச் சம்பவத்தின் வீடியோவை மக்கள் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று ஜமுயி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரேயசி சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “பிகாரின் ஜமுயியில் இருந்து வந்துள்ள வீடியோ மிகவும் கவலையளிக்கிறது” என்று எழுதியுள்ளார்.
மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும் பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோதியே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஜமுயி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைச்சருமான ஸ்ரேயசி சிங் ஊடகங்களிடம் பேசுகையில், “மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைத்து நபர்களும் மிக விரைவில் பிடிபடுவார்கள். இதுபோன்ற விவகாரங்களில் மாநில அரசு சமரசமற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான எந்தவொரு புகைப்படம், காணொளி அல்லது பிற உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்” என்று மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, பிகாரின் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் லாலு பிரசாத் யாதவின் ஆட்சிக்காலத்தை ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, வைரலான வீடியோவை உறுதிப்படுத்திய ஜமுயி மாவட்ட எஸ்பி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வைரலான வீடியோவில், மைனர் மாணவனும் மாணவியும் ஒரு ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கிறார்கள், இளைஞர்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
இந்த நேரத்தில், அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார். அதே நேரத்தில், அந்த மாணவர் இளைஞர்கள் கூட்டத்திடமிருந்து மாணவியைக் காப்பாற்ற முயல்கிறார்.
இந்த வைரல் வீடியோ குறித்து ஜமுயி மாவட்ட எஸ்பி விஸ்வஜீத் தயாள் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “ஒரு வீடியோ எங்களது கவனத்திற்கு வந்தது, அதில் இரண்டு மைனர் மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளப்படுகிறது. வீடியோவின் அடிப்படையிலேயே நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டோம், அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து செப்டம்பர் 19ஆம் தேதியன்று அந்த மாணவனும் மாணவியும் பயிற்சி வகுப்புக்கு சென்றுகொண்டிருந்தபோது மாலை சுமார் ஏழு மணியளவில் இந்த சம்பவம் நடந்தது என்பது தெரியவந்துள்ளது.”
“அந்த நேரத்தில் அவர்கள் அந்தப் பகுதியில் ஃபோட்டோஷூட் செய்யச் சென்றிருந்தபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது ஜமுயி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.”
“வைரலான வீடியோவின் காட்சிகளில் ஆறு – ஏழு பேர் தெரிகிறார்கள். விசாரணையின் மூலமே குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.”
ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் எழுதியுள்ள ராகுல் காந்தி, வீடியோவில் காணப்படும் ஒவ்வொரு நபரும் அடையாளம் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து அரசியல் ரீதியான எதிர்வினைகளும் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “பிகாரின் ஜமுயியில் இருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோ மிகவும் கவலையளிக்கிறது. 10-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் வழியில் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறுமி கைகளைக் கூப்பித் தன்னை போக விடுமாறு கெஞ்சுகிறார், ஆனாலும் அவர்கள் அவரைத் தவறான முறையில் தொட்டு இழுக்கிறார்கள்” என்று எழுதியுள்ளார்.
“இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட அநாகரீகமான செயலைச் செய்ய யார் உரிமை கொடுத்தது? இது ‘கலாசாரம்’ அல்ல, இது ஆணாதிக்க மனநிலை.” என குறிப்பிட்டுள்ளார்.
”மாலை ஏழு மணிக்கு ஒரு பெண் மாநிலத்தின் சாலைகளில் ஏன் பாதுகாப்பாக இல்லை என்பதற்குப் பிகார் அரசு பதிலளிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநில அமைச்சரும் ஜமுயி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஸ்ரேயசி சிங் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களிடம் பேசுகையில், “ஜமுயியில் நடந்துள்ள இத்தகைய சம்பவம் சமூகத்தையே தலைகுனிய வைக்கும் ஒரு சம்பவமாகும். இது 19-ஆம் தேதி மாலை நடந்தது. மேலும் இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை” என்று கூறினார்.
“சமூக ஊடகங்களில் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கவனத்தில் கொண்டு நிர்வாகம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், தற்போது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் டவர் லொகேஷனைக் கொண்டு அவர்களைப் பிடித்துக் கைது செய்யுமாறு ஜமுயி நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அரசாங்கம் இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது, மேலும் முதலமைச்சர் எந்த சமரசமும் அற்ற கொள்கையைக் கடைப்பிடித்துள்ளார்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தேஜஸ்வி யாதவ் எக்ஸ் தளத்தில், “பிகாரில் அராஜகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பிகாரில் இப்போது எங்கும், எப்போதும் எந்தவொரு மாணவியோ அல்லது பெண்ணோ பாதுகாப்பாக இல்லை. ரவுடிகளும் குற்றவாளிகளும் இப்போது பட்டப்பகலில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து குற்றங்களைச் செய்து வருகின்றனர்” என்று எழுதியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜமுயி மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரிவான தகவல்களைப் பெற்றுள்ளதாக பிகார் மாநில மகளிர் ஆணையத் தலைவர் அப்சரா மிஸ்ரா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவம் லக்கிசராய் மற்றும் ஜமுயி எல்லைப் பகுதியில் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அவர் தகவல் அளிப்பார், மேலும் இது தொடர்பாக நான் எஸ்பி-க்கும் கடிதம் எழுதுவேன் மற்றும் மின்னஞ்சல் அனுப்புவேன்” என்று அவர் கூறினார்.