பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாகப் பல்வேறு முக்கிய முடிவுகளைதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எடுத்துள்ளது. இதன்படி, ஓய்வுபெறும் தொழிலாளர்கள் தங்களது பி.எஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் ஒரே தவணையாகப் பெறுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, இ.பி.எஃப்.ஓ-வின் மத்திய அறங்காவலர் குழு, ‘முறையான பணம் திரும்பப் பெறும் திட்டம்’ ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பி.எஃப் கணக்கில் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவும் 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பி.எஃப் கணக்கிலிருந்து இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான தகுதி கால அவகாசம் 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தலைமையில், நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இ.பி.எஃப்.ஓ-வின் மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பி.எஃப் சந்தாதாரர்களுக்குக் கூடுதல் நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன், ஓய்வுக்குப் பிறகு தங்களது சேமிப்புத் தொகையைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுக்குப் பிறகு பி.எஃப் நிதியைத் தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி
புதிய முறையான பணத்தை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தை, தங்களுக்கு வசதியான முறையில் மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை எனத் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வசதி விருப்பத்திற்கு உட்பட்டது; கணக்கு வைத்திருப்பவர்கள் மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளலாமா அல்லது தவணைகளாகப் பெற்றுக்கொள்ளலாமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். கணக்கில் மீதமுள்ள தொகை தொடர்ந்து பிஎஃப் கணக்கிலேயே முதலீடு செய்யப்பட்டிருக்கும், அதன் மீது நடைமுறையில் உள்ள விகிதப்படி வட்டியும் கிடைக்கும்.
பட மூலாதாரம், Getty Images
முதற்கட்டமாக, 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், தங்களது பி.எஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான இருப்புத் தொகை வைத்திருப்பவர்கள் என சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தவணை முறையில் பணம் பெற்று வரும் உறுப்பினர் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரர் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கணக்கில் எஞ்சியுள்ள முழுத் தொகையையும் ஒரே தவணையாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தங்களது விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து தவணை முறையில் பணத்தைப் பெறுவதற்கும் அனுமதி வழங்கப்படும்.
தொழிலாளர் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பதற்கான நிபந்தனையில் தளர்வு
வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறும்போது, குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தொழிலாளர்கள் தங்களது பி.எஃப் கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையை இருப்பாக வைத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது இந்த வரம்பு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், தொழிலாளர்கள் தங்களுக்குப் பணத்தேவை ஏற்படும் சமயங்களில் பி.எஃப் கணக்கிலிருந்து அதிக தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அதேவேளையில், கணக்கில் குறைந்தபட்சம் 10 சதவீதத் தொகையை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடர்ந்து அமலில் இருக்கும்.
வேலையிழந்தவர்கள் தங்களது பி.எஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தையும் 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, வேலையை இழந்தவர்கள் பி.எஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் பெறுவதற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது இந்தக் கால அவகாசம் இரண்டு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்தவர்கள் தங்களது பி.எஃப் சேமிப்புத் தொகையை விரைவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பிஎஃப் முதலீடுகள் தொடர்பாக முக்கிய முடிவு
பிஎஃப் முதலீடுகள் தொடர்பாகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதிதாக முதலீடு செய்யப்படும் நிதியில் அதிகபட்சம் 3 சதவீதம் வரை தகுதியான மாற்று முதலீட்டு நிதிகளில் முதலீடு செய்வதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்த முதலீடுகள் அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளன. இ.பி.எஃப்.ஓ-வின் முதலீட்டுத் தொகுப்பை பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளுக்கு விரிவுபடுத்தி, முதலீடுகளைப் பன்முகப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இ.பி.எஃப்.ஓ என்றால் என்ன?
இ.பி.எஃப்.ஓ என்பது தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் பொருளாதாரப் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உதவும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இது தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952-ன் கீழ் உருவாக்கப்பட்டது.
இ.பி.எஃப்.ஓ முக்கியமாக இரண்டு திட்டங்களை நிர்வகிக்கிறது.
1. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்)
இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் பணிபுரியும் காலத்தில் தங்களது சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமிக்கிறார்கள். அதேபோல், அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பங்களிக்கிறது.
இவ்வாறு தொழிலாளர் மற்றும் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் செலுத்தும் பங்களிப்புகள் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகின்றன. இந்தத் தொகைக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட விகிதத்தில் வட்டியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், தொழிலாளர்கள் ஓய்வுபெறும்போதோ அல்லது விதிகளின்படி பணத்தைத் திரும்பப் பெறும்போதோ கணிசமான தொகையைப் பெற முடியும்.
2. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (இ.பி.எஸ்)
இ.பி.எஃப்.ஓ நிர்வகிக்கும் மற்றொரு முக்கியமான திட்டம் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டமாகும் .
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய தொழிலாளர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்து ஓய்வுபெற்ற பிறகு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், இ.பி.எஃப்.ஓ என்பது தொழிலாளர்கள் தங்களது பணிக்காலத்தில் சேமிப்பை உருவாக்கவும், ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் மூலம் பொருளாதாரப் பாதுகாப்பைப் பெறவும் உதவும் ஒரு முக்கியமான அமைப்பாகும்.
பட மூலாதாரம், Getty Images
தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பிறகும் அவர்களுக்கு மாதந்தோறும் வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 1995-ஆம் ஆண்டு ‘தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை’ (இ.பி.எஸ்) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்துக்கான பங்களிப்புகள் எவ்வாறு கணக்கிடப்பட்டு ஒதுக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
ஒவ்வொரு மாதமும் ஊழியரும் அவர் பணிபுரியும் நிறுவனமும், ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் மொத்தத் தொகையில் தலா 12 சதவீதத்தை வருங்கால வைப்பு நிதிக்குப் பங்களிக்கின்றனர்.
இதில், ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதத் தொகையும் முழுமையாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதேவேளையில், நிறுவனம் செலுத்தும் 12 சதவீதப் பங்களிப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் 3.67 சதவீதம் இ.பி.எஃப் கணக்கிலும், மீதமுள்ள 8.33 சதவீதம் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டமான இ.பி.எஸ்-க்கும் ஒதுக்கப்படுகிறது.
எனவே, ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை முழுவதும் இ.பி.எஃப் கணக்கிற்குச் செல்கிறது. இ.பி.எஸ் திட்டத்திற்கான பங்களிப்பு நிறுவனத்தின் பங்கில் இருந்தே ஒதுக்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு