பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்தியாவின் முன்னணி குடிநீர் நிறுவனங்களில் ஒன்றான பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான தகவலை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான எக்ஸ்-இல் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது.
முதல்கட்ட ஆய்வில், அந்த நீர் மாதிரியில் புரோமேட் (Bromate) அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்தபோதிலும், அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து அந்த மாதிரி பரிந்துரைக்கப்பட்ட உணவு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வில், பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (Polynuclear Aromatic Hydrocarbons – PAHs) இருப்பது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், அந்த குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள், உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006-இன் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுவதாக FSSAI தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், ANI
‘எங்கள் குடிநீர் பாதுகாப்பானது’ என பிஸ்லேரி நிறுவனம் விளக்கம்
இதற்கிடையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. தங்களது குடிநீர் பாதுகாப்பானது என்றும், தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை நிறுவனம் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் உறுதியளித்துள்ளது.
எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த நிறுவனம், இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முந்தையது என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 143 ஆலைகளை இயக்கும் பிஸ்லெரி நிறுவனத்தின் தகவலின்படி, கோவாவில் உள்ள அதன் ஆலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று, FSSAI இந்த ஆலையிலிருந்து ஆறு குடிநீர் மாதிரிகளைச் சேகரித்தது. ஆரம்பகட்ட பரிசோதனையில், ஆறு மாதிரிகளில் ஐந்து மாதிரிகள் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கும் உட்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
ஆறாவது மாதிரியில், புரோமேட் அளவு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம்களாக இருந்தது; இது அனுமதிக்கப்பட்ட வரம்பான லிட்டருக்கு 10 மைக்ரோகிராம்களை விட அதிகமாகும்.
இந்த முடிவுகளுக்கு எதிராக, 2025-ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனைத் தொடர்ந்து, அந்த மாதிரியை மறுபரிசோதனைக்காக FSSAI ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது.
பட மூலாதாரம், Firdous Nazir/NurPhoto via Getty Images
பிஸ்லெரி நிறுவனத்தின் விளக்கத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குடிநீர் மாதிரியில் புரோமேட் (Bromate) அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில், அந்த மாதிரியில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பதாகவும் ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு பரிசோதனை முடிவுகளுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டதால், அதே குடிநீர் மாதிரியை FSSAI அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது ஆய்வகத்தின் பரிசோதனையிலும், குடிநீர் மாதிரியில் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பிஸ்லெரி குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான தனது விசாரணை அறிக்கையை கடந்த 2026 பிப்ரவரி 2-ஆம் தேதி FSSAI-இன் மேற்கு மண்டல அலுவலகத்தில் சமர்ப்பித்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Bisleri/X
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தரப்பிலிருந்து இதுதொடர்பாக எந்தப் பதிலும் கிடைக்காததால், இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தாங்கள் கருதியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும், FSSAI-யின் இணையதளத்திலும் அத்தகைய அறிவிப்பு இடம்பெறவில்லை என்றும் பிஸ்லெரி குறிப்பிட்டுள்ளது.
தண்ணீரின் தரம் மற்றும் பாதுகாப்புக்கே நிறுவனம் முதன்மையான முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன் உற்பத்தி செயல்முறையின் 10 கட்டங்களில், 90-க்கும் மேற்பட்ட தர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
மேலும், ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பாக FSSAI-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், பிஸ்லெரி குடிநீர் நுகர்வுக்குப் பாதுகாப்பானது என்றும் நிறுவனம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு