சமூக ஊடகங்கள் இளம் வயதினரிடையே, “குறைபாடற்ற சருமம்” மற்றும் “கிளாஸ் ஸ்கின்” போன்ற சருமப் பராமரிப்பு போக்குகளை ஊக்குவித்து வருகின்றன. பல இளைஞர்கள், தோல் நிபுணர்களின் ஆலோசனையை விடவும், “Get Ready With Me” (GRWM) போன்ற வீடியோக்களில் வரும் இன்ஃப்ளூயன்சர்களின் ஆலோசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
ஆனால், இளம் வயதினருக்கு உண்மையிலேயே பல கட்டங்களைக் கொண்ட சருமப் பராமரிப்பு நடைமுறை தேவையா?
தோல் மருத்துவரான ஜோனதன் கென்ட்லியின் கருத்துப்படி, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் மிகுந்த கவலைக்குரிய தாக்கம் என்பது “யதார்த்தத்துக்கு புறம்பான அழகுத் தரங்களை கொண்ட படங்களை தொடர்ந்து காட்டுவதாகும்”
“ஆயிரக்கணக்கான நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ‘கிளாஸ் ஸ்கின்’ கொண்ட ஒருவரைக்கூட பார்த்ததில்லை. உண்மையில் அப்படி ஒன்று இருப்பதாகவே நான் நினைக்கவில்லை. அதிகமாக ஃபில்டர் செய்யப்பட்ட படங்களே, இதை அடைய முடியும் என்று குழந்தைகளை நம்ப வைக்கின்றன. ஆனால் அது உண்மையல்ல,” என்று அவர் கூறுகிறார்.
தோலில் தெரியும் துளைகள், கரும்புள்ளிகள், பருக்கள், நிறமாற்றம், சிவத்தல் மற்றும் தழும்புகள் ஆகியவை இளம் வயதினரின் சருமத்தில் மிகவும் இயல்பானவை என்று டாக்டர் கென்ட்லி கூறுகிறார். அதே நேரத்தில், ஒவ்வொருவரின் ‘இயல்பான’ சருமமும் வேறுபட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“உண்மையில், முற்றிலும் அசாதாரணமானது என்று சொல்லக்கூடிய எதுவும் இல்லை,” என்கிறார் அவர்.
மற்றொரு தோல் நோய் நிபுணரான டாக்டர் சைனப் லஃப்தா, பருவமடையும் வயதில் ஏற்படும் பெரும்பாலான சருமப் பிரச்னைகள் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனுடன் தொடர்புடையவை என்கிறார். இந்த ஹார்மோன், சருமத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிப்பதுடன், பருக்கள் உருவாகவும் காரணமாகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஏன் ஏற்படுகிறது?
ஆண்களுக்கு இந்தப் பிரச்னைகள் சற்று அதிகமாக இருக்கக்கூடும். ஆனால் பெண்களிடமும் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் இருப்பதால், அவர்களும் இதேபோன்ற பல அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
”தோலில் அதிகரிக்கும் எண்ணெய் உற்பத்தி, மயிர்க்கால்கள் அடைபடுதல் மற்றும் அழற்சி ஆகியவை ஒன்றிணைந்து கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மற்றும் சிவந்து வீங்கிய பருக்கள் உருவாக வழிவகுக்கிறது,” என்று டாக்டர் லஃப்தா கூறுகிறார்.
“பருக்கள் மிகவும் பொதுவானவை. அது இயல்பானது; அதே நேரத்தில் சிகிச்சை அளிக்கக்கூடியதும் ஆகும்.”
சருமத்தில் சுரக்கும் எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் சேர்ந்து உருவாகும் அடைப்புகளை அகற்ற உதவும் சாலிசிலிக் அமிலம் எண்ணெய் அதிகம் சுரக்கும் அல்லது பருக்கள் ஏற்படக்கூடிய இளம் வயதினரின் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம் என்று டாக்டர் லஃப்தா கூறுகிறார்.
ஆனால், தேவையில்லாமல் அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், சரும வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
உங்களுக்கு கடுமையான பரு பிரச்னை அல்லது தீவிரமான சருமப் பிரச்னை இருந்தால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஆலோசனை தேடுவதற்குப் பதிலாக, குடும்ப மருத்துவர் அல்லது தோல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும் என்று டாக்டர் கென்ட்லி அறிவுறுத்துகிறார்.
பட மூலாதாரம், Getty Images
5 முக்கிய டிப்ஸ்
இளம் வயதினரின் சருமத்தை எவ்வாறு பராமரிப்பது? என்பது குறித்து தோல் மருத்துவர்களான டாக்டர் சைனப் லஃப்தா மற்றும் டாக்டர் ஜோனதன் கென்ட்லி ஆகியோர் வழங்கும் ஐந்து முக்கிய ஆலோசனைகள்:
1. சருமப் பராமரிப்பு முறையை எளிமையாக வைத்திருங்கள்
மூன்று அடிப்படைப் பொருட்கள் இருந்தாலே போதும்: மென்மையான முக சுத்திகரிப்பு க்ளென்சர், வாசனையற்ற மாய்ஸ்சரைசர் (moisturiser), மற்றும் SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்பு கொண்ட சன்ஸ்கிரீன். இதற்கு மேல் அவசியமில்லை.
2. அதிகமான சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது சிறந்தது என்று அர்த்தமல்ல
அடிக்கடி எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது அல்லது வலுவான அமிலங்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது இளம் வயதினரின் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். சருமத்தின் பாதுகாப்பு அடுக்கு இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதால், அது பாதிக்கப்படலாம்.
இளம் வயதினரிடம் ‘பெரியோரல் டெர்மடைட்டிஸ்’ எனப்படும் சருமப் பிரச்னை அதிகரித்து வருவதை தான் கவனித்திருப்பதாக டாக்டர் கென்ட்லி கூறுகிறார். எக்ஸ்ஃபோலியேட்டிங் ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் ரெட்டினாய்டுகள் போன்ற சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை பாதிக்கும் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதுடன் இது தொடர்புடையது என்றும் அவர் கூறுகிறார்.
“இளம் வயதினர், பல்வேறு சீரம்கள், டோனர்கள், மாஸ்குகள் மற்றும் செயல்படும் மூலப்பொருட்கள் அடங்கிய பெரியவர்களுக்கான சருமப் பராமரிப்பு முறைகளை அதிகமாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இவை சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை பாதித்து, மேலும் பல சருமப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்,” என்று டாக்டர் லஃப்தா கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
3. போதுமான தூக்கமும் சீரான உணவுமுறைமும் முக்கியம்
வெள்ளை கார்போஹைட்ரேட் உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை பருக்கள் அதிகரிப்பதுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“தூக்கமின்மை, மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இது பருக்கள் உருவாக வழிவகுக்கலாம் என்பதை நாம் அறிவோம்,” என்று டாக்டர் லஃப்தா கூறுகிறார்.
அதேபோல், வெள்ளை அரிசி, பாஸ்தா போன்ற அதிக கார்போஹைட்ரேட் உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் புரத பானங்களில் காணப்படும் வே (Whey) புரதம் ஆகியவையும் பருக்கள் தீவிரமடைவதுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுவதாக டாக்டர் கென்ட்லி தெரிவிக்கிறார்.
ஆனால், ஒவ்வொருவரின் சருமமும் வேறுபட்டது என்பதால், சிலருக்கு வேறு காரணிகளும் பருக்களைத் தூண்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
4. பருக்களை கிள்ளவோ உடைக்கவோ வேண்டாம்
பருக்களை அழுத்தி உடைக்கும்போது, அதில் உள்ளவை சருமத்தின் ஆழமான பகுதிக்குள் தள்ளப்படலாம். இதனால் அழற்சி அதிகரித்து, தழும்புகள் மற்றும் நிறமாற்றம் ஏற்படக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள ‘பிம்பிள் ஹைட்ரோகொலாய்டு ஸ்டார் பேட்ச்’ பயன்பாட்டை தான் ஆதரிப்பதாக டாக்டர் லஃப்தா கூறுகிறார்.
“இவை மேலோட்டமான பருக்களில் உள்ள திரவத்தை உறிஞ்சுவதுடன், பருக்களை கிள்ளுவதைத் தடுக்க ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகின்றன,” என்று அவர் விளக்குகிறார்.
5. குடும்ப மருத்துவர் அல்லது தோல் மருத்துவரை அணுகுங்கள்
வலி தரக்கூடிய, நீண்டகாலமாக நீடிக்கும் கட்டி போன்ற பருக்கள் அல்லது தழும்புகளை ஏற்படுத்தும் பருக்கள் இருந்தால், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஏனெனில், இத்தகைய பிரச்னைகளுக்கு பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரையுடன் வழங்கப்படும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
ஆண்களின் சருமத்தைப் பற்றி என்ன?
இளமைப் பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல, ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களுடன் தொடர்புடையவை. இந்த ஹார்மோன் பெண்களிடமும் உள்ளது என்றாலும், ஆண்களிடம் இதன் அளவு அதிகமாக இருக்கும்.
“இதனால், ஆண்களின் சருமம் சில நேரங்களில் சற்று அதிக எண்ணெய்ப்பசையுடன் இருக்கலாம். மேலும், பருக்கள் அதிகமாக இருக்கக்கூடும். அதோடு, முகத்தில் முடி வளர்வது மற்றும் ஷேவிங் செய்வது குறித்தும் அவர்கள் பழகத் தொடங்குவார்கள். இதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம்,” என்று டாக்டர் கென்ட்லி விளக்குகிறார்.
“சரியாக ஷேவ் செய்யாவிட்டால், ‘ஃபாலிகுலைட்டிஸ்’ எனப்படும் மயிர்க்கால்களில் ஏற்படும் அழற்சி உருவாகலாம். இது பருக்களுடன் ஓரளவு ஒத்த தன்மை கொண்டது. இதனால் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கு கணிசமாகப் பாதிக்கப்படுவதுடன், அதிக அழற்சியும் ஏற்படலாம்.”
சருமத்தைப் பாதுகாக்க ஷேவிங் செய்யும்போது பின்பற்ற வேண்டிய டாக்டர் கென்ட்லியின் முக்கிய ஆலோசனைகள்.
குளித்த பிறகு ஷேவ் செய்யுங்கள்: அப்போது சருமம் சூடாகவும், நீராவியால் மென்மையாகவும் இருப்பதால் ஷேவிங் செய்வதற்கு தயாராக இருக்கும்.
ஷேவிங் பிரஷைப் பயன்படுத்துங்கள்: இது சருமத்தில் ஒட்டியிருக்கும் முடிகளை மேலே தூக்க உதவும்.
உராய்வைக் குறைக்கும் பொருளைப் பயன்படுத்துங்கள்: ஷேவிங் ஃபோம் அல்லது ஷவர் ஜெல் போன்றவற்றைப் பயன்படுத்தி ஷேவ் செய்யுங்கள்.
முடி வளரும் திசையிலேயே ஷேவ் செய்யுங்கள்: முடி வளரும் திசைக்கு எதிர்த் திசையில் ஷேவ் செய்வதைத் தவிர்க்கவும்.