ஆங்கிலக் கால்வாயை சிறிய படகு மூலம் கடந்து இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை நகரான கோஸ்போர்ட் பகுதியை அடைந்த புலம்பெயர்ந்தோரை தரையிறக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து கால்வாயில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது பிரான்ஸ் நாட்டு கப்பல் ஒன்றின் ஒத்துழைப்புடன் இங்கிலாந்தின் உயிர்காப்பு படகுச் சேவையினால் (RNLI) 149 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கோஸ்போர்ட்டில் உள்ள படகுத் தளத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்களைத் தரையிறக்க விடாது தடுத்து நிறுத்த சுமார் 150 பேரடங்கிய குழுவினர் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த அமைதியின்மையின் போது எச்சரிக்கை பட்டாசுகள் கொளுத்தப்பட்டதுடன், பொலிஸாருடன் சிறிய அளவிலான மோதல்களும் இடம்பெற்றன.
கோஸ்போர்ட்டின் ஹஸ்லார் வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும், சில ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸ் வான்களுக்கு முன்பாக நின்று அவர்களை நகரவிடாமல் தடுத்து, நாடு கடத்துமாறு கோஷங்களை எழுப்பினர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை விதித்த ஹாம்ப்ஷயர் பொலிஸார், முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதற்கும் தடை விதித்தனர்.
மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் பின்னர் பஸ்கள் மூலம் கென்ட் பகுதியிலுள்ள பரிசீலனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தெற்கு கடற்கரையின் மேற்குப் பிராந்தியத்தில் இவ்வளவு பெருமளவிலான புலம்பெயர்ந்தோர் தரையிறக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த மாதம் போர்ட்ஸ்மவுத்தின் ஈஸ்ட்னி பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் தரையிறங்கியபோதும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் பதிவாகியிருந்தன.
The post புலம்பெயர்ந்தோர் வருகையால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் appeared first on Vanakkam London.