• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

பிரான்ஸில் 3 இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல்: கையிருப்பு இரத்தம் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு

Byadmin

Nov 5, 2026


பிரான்ஸில் இயங்கி வரும் மூன்று பிரதான இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இரத்த வங்கிகளில் உள்ள குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறைகளைக் கண்காணிக்கும் மற்றும் அவற்றின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் இலத்திரனியல் கட்டமைப்புகளையே இந்த சைபர் தாக்குதல் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலினால் சேமிப்பில் வைக்கப்பட்டிருந்த இரத்த இருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரெஞ்சு இரத்த நிறுவனத்தின் (EFS) ஊடகப் பேச்சாளர் சார்லி டுபாய்ஸ், இரத்தம் எந்த நேரத்திலும் அவசியப்படலாம் என்பதால் தமது பணியாளர்கள் நாளாந்தம் 24 மணி நேரமும் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பான எச்சரிக்கை கிடைக்கப்பெற்ற உடனேயே, சேமிக்கப்பட்டிருந்த இரத்தத் தொகையினை இணையத் தொடர்பற்ற ஏனைய பாதுகாப்பான குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பணியாளர்கள் உடனடியாக மாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மைய நாட்களில் ஸ்வீடன் முதல் பெல்ஜியம் வரையிலான ஐரோப்பிய நாடுகளில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளின் கட்டமைப்புக்கள் மீதும் ஹேக்கர்கள் இவ்வாறான சைபர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin