4
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
குறித்த விவகாரங்களில் அதிருப்தியடைந்துள்ள மாணவர்கள் கடந்த பல நாட்களாகத் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, பல்வேறு ஆர்ப்பாட்டக் குழுக்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் வாரம் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள பின்னணியிலேயே, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரண்டாவது வாரயிறுதியாகத் தொடர்ந்த இந்த ஆர்ப்பாட்டங்களின் போது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக 1,300 இக்கும் அதிகமானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மக்ரோன் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் தீவிரம் சற்றுத் தணிந்திருந்ததுடன், போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையும் 25 வீதத்தால் குறைந்து சுமார் 400,000 ஆகப் பதிவாகியிருந்தது. அத்துடன் முன்னெடுக்கப்பட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்ட சம்பவங்கள் 98 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 24ஆகக் குறைந்திருந்தது.
இம்முறை பெருமளவிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.