3
கொழும்பு சுகததாச அரங்கில் வெள்ளிக்கிழமை (4) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் கொட்டாஞ்சேனை றினோன் கழகத்தை எதிர்த்தாடிய புளூ ஈக்ள்ஸ் கழகம் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத வெற்றியை ஈட்டியது.

இதன் மூலம் ஏழாவது வாரம் வரை தோல்வி அடையாமல் இருந்த றினோன் கழகம் இந்த சுற்றுப் போட்டியில் முதல் தடவையாக தோல்வியைத் தழுவியது.
இந்த கால்பந்தாட்டப் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் றினோன் கழகம் தனது முதல் நிலை வீரர்களுக்கு போட்டியின் முதலாவது பகுதியில் ஓய்வு வழங்கியிருந்தது.
குறிப்பாக அணித் தலைவர் மொஹமத் ரிஸ்னி, பரீக் அஹமத், மொஹமத் முஜீப் ஆகியோர் முதலாவது பகுதியில் விளையாடதது றினோன் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்ததுடன் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

இடைவேளைக்குப் பின்னர் வழமையான வீரர்களை றினோன் களம் இறக்கிய போதிலும் அதனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தப் போட்டியில் புளூ ஈக்ள்ஸ் கழக வீரர்களின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதில் றினோன் கழக வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
எவ்வாறாயினும் அனுபவசாலியான பின்கள வீரர் கமீல் ஹக்கீம், இளம் பின்கள வீரர் நதீம் அஹமத், முன்கள வீரர் கிறிஸ்டியன் அஞ்சே ஆகிய மூவரும் மிகத் திறமையாக விளையாடினர்.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் வெளிநாட்டு வீரர் டோக்கு பீலிக்ஸ் உதைத்த பந்து கோல் குறுக்கு கம்பத்தில் பட்டு வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து மேலும் சில வாய்ப்புகளை புளூ ஈக்ள்ஸ் தவறவிட்டது.
போட்டியின் 39ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் வீரர் பிராஸ் ஸஹீர் இடதுபுறத்திலிருந்து உயர்வாக பறிமாறிய பந்தை கணேசன் சதீஸ் தலையால் முட்டி முதலாவது கோலை போட்டார்.
அடுத்த நிமிடம் றீனோன் கழக பின்களத்தில் ஏற்பட்ட தவறை நன்கு பயன்படுத்திக்கொண்ட கவிந்து நெத்சார தனது அணியின் இரண்டாவது கோலை போட்டார்.
இடைவேளைக்குப் பின்னர் றினோன் கழகம் தனது வழமையான 3 வீரர்களை மாற்று வீரர்களாக களம் இறக்கி கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது.
ஆனால், புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் பின்கள வீரர்கள் மிகத் திறமையாக தடுத்தாடும் உத்தியைக் கையாண்டு எதிரணியின் முயற்சிகளை முறியடித்தனர்.
இந்தப் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் முரட்டுத்தனமாக விளையாடியதால் புளூ ஈக்ள்ஸ் கழக வீரர்கள் நால்வருக்கும் றினோன் கழக வீரர்கள் இருவருக்கும் மத்தியஸ்தர் இந்துனில் சந்தகெலும் மஞ்சள் அட்டைகளைக் காட்டி எச்சரித்தார்.
இந்தப் போட்டி முடிவை அடுத்து புளூ ஈக்ள்ஸ் கழகம் 10 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்தில் இருக்கிறது.